டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் 2 போட்டிகளில் வென்றதன் மூலம் தங்களை வலிமையாக்கிக் கொண்டுள்ள இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த டி20 தொடரில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியுள்ளது. ஆனால் அதை வைத்து டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று சொல்ல முடியாது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு பலவீனமான சில விஷயங்களும் இருக்கின்றன.
அப்படி இந்திய அணியை பாதிக்கும் சில பலவீனங்களைப் பார்ப்போம்…
தடுமாறும் தொடக்க ஜோடி:
இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்தியாவின் தொடக்க ஜோடி சற்று பலவீனமாகவே உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இரட்டை இலக்கத்தை தொடாமலேயே அவுட் ஆனார்கள். வலிமையான பாகிஸ்தான் பந்துவீச்சில்தான் இப்படி என்றால், பல்லில்லாத பந்துவீச்சைக் கொண்ட நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் கே.எல்.ராகுல் இரட்டை இலக்கத்தை தொடாமல் அவுட் ஆனார். ரோஹித் சர்மா இப்போட்டியில் அரை சதத்தை அடித்தாலும், அவரது ரன் குவிக்கும் வேகம் சற்று குறைவாகவே இருந்தது. இது இந்திய அணியை பாதிக்கிறது. இந்த நிலையை மாற்ற தொடக்க ஜோடி அதிரடியாக ஆடவேண்டும். இல்லாவிட்டால் கே.எல்.ராகுலுக்குப் பதில் ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக்கி ஒரு புது சோதனையை அணி நிர்வாகம் செய்து பார்க்க வேண்டும்.
கோலி, சூர்யகுமார் மீது அதிக சுமை:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச் சிறப்பாக இருப்பதாக வெளியில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில மாதங்களாக கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரையும் சார்ந்தே இந்திய அணி இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடர் முதல் இது வரையிலான 12 போட்டிகளில் விராட் கோலி 548 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி ரன்கள் 78.28-ஆக உள்ளது. மற்றொரு வீரரான சூர்யகுமார் யாதவ், 13 போட்டிகளில் 439 ரன்களைக் குவித்துள்ளார். மற்ற வீரர்கள் இவர்களைப் போல் ரன்களைக் குவிக்கவில்லை. இனிவரும் போட்டிகளிலாவது ரோஹித், ஹர்த்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களில் யாராவது ஒரு வீரர் அவர்களின் சுமையைப் பகிர வேண்டும்.
வலிமையான தென் ஆப்பிரிக்க பேட்டிங்:
இந்த உலகக் கோப்பையில் இதுவரை இந்திய அணி எதிர்கொண்ட பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 2 அணிகளும் பேட்டிங்கில் வலிமை குன்றிய அணிகள். ஆனால் தென் ஆப்பிரிக்கா அப்படியல்ல. இந்தியாவிடம் சிறப்பாக பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ள குயிண்டன் டீ காக், ரூசோ ஆகிய வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இந்திய பந்துவீச்சாளர்களை சரியாக கணித்து ஆடத் தெரிந்த இந்த 2 பேட்ஸ்மேன்களும் தென் ஆப்பிரிக்க அணியில் இருப்பது அவர்களின் பலம்.
அவர்களின் அந்த பலம் நமக்கு பலவீனம். இதைச் சமாளிக்க சரியான உத்திகளை வகுக்க வேண்டும்.