ஜெகநாத் நடராஜன்
டேவிட் கிரானால் எழுதப்பட்ட ‘The Lost City of Z’ நூலுக்குப் பயண நூல்களில் சிறப்பிடம் உண்டு. ஏனெனில், இது துப்பறியும் நாவல் போல எழுதப்பட்ட ஒரு பயண அனுபவ நூல்.
டேவிட் கிரான், 1967-இல் அமெரிக்காவில் பிறந்தவர். கனெக்டிகட் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றவர். தாமஸ் ஜே. வாட்சன் நிதியுதவி திட்டத்தின் கீழ் மெக்ஸிகோவில பயணம் செய்தவர். அம்மக்களின் வாழ்வு நிலை பற்றி எழுதியவர். அதன் பின் ‘The Hill’ என்ற வாசிங்டனில் இருந்து வரும் பத்திரிகையில் சேர்ந்தார். தொடர்ந்து ‘The New Yorker’ பத்திரிகை நிருபர் குழுவில் அங்கம் வகித்தார். பத்துக்கும் மேற்பட்ட கட்டுரை தொகுப்புகளும் இப்புத்தகம் உட்பட்ட எட்டு புதினங்களும் வெளியாகியிருக்கின்றன. Thomas J. Watson Fellowship (1989), Michael Kelly Award, Finalist (2005), George Polk Awards (2009), Samuel Johnson Prize, Shortlist (2009) National Magazine Awards, Finalist (2010) உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர்.
டேவிட் கிரான் எழுதிய புத்தகங்களில் பிரபலமானது ‘The Lost City of Z’.
‘மனிதனைவிட, மனிதக் கண்டுபிடிப்புகளை விட, இயற்கை வலுவானது. இன்னும் எண்ணற்ற ரகசியங்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கையோடு சரணடைந்துதான் மனிதக்குலம் தழைக்க முடியும் இயற்கையை அழிப்பது மனிதக் குலத்தினை அழிப்பதாகும்’ என்ற கூற்றை மெய்ப்பிக்கும் பல்வேறு உலக நிகழ்வுகள் உள்ளன. அதில் அமேசான் காடும் ஒன்று.
8, 235, 430 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் படுகையில் 1200 ஆண்டுகளாக மனித இனம் வாழ்வதாகவும்; இங்கு 10 ஆயிரம் வகை தாவரங்கள், 2 லட்சம் வகை பூச்சிகள், 1000 வகை பறவைகள் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. அமேசான் ஆற்றைச் சுற்றி 17 பெரிய ஆறுகளும் 100 சிறிய ஆறுகளும் ஓடுகின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலப்பரப்பும் மனித இனமும்கூட அங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. பிரேசில், பெரு, கொலம்பியா, ஈக்வடார், ஃபிரெஞ்கயானா, பொலிவியா, சுரினாம் ஆகிய நாடுகள் அந்தப் பகுதியில் இருக்கின்றன. பிரேசிலின் 60 சதவிகிதம் அங்குதான் இருக்கிறது. தினமும் மழை பொழியும் இடம் அது.
அத்தகைய அமேசான் காடுகளில் 1998-ஆம் ஆண்டு ஒரு கோடை காலம். மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழைநீர் மரங்களில் விழுந்து, இலைகளில் உதிர்ந்து, நதிகளில் பயணித்து கொண்டிருக்கிறது. அங்கு நீரைத்தவிர எதுவும் அசையவில்லை. ஈரத்தில் குழைந்த மண்ணுக்குள் மலைப் பாம்புகள் புதைந்து முகத்தை வெளியே காட்டிக் கொண்டிருக்கின்றன. முப்பது அடிக்கும் மேலாக ஆழமுள்ள ஆறு புரண்டு திமிறிக் கொண்டிருக்கிறது. கருமை சூழ்ந்திருக்கிறது. மழை விட்டு, வெய்யில் முளைத்து, வெளிச்சம் வருவதற்காக அந்த அணி காத்துக் கொண்டிருக்கிறது.
