அரியானாவின் சூரஜ்கண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. இது ஒரு யோசனைதான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. ஆனால், நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும்’ என்று கருதுகிறேன் என்று கூறினார்.
ஏற்கெனவே மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’, ‘ஒரே நாடு, ஒரே கட்டம்’ திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ‘ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை: பாஜக பல்டி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு அரசு செயல்பாட்டை கண்டித்து அக்டோபர் 31ஆம் தேதி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து, ‘கோவை பாஜக பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோவை தொழிலதிபர் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம். ஆனால், இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில், ‘முழு அடைப்புக்கு மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; அதை கட்சி தலைமை அங்கீகரிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை தொடக்கம்
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று, 29.10.2022, 30.10.2022, 31.10.2022, 01.11.2022 ஆகிய ஐந்து தினங்களும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது.
சிறுமியின் தலையை துண்டித்து நள்ளிரவில் மயான மாந்திரீக பூஜை: செங்கல்பட்டில் கொடூரம்
செங்கல்பட்டு மாவட்டம் சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு 12 வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார். அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த கிருத்திகா ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் உடல் 15-ம் தேதி சித்திரவாடியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி மயானம் வழியாக சென்ற கிராமத்தினர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை, மஞ்சள் தூள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். அப்போது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலில் தலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அமாவாசை அன்று சூரிய கிரகணம் நேரத்தில் சிறுமியின் தலை மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு ‘தலைச்சன் பிள்ளை தலை’ வைத்து மாந்திரிகம் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கிறீர்களா? – சீனாவில் புதுமண தம்பதிகளை விசாரிக்கும் அரசு அதிகாரிகள்
சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், அந்நாட்டின் அதிபருமான ஜி ஜின்பிங், “சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், நாட்டின் மக்கள்தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை நிறுவும்” என்று கூறினார்.
இந்நிலையில், புதிதாக திருமணமான ஒரு பெண் ஆன்லைனில் வெளியிட்ட பதிவில், “திருமணமான பின், நான் கர்ப்பமாக இருக்கிறேனா என்று உள்ளூர் அதிகாரிகள் என்னிடம் தொடர்புகொண்டு விவரம் கேட்கிறார்கள்” என்று தெரிவித்தார். இந்த தகவலை அவர் பகிர்ந்து கொண்ட சில நிமிடங்களிலேயே, பலரும் தாங்கள் இதுபோன்ற அணுகுமுறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பெண்மணி கூறுகையில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், ‘நீங்கள் திருமணமானவர், நீங்கள் ஏன் இன்னும் கர்ப்பத்திற்கு தயாராகவில்லை?’ என்று அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர்” என்று தெரிவித்தார். இன்னொருவர், “நான்ஜிங் நகர அரசு பெண்கள் சுகாதார சேவை மைய அதிகாரிகள் என்னிடம் இரண்டு முறை விசாரித்தனர். புதுமணத் தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என ஒரு அதிகாரி என்னிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.