தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இந்நிலையில், கோவை கார் வெடிப்பு குறித்த ஆளுநர் பேச்சுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திமுக பொருளாளரும் திமுக பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு, “ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட உள்ளது. திமுக எம்.பி.க்கள் மற்றும் திமுகவுடன் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட அழைக்கிறோம். 3-ந்தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து அந்த மனுவை படித்து பார்த்து கையெழுத்திட கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மழை: சாலையில் தேங்கிய நீரால் பாதாள சாக்கடை குழியில் விழுந்த பெண்
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் மேலும் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் தொடர்ந்து 3ஆவது நாளாக விடிய விடிய மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இது மாநகராட்சியால் உடனுடனே அகற்றப்பட்டாலும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது நீடிக்கிறது. சென்னை பெரம்பூர் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பூர் பகுதிக்கு சென்ற பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாரக்ஸ் சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க செய்தனர். மேலும், மக்களின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1,180 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடி நீரில், 2,765 கனஅடி நீர் இருந்து வருகிறது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக உபரி நீர் திறப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புழல் ஏரிக்கு தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான புழல் ஏரிக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி: தாய் உட்பட மேலும் 2 பேர் கைது
கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்த இவர், ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், தனது வீட்டுக்கு வந்த ஷாரோன் ராஜுக்கு மாம்பழச்சாறும் கசாயமும் கொடுத்துள்ளார், கிரீஸ்மா. அதில் களைக்கொல்லி மருந்தை கலந்திருக்கிறார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து கிரீஸ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரீஸ்மா ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார். இரண்டாவது தாரமே தங்கும் என சொன்னதால் கிரீஸ்மா இதை அரங்கேற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம், கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது. இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷாரோன் ராஜ் உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிடக்கூடும் என்ற அச்சம் காரணமாக ஷாரோனை கிரீஸ்மா கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கிரீஸ்மாவின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கிரீஸ்மா தாய் சிந்து, மாமா நிர்மலையும் கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது திருமணத்தை உறுதி செய்த நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா கடந்த 2020-ல் சோகேல் என்பவருடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அது லாபகரமாக நடக்கிறது. சோகேலை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை ஹன்சிகா உறுதிபடுத்தியுள்ளார். தொழிலதிபர் சோகேலை திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு செய்துள்ளார். திருமணம் செய்துகொள்ளப்போகும் ஹன்சிகாவுக்கு திரை உலகினரும் ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.