புல்லட் ட்ரெய்ன் – ஆங்கிலம் – (நெட்பிளிக்ஸ்)
டோக்கியோவிலிருந்து க்யோட்டோவுக்குச் செல்லும் புல்லட் ரயிலிலிருந்து பெட்டி ஒன்றை எடுக்கும் வேலை லேடிபக்கிற்கு வருகிறது. தனக்கு வரும் சிக்கல்களை மீறி அந்தப் பெட்டியை எடுத்து உரிய இடத்தில் அவர் ஒப்படைத்தாரா என்பதுதான் படத்தின் கதை.
காமெடி கலந்த இந்த ஆக்ஷன் படத்தில் பிராட் பிட்தான் நாயகன். முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் காமெடி செய்து அசத்துகிறார். ’டெட்பூல் 2’ படத்தை இயக்கிய டேவிட் லீச்தான் இயக்குனர். நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள இந்த படம் ஆக்ஷன் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஃபாரன்சிக் – இந்தி (ஜீ5)
நகரத்தில் சிறு பெண்குழந்தைகள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். காணாமல் போன சில நாட்களில் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கிறார்கள். இந்த கொலையைப் பற்றி போலீஸார் விசாரித்துக்கொண்டு இருக்க, புத்திசாலியான ஒரு ஃபாரன்சிக் அதிகாரியும் அதற்கான புலனாய்வு பணிகளில் இறங்குகிறார். அவர் அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் இப்படத்தின் கதை.
ஏற்கெனவே மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற இப்படத்தை இந்தியில் எடுத்துள்ளனர். விக்ராந்த் மாசே, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
பத்தொன்பதாம் நூற்றண்டு – மலையாளம் – அமேசான் பிரைம்
கேரளாவில் கடந்த 19-ம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக் கூடாது. முட்டிக்கு கீழே உடை அணியக் கூடாது, ஆண்கள் மீசை வைத்திருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்பதுபோன்ற கடுமையான விதிகள் அமலில் இருந்தன.
இந்த விதிகளை எதிர்த்து தாழ்த்தப்பட் இனத்தைச் சேர்ந்த ஞங்ஙேலி என்ற பெண் தனது மார்பகத்தை அறித்து இலையில் வைத்து திருவிதாங்கூர் மன்னருக்கு வரியாக வழங்கினார். இதைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட, மன்னர் இதுதொடர்பான வழக்குகளை வாபஸ் வாங்கினார். இந்த வரலாற்று சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்திருக்கும் படம்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டு.
தமிழில் விக்ரம் நடித்த ‘காசி’ படத்தை இயக்கிய வினயன் இப்படத்தை இயக்கியுள்ளார். அமேசான் பிரைம் ஓடிடில் இப்படம் வெளியாகி உள்ளது.
விக்ராந்த் ரோணா – கன்னடம், தமிழ் (டிஸ்னி ஹாட்ஸ்டார்)
கமரோட்டு டவுனில் போலீஸ் அதிகாரி ஒருவரின் கொலைக்கு காரணமானவரை கண்டுபிடிக்க வருகிறார் விக்ராந்த் ரோணா (சுதீப்). விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த 16 குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்டது தெரியவர அதையும் விசாரிக்கிறார். அவர் கொலையாளியைப் பிடித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
கன்னடத்தில் வெளியான இப்படத்தை தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். தமிழில் மொழிமாற்றம் செய்தும் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.