பிரேசிலிய மலையேற்ற வீரர்களும் விஞ்ஞானிகளும் படகு செலுத்துபவர்களும் வழிகாட்டிகளும் கொண்ட அந்த அணி நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்களோடு அந்த காட்டிற்குள் செல்லக் காத்திருக்கிறார்கள். அவர்கள் லெப்டினன்ட் கர்னல் பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் என்பவர் எந்த வழியில் சென்றிருப்பார்? அவர் உயிரோடு இருப்பாரா? அவருக்கு என்ன ஆயிற்று? அவர் புதிதாக என்ன கண்டுபிடித்தார்? ஏன் அவரிடமிருந்து தொடர்புகள் இல்லை? என்று அறியக் காத்திருக்கிறார்கள்.
புகழ் பெற்ற மலையேற்ற வீரரும் சுற்றுலாப் பயணியுமான பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் அமேசான் காடுகளின் உட்பகுதியில் வாழும் மனித இனத்தை அறியப் பயணம் செய்தார். ‘City of Z’ என்று அவரால் பெயரிடப்பட்ட தொலைந்து போன நகரத்தை கண்டுபிடிக்க தன் 19 வயது மகனோடு அமேசான் காடுகளுக்குள் பயணம் செய்தார். காணாமல் போனார். அவரைக் கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன. பயணிகள், ராணுவம், விஞ்ஞானிகள், மானுட ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலரும் முயன்றும் பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் காணாமல் போன இடத்தையோ வழித்தடத்தையோ நெருங்க முடியவில்லை.
அப்படிச் சென்ற பலர் பட்டினியால் செத்துப் போனார்கள். சிலர் ஆதிவாசிகளின் கொடூர விஷம் தடவிய அம்புகளால் துளைக்கப்பட்டார்கள். சிலரைப் பாம்புகள் குதறிக் கொன்றன. பலரை நோய் கொண்டு போயிற்று. காலம் காலமாக மனிதர்கள் செல்ல பயப்படும் அந்த இடம் பச்சை நரகம் என்று அழைக்கப்பட்டு வந்தது.
கடைசியாக இந்த நகரத்தையும் பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் பற்றிய தகவலையும் கண்டறிய ஜேம்ஸ் லிஞ்ச் என்ற பிரேசிலிய மலையேற்ற வீரர் பயணப்பட விரும்பினார். அப்போது நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு புனைவுதான் இந்த நாவல்.
அப்போது ஜேம்ஸ் லிஞ்சிற்கு நாற்பது வயது. பல்வேறு மலைப் பிரயாணங்களை மேற்கொண்டவர் அவர். தொடர்ந்து எழுபத்து இரண்டு மணி நேரம் தூக்கமற்று அவரால் பயணிக்க முடியும். கயிறுகளைப் பிடித்துப் பிடித்து முறுக்கேறிய கரங்கள் அவருடையவை.
தான் மேற்கொள்ளவிருக்கும் பயணம் அவ்வளவு எளிதானதல்ல என்பதால் ஜேம்ஸ் லின்சி, காணாமல் போன பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் பற்றியும், அவர் சென்ற வழித்தடங்கள் பற்றியும், மேலும் மேலும் அறிய விரும்புகிறார். புத்தக சாலையில் மாதக் கணக்காக அமர்ந்து அமேசான் காடுகளைப் பற்றி தகவல்களைத் திரட்டுகிறார். பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் பற்றியும் பல தகவல்களைத் திரட்டுகிறார். அந்த மனிதனைப் பற்றிய பிரமிப்பு அவருக்குள் கிளர்ந்து பரவுகிறது.
பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் இருபதாம் நூற்றாண்டின் முதல் தலைமுறை மலையேற்ற வீரர், பயணி, மானுடவியலாளர், சமூக ஆர்வலர்; எப்படி மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளுக்குள் தன் பயணத்தை அவர் மேற்கொண்டார் என்பது பற்றி அறிய அறிய ஒரு புதினம் போல அது விரிந்து அறியாத வாழ்வைச் சொல்லிக்கொண்டே போனது. நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பு வகைகளை உண்டு, கானகத்தில் அவர் வருடக்கணக்காக வாழ்ந்திருக்கிறார். தன்னைப் போல இன்னொரு மனிதனைக் கண்டிராத மனிதர்களைக் காண, தான் வாழும் உலகம்போலல்லாது புதிய உலகினைக் காண அவர் பயணப் பட்டிருக்கிறார்.
