சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த பல ஆண்டுகால நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என கூறியிருந்தது. ஆனால், இந்த தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற இளம்வயது பெண்கள் தடுக்கப்பட்டனர். இதனால் கேரளாவில் பெரும் பதற்றமே நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த ஆண்டு சபரிமலையில் பணியாற்றும் போலீசார் பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்து அறிக்கையை கேரள காவல்துறை வெளியிட்டது. அதில், 28-09-2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து, கேரள காவல்துறை ஏடிஜிபி அஜித்குமார், அந்த பகுதி நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். மேலும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா அரசும் தேவசம் நிர்வாகமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறிய தேவஸ்தான அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், இது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுகட்டும் என விளக்கமளித்துள்ளார்.
எனவே பழைய நடைமுறைப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆறு பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் குமார் சர்மா, இது தொடர்பான மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் “வழக்கு விசாரணையின்போது மத்திய அரசை பிரதிவாதியாக சேர்க்கவில்லை. மத்திய அரசின் கருத்தையும் கேட்கவில்லை. பேரறிவாளன் வழக்கு விவகாரம், விடுதலை செய்யப்பட்ட 6 பேருக்கும் பொருந்தாது. எனவே, கடந்த 11-ம் தேதி வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று மத்திய அரசு கோரியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க இங்கிலாந்து ஆதரவு
ஐ.நா. பாதுகாப்பு சபை சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஐ.நா.பாதுகாப்பு சபை சீராய்வு தொடர்பான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வார்ட் கூறுகையில், ‘இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அந்த நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐநா பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்து மாற்றம் கொண்டுவர வேண்டும்’ என்று உட்வார்ட் கூறினார்.
காசி தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாதமான கார்த்திகை முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியை நாளை (நவ. 19) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். இதில், இசையமைப்பாளர் இளையராஜாவின் தமிழிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. சுமார் 3 மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இளையராஜா குழுவினரின் இசையை ரசிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.