“மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. நிர்வாகம் என்பது அரசின் பொறுப்பு. அரசமைப்பு சட்டம் கொடுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டு ஆளுநர் பணியாற்ற வேண்டும். அதை என் மனதில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்” (“This place has a popular government mandated by the people. Governance is the responsibility of the government. Governor is to function within the parameters of the Constitution. I will try my best to keep that in mind,”) – 2021 செப்டம்பர் மாதம் ஆர்.என்.ரவி தமிழ் நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி, தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பது உள்நோக்கத்துடன்தான் என்ற கருத்துக்கள் அப்போதே கூறப்பட்டன.
முதல் மாதம் திமுக அரசுக்கும் ஆளுநருக்குமான உறவு நட்பாகவே இருந்தது.
2021 அக்டோபர் மாதம் தலைமைச் செயலர், துறை செயலர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் மாநில அரசின் சில துறைகள் குறித்தும் அறிந்துக்கொள்ள தமிழக ஆளுநர் ரவி விரும்புகிறார் என்று துறை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையானது. மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடத் தொடங்கிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து தலைமைச் செயலர் விளக்கமும் அளிக்க வேண்டியிருந்தது. தனது விளக்க அறிக்கையில், ‘தமிழ்நாட்டுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.
திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனாலும், சர்ச்சை நிற்கவில்லை. அங்கே தொடங்கிய சர்ச்சைகள், நீட் மசோதா உட்பட ஆளுநர் மாளிகையில் காத்திருந்த மசோதாக்கள், மேடைகளில் ஆளுநர் சொல்லும் கருத்துக்கள் என நீண்டு, தற்போது கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஆளுநரின் கருத்து வரை சர்ச்சையாகிவிட்டது.
ஆளுநர் ரவியும் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படாமல் சர்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு வருகிறார்.
இந்த வருடம் ஜுன் மாதம் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ‘பாரதம் என்பது சனாதனக் கொள்கைகளின் அடிப்படையில் உருவானது’ என்று பேசினார். இது பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியது. மனிதர்களில் ஏற்றத்தாழ்வை, பிரிவினையை உருவாக்கும் சனாதன கொள்கையை ஆளுநர் எடுத்து பேசியது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் அடுத்து நடந்த ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய ஆளுநர் ரவி, ‘ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்பது சனாதன கொள்கை அல்ல, சனாதனத்துடன் மதத்தை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. இவை இரண்டும் வேறு வேறு’ என்று கூறினார்.
ஆளுநரின் அடுத்த சர்ச்சை திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துக்களில் எழுந்தது. ஆகஸ்ட் 2022-ல் டெல்லியில் நடந்த விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது, ஆதிபகவன் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதை ‘ப்ரைமல் டெய்டி – Primal Deity என்று ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு செய்திருப்பது தவறு. ஆதிபகவன் என்பதை உலகை உருவாக்கியவர் என்று குறிப்பிட வேண்டும். ஆனால், ஜி.யு. போப் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்’ என்றும் ‘ஜி.யு.போப் இந்தியாவுக்கு கிறிஸ்துவத்தை பரப்ப வந்தவர்; திருக்குறள் ஆன்மிகப் புத்தகம்’ என்றும் கூறினார். டெல்லியில் அவர் பேசியது தமிழ் நாட்டிகள் சர்ச்சைகளை எழுப்பியது.
இந்த திருக்குறள் சர்ச்சை அக்டோபர் மாதமும் தொடர்ந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாட்டில் ஆளுநர் பேசும்போது, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்தார். இங்கே அரசியலுக்காக திருக்குறளை பயன்படுத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்ட ஆளுநருக்கு கண்டனங்கள் எழுந்தன.
அக்டோபர் மாதம் ஆளுநர் மாளிகையில் நடந்த ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்’ நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, திராவிடம் என்பது நான்கு தென்னிந்திய மாநிலங்களைச் சார்ந்தது. ஆனால், அதை தமிழர் அடையாளமாக மாறிவிட்டது என்று திராவிடம் குறித்து பேசியதும் சர்ச்சையானது.
சென்னையில் நடந்த ஹரிஜன் சேவா சங்க விழாவில் பேசும்போது முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது என்று குறிப்பிட்டதும் சர்ச்சையானது.
இது மட்டுமில்லாமல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து ஆளுநர் பேசும் போது, இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பின்னர்தான் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஏன் இந்த தாமதம் என்ற கேள்வியை எழுப்பினார். ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலும் அளித்தார்.
இதற்கெல்லாம் உச்சமாக அக்டோபர் 29ஆம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ துளசியின் நூற்றாண்டு விழாவில் பேசிய ஆளுநர் ரவி, ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்துதான் இருக்க முடியும்; இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்று குறிப்பிட்டார்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி இந்தியா மதசார்பற்ற நாடு. அதன் அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஆளுநர் பதவியில் இருப்பவர் எப்படி அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசலாம் என்று எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக உட்பட அதன் கூட்டணிக் கட்சியினர் கோரிக்கை கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளார்கள். நாடாளுமன்றக் கட்சிகளின் ஆதரவையும் திமுக கேட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் ஆளுநர் ரவி நேற்று டெல்லி சென்றிருக்கிறார்.
ஆளுநர் பிரச்சினை என்பது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா போன்று பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் இருக்கிறது. அந்த மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற திமுக கூட்டணிக் கட்சியினரின் கோரிக்கை குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே. குடியரசுத் தலைவரே மத்தியில் ஆளும் கட்சியின் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்படுபவராக இருப்பதால் அந்தக் கட்சிக்கு எதிராக குடியரசுத் தலைவர் முடிவெடுப்பாரா என்பது நிச்சயமில்லை.
தமிழ் நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் உச்சத்தை அடைந்துவிட்டது என்பதையே இந்த கோரிக்கை காட்டுகிறது. இதுவரை திமுக ஆட்சியில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களும் கோரிக்கையும் ஆளுநர் குறித்து வைக்கப்பட்டதில்லை. ஆளுநர்களுடம் உரசல்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சுமூகமாகவே தீர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆளுநரிடம் மோதல் போக்கு என்பது மாநில அரசின் திட்டங்களுக்கு வேகத் தடை போல் மாறும். ஏற்கனவே ஆளுநர் ரவியின் கையெழுத்து கிடைக்காமல் சுமார் 20 மசோதாக்கள் காத்திருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது. இந்த 20 என்பது 40, 80 என்று உயர வாய்ப்பிருக்கிறது.