புதிய உலகைக் காண பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட்டுக்கு இருந்த வெறியும் ஆர்வமும் ஜேம்ஸ் லிஞ்சிக்குள்ளும் அப்படியே படிகிறது. நிறைய ஐரோப்பியர்கள் அந்த இடத்தில் பொன்னும் பொருளும் குவித்து மூடப்பட்டிருந்ததாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். 1541-இல் பிரியர் காஸ்பர் கார்வஜல் என்பவர் புராணக் கதைகளில் கண்ட கிரேக்க வீரர்கள் போன்ற மனிதர்களை அமேசான் காடுகளில் கண்டதாக தன் பயணக் குறிப்பில் சொல்லியிருக்கிறார்.
லிஞ்சின் தொடர்ந்த படிப்பில் பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் இதற்குமுன் அமேசானுக்குள் சென்ற எவரையும்விட வலிமையானவர், நில வரைபடங்களினை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். அவரது இரண்டாவது மகன் பிரையன் சொல்வது போல, ”அவர் கனவு கண்டார். கண்டுபிடிக்கப்படாத மனிதர்கள் வாழும் ஒரு இடம் இருக்கிறது. அது எங்கு இருக்கிறது, எப்படி போகவேண்டும் என்பதை கண்டுபிடிப்பதே அது.”
பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட்டின் புதிய உலகை தேடும் கனவு தனக்குள்ளும் படர்வதைக் கண்ட லிஞ்சி, அந்தக் கனவை பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட்டுக்குள் விதைத்தது யாராக இருக்கும், எதுவாக இருக்கும் என்று தேடுகிறார். அவருக்கு விடையும் கிடைக்கிறது. அதை விதைத்தவர் சர் ஆர்தர் கோனன் டாய்ல் என்ற ஸ்காட்டீஷ் எழுத்தாளர். 1912-இல் வெளி வந்த அவரது ‘The Lost World’ நாவலில் அமேசானின் இருண்ட பகுதிகள் பற்றி அவர் எழுதியிருந்தார். டைனோசர்கள் இன்னும் உயிருடன் அங்கு உலாவிக் கொண்டிருக்கின்றன என்ற வரிகள் இருந்தன. அந்த நேரத்தில்தான், 1925இல் பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் தன் மகன் ஜாக்குடன் பயணத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்
அவரது பயணத்தை அவசியமான, ஆனால் ஆபத்தோடு விளையாடும் பயணம் என்று பத்திரிகைகள் எழுதின. 1927-இல் பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் காணாமல் போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தொடர்ந்த தகவல் தேடலில் இருந்த லிஞ்சிற்க்கு தான் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. நான் போயே ஆக வேண்டும் என அவர் தன் மனைவியிடம் சொன்னார். Rene Delmotte என்ற மலையேற்ற பந்தயமொன்றில் அறிமுகமாயிருந்த நண்பரையும் சேர்த்துக்கொண்டார். அவர்கள் இருவரும் அமர்ந்து அமேசான் காடுகளின் சாட்டிலைட் புகைப் படங்களை உன்னிப்பாகக் கவனித்தார்கள். மிக நவீன உபகரணங்களினை தயார் செய்தார்கள். மிக வேகமாகச் செல்லும் ஜீப், கூர்மையான பாறைகளில் பயணம் செய்தாலும் பழுதடையாத டயர்கள். அலுமினியத்தாலான படகு, வெளியிலிருந்து இயக்கும் மோட்டார், கண்காணிப்பு மற்றும் திசைகாட்டும் கருவிகள், வாக்கி-டாக்கி பழுது பார்க்கும் மெக்கானிகல் என்ஞீனியர், டேனியல் முனோஸ் என்ற மானுடவியலாளரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். இவர் உலகின் தலைசிறந்த தடயவியலாளரும்கூட.
இப்படியே, அமேசான் மனிதர்கள் கூட்டமாக செல்லும் இடமல்ல என்று பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் சொல்லியிருந்தாலும் அந்த அணியில் 17 பேர் சேர்ந்துவிட்டார்கள். லிஞ்சி தனது 16 வயது மகன் ஜோன்ஸ்சையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். அளவில் அமெரிக்காவை விடப் பெரிதான அந்த இடம் சாலைகளோ வெளிச்சமோ அற்றது. ஜிங்கு ஆற்றினை கடந்து அவர்கள் பயணிக்க வேண்டும். பெர்சிவல் ஹாரிசன் ஃபாசெட் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இடம் வெகுதூரத்தில் இருந்தது.
