குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு அம்மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் சட்டப்பேரை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அங்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை உறுதி
லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டெல்லி செங்க்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி ஆரிப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து அவர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவரது மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் – கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட கிஷோர் கே.சுவாமி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.