லயோனல் மெஸ்ஸி – அர்ஜென்டினா
“இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை” என்ற லட்சிய வெறியுடன் இந்த உலகக் கோப்பைக்குள் நுழைகிறார் லயோனல் மெஸ்ஸி. உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 6 முறை வென்றாலும் அர்ஜென்டினாவுக்கு ஒருமுறைகூட உலகக் கோப்பையை வென்றுகொடுக்க முடியவில்லை என்பது இவரது தீராத சோகம். 2006-ம் ஆண்டுமுதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆடிவரும் மெஸ்ஸிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. அதனால் இந்த முறை எப்படியாவது உலகக் கோப்பையை வசமாக்கி விடவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.
பிஎஸ்ஜி கிளப் அணிக்காக சமீபத்தில் ஆடிய 18 போட்டிகளில் 11 கோல்களை அடித்ததுடன், 14 கோல்களை அடிக்க உதவியும் செய்திருக்கிறார். இருந்தாலும் பழைய ஃபார்மில் இல்லை என்று அவரது ரசிகர்கள் முணுமுணுத்து வருகிறார்கள். அர்ஜென்டினாவுக்காக இந்த உலகக் கோப்பையை வென்று அந்த முணுமுணுப்பை பொய்யாக்குவாரா என்று பார்ப்போம்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ – போர்ச்சுக்கல்
மெஸ்ஸிக்கு இணையாக கால்பந்து உலகில் வலம்வரும் மற்றொரு சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சர்வதேச காலபந்து போட்டிகளில் அதிக கோல்களை, அதாவது 119 கோல்களை அடித்துள்ள கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை.
மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸிக்கு துணையாக செயல்படக்கூடிய பல வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் உலகக் கோப்பை கனவை நனவாக்க அவருக்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ரொனால்டோவின் நிலை அப்படி இல்லை. கடந்த பல ஆண்டுகளாக ஒன் மேன் ஆர்மியாக போர்ச்சுக்கல் அணியை தாங்கி வருகிறார் ரொனால்டோ. இந்த ஒன் மேன் ஆர்மி கத்தார் உலகக் கோப்பையில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நெய்மர் – பிரேசில்
பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ காலத்துக்குப் பிறகு கால்பந்தில் பிரேசில் அணியைக் காத்து நிற்கும் காவல் தெய்வம் நெய்மர். கிரிக்கெட்டில் வலதுகை, இடதுகை பேட்ஸ்மேன்களைப் போல் கால்பந்து விளையாட்டில் சிலர் வலது காலிலோ அல்லது இடது காலிலோ கோல் அடிப்பதில் வீரர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் இரு கால்களிலும் பந்தை கோலுக்குள் திணிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் நெய்மர். இரு கால்கள் மட்டுமின்றி, இவரது தலையும்கூட பல சமயங்களில் பந்தை கோல் போஸ்டுக்குள் திணைத்துள்ளது.
பிரேசில் அணிக்காக இதுவரை 75 கோல்களை அடித்துள்ள நெய்மர், சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணி தங்கப் பதக்கத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதே வேகத்தில் இப்போது பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத்தர களம் இறங்குகிறார்.
கிலியன் எம்பாம்பே (பிரான்ஸ்): Kylian Mbappe
கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து கிடைத்துள்ள பதில் கிலியன் எம்பாம்பே. 23 வயதே ஆன இந்த இளம் கால்பந்து வீரர் இதுவரை அடித்துள்ள சர்வதேச கோல்களின் எண்ணிக்கை 28. முதல்தர கால்பந்து போட்டிகளில் மிகக் குறைந்த வயதிலேயே 255 கோல்களை அடித்துள்ளார் எம்பாம்பே. பார்வர்டின் இரண்டு புறங்களிலும் ஆடும் ஆற்றல் வாய்ந்தவரான எம்பாம்பே, சர்வதேச போட்டிகளில் பிரான்ஸ் அணிக்கு பல வெற்றிகளைப் பரிசளித்திருக்கிறார். பிரான்ஸ் அணிக்காக மட்டுமின்றி கிளப் கால்பந்து போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காகவும் ஆடும் எம்பாம்பேவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மைதானத்தின் நடுக்களத்தில் அவரிடம் பந்து சென்றால் போதும், சடுதியில் எக்ஸ்பிரஸ் வேகமெடுப்பார். அப்போது தொடங்கும் வேகம், கோல் அடிப்பதற்கான முயற்சியில்தான் நிற்கும். கடந்த முறை பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு இவர் அடித்த 4 கோல்களும் காரணம். இவர் இருக்கும் நம்பிக்கையில், இம்முறையும் கோப்பையை வெல்ல களம் இறங்குகிறது பிரான்ஸ்.
ராபர்ட் லெவண்டோஸ்கி (போலந்து)
மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் இந்த உலகக் கோப்பையில் கடைசி முறையாக ஓடும் மற்றொரு குதிரை ராபர்ட் லெவண்டோஸ்கி. சர்வதேச போட்டிகளைவிட கிளப் கால்பந்து போட்டிகளில் இவர் வெகு பிரபலம். பார்சிலோனா அணிக்காக 19 போட்டிகளில் ஆடி 18 கோல்களை அடித்துள்ள இவர், ஜெர்மனியின் பியூண்டெஸ்லிகா கால்பந்து போட்டியிலும் சூப்பர் ஸ்டாராக இருந்துள்ளார். இந்த லீக் கால்பந்தில் 2020- 21-ம்ல் மட்டும் இவரது கால்கள் 41 முறை கோலடித்து சாதித்துள்ளன.
6.1 அடி உயரம் கொண்ட உலகின் மிகச்சிறந்த செண்டர் பார்வர்ட் வீரரான இவர், இந்த முறை எப்படியும் போலந்துக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்ற வேட்கையுடன் களம் இறங்குகிறார்.