படகில் சென்று, ஒரு இடத்தில் முகாமிட்ட பின்னால் சிறிய விமானத்தை அந்த இடத்திற்கு வரவழைப்பது என்று லிஞ்சி திட்டமிட்டிருந்தார். விமானத்தில் கனமான பொருட்களை கொண்டுவரவும் திட்டமிட்டிருந்தார். ஒரு நாள் முழுக்க அவர்கள் நடந்து சோர்ந்தபோது குய்குரோஸ் என்ற கிராமத்துக் குடிசைகளைக் கண்டார்கள். மார்பிலும் நெற்றியிலும் சிகப்பு வர்ணம் பூசப்பட்டிருந்த ஆதிவாசிகளின் தலைவனிடம் பேசி முகாம் அமைக்கவும், விமானம் வந்து இறங்கவும் அனுமதி வாங்கிக் கொண்டார்கள்.
அடுத்த நாள் அவர்கள் ஒரு குட்டையில் நீந்திக் கொண்டிருந்த போது விமானம் வந்திறங்குவதை லிஞ்சி கண்டார். சில கணங்களுக்குப் பின் அக்கிராமவாசிகள் ஓடி ஒளிவதையும் கண்டார். என்ன நடக்கிறது என்று போர்த்துக்கீசிய மொழியில் அவர் கத்தியபோது பிரச்சினை என்று கிராமவாசிகள் குரல் கொடுத்தார்கள். என்ன பிரச்சினை என்று பார்க்க, ஒரு பலம்வாய்ந்த பழங்குடியினக் கூட்டம் வந்து அவர்களை வளைத்துக் கொண்டார்கள். அவர்களிடம் விஷம் தோய்ந்த அம்புகள் இருந்தன, துப்பாக்கிகள் இருந்தன. நிர்வாண உடலில் அவர்கள் வர்ணம் தீட்டியிருந்தார்கள்.
”பிரச்சினையின் தீவிரம் அறிந்த சிலர் விமானம் நோக்கி ஓடினார்கள். அது நான்கு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடியது.
லிஞ்சி மற்றும் எஞ்சிய சிலரை பழங்குடியினர் தங்களோடு அழைத்துப் போனார்கள். ”எங்கு போகிறோம்?” என்று லிஞ்சி கேட்க, ”நீங்கள் எங்கள் கைதிகள். வாழ்நாள் முழுக்க எங்கள் கைதிகள்” என்று ஒரு பழங்குடி ஆள் போச்சுக்கீசிய மொழியில் பதில் சொன்னான். அவரது மகன் வாயடித்துப் போயிருந்தான். அவர்கள் அமேசான் ஆற்றில் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வண்ண வண்ண மீன்களையும், அடந்த வனத்தையும், ஓடும் நதியையும், கைதிகளாக தங்களைக் கடத்திக் கொண்டு போகும் பழங்குடியினரையும் லிஞ்சி பார்த்த வண்ணமிருந்தார்.
பழங்குடியினரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் வாழ்வு, அவர்கள் சட்ட திட்டம் எதையும் பிரேசிலிய அரசாங்கத்தால் தடுக்கவோ தடை செய்யவோ முடியவில்லை.
பழங்குடியினர் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கிறார்கள். அதன்பின் பாவ்லோ பினேஜ் என்ற சம்பா நடனக் கலைஞன் அவர்களுக்கு வழிகாட்ட முன் வருகிறான். அவனாலும் முடியவில்லை. ஃபாசெட் பற்றிய தகவல்களை இன்னும் சேகரிப்பதே அவர் சென்ற இடத்தை அடைய சிறந்த வழி என்று அவருக்குத் தோன்றுகிறது.
ஃபாசெட்டின் மகன், பேத்தி மற்றும் அவரது நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதின் விளைவாக ஃபாசெட் சென்ற இடம் பற்றிய தகவல் மற்றும் வரைபடம் கிடைக்கிறது. மேலும் அவரின் நாட்குறிப்புகளில் கிடைத்த தகவலின் படியும் ஃபாசெட்டை தேடும் முயற்சிகளில் லிஞ்சி இறங்குகிறார்.