இரண்டு கைகளிலும் ஷாப்பிங் பைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“தீபாவளிதான் முடிந்துவிட்டதே. இன்னும் என்ன ஷாப்பிங்?”
“இது மழைக்கால ஷாப்பிங். நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் மழைக்காலத்தில் அணிவதற்கு ஏற்ற உடைகளை வாங்கி வந்தேன். கூடவே புது மாடல் ரெயின் கோட் ஒன்றையும் வாங்கிவந்தேன். மழையில் அலைந்து செய்திகளை சேகரிக்க வேண்டி இருக்கிறதே?”
“செய்தியாளர்களைப் பற்றி நீ இப்படி சொல்கிறாய். ஆனால், அண்ணாமலை செய்தியாளர்களை ‘குரங்கு’ என்று சொல்லி அவமதித்து விட்டாரே?”
“இந்த விஷயத்தில் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பாஜகவின் மூத்த தலைவர்களே கொதித்துப் போய் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை பகைத்திருப்பது கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பைத் தருமோ என்ற பயம் அவர்களுக்கு. இதுபற்றி டெல்லி தலைமையிடம் அவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்களாம். டெல்லி தலைமை தலையிடும் பட்சத்தில் இதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வாய்ப்பு இருக்கிறது.”
“இனியாவது பத்திரிகையாளர்களை மதித்து நடந்தால் சரி.”
“கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் இதுவரை விளக்கம் சொல்லாமல் இருக்கிறாரே?”
“முதல்வர் மட்டுமல்ல மூத்த அமைச்சர்கள் யாரும்கூட கோவை சம்பவத்துக்கு இதுவரை விளக்கம் சொல்லவில்லை. அதற்குப் பதில் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் அரசின் சார்பில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருப்பதுதான் இதற்கு காரணம். அவரும் அரசியல் ரீதியாக இந்த பிரச்சினையை கொண்டு போக முயற்சி செய்தார். விசாரணை பற்றிய விஷயங்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது? அவரை முதலில் அழைத்து என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.”
“கார் வெடிப்பு விஷயத்தில் முதல்வரின் மனநிலை என்ன?”
“இந்த சம்பவத்துக்காக உளவுத்துறை அதிகாரிகளிடம் கடுமையாக பேசியிருக்கிறார் முதல்வர். கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தின்போது கோவைக்கு நேரில் சென்று தான் சேகரித்த விவரங்களை முதல்வருக்கு டிஜிபி விளக்கமாக சொல்லி இருக்கிறார். அவர் சொல்லி முடித்ததும் முதல்வர், ‘இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்கட்டும். அவர்களிடம் வழக்கை ஒப்படைத்து விடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்”
“அதற்கு டிஜிபி என்ன சொன்னாராம்?”
“நாம் 100% விசாரணையை முடித்து விட்டோம். குற்றவாளிகளையும் பிடித்து விட்டோம் சிலரை கண்காணித்து வருகிறோம். சிலரை விசாரிக்கிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியதுதான் பாக்கி என்று அவருக்கு பதில் சொல்லியிருக்கிறார் டிஜிபி. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ‘நான் அரசியல் காரணங்களுக்காக சொல்கிறேன். இந்த வழக்கை அவர்களே விசாரிக்கட்டும்’ என்று கூறி இருக்கிறார். அதன்பிறகு டிஜிபி எதுவுமே பேசவில்லையாம்.”
“உளவுத்துறை கூடுதல் டிஜிபி இதுபற்றி எதுவும் பேசவில்லையா?”
“முதல்வர் அவரைப் பேச விட்டால்தானே. கூட்டத்தில் அவரிடம் கடுமையாக பொரிந்து தள்ளிவிட்டாராம் முதல்வர். ‘இறந்து போனவர் வீட்டில் பொட்டாசியம் நைட்ரேட் உட்பட வெடிகுண்டு தயாரிப்புக்கான எல்லா பொருட்களும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக சொல்கிறார்கள் ஆனால், மேலும் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; அவர்கள் பெயரை ஏன் வெளியிட மறுக்கிறார்கள். அவர்கள் வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்’ என்று செய்தியாளர் சதிப்பில் அண்ணாமலை சொன்னதை இக்கூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர். இதைத் தொடர்ந்து உளவுத்துறை கூடுதல் டிஜிபியிடம், ‘எனக்கு தகவல் சொல்வதற்கு முன் நீங்கள் எல்லோரும் அண்ணாமலைக்குத்தான் தகவல் சொல்கிறீர்கள் போல் தெரிகிறது. கோவை சம்பவம் உளவுத்துறையின் தோல்வி என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார், இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி விஷயத்தில் கோட்டை விட்டதால் உளவுத்துறை மீது முதல்வருக்கு இருந்த கோபம் இப்போது இன்னும் அதிகரித்துள்ளது. டிஜிபிக்கும் உளவுத்துறை கூடுதல் டிஜிபிக்கும் இடையிலான பனிப்போரால் சில தவறுகள் நிகழ்வதாக முதல்வரிடம் ஏற்கெனவே சிலர் புகார் சொல்லி இருக்கிறார்கள். இந்த சூழலில் இப்போது டேவிட்சன் ஆசிர்வாதத்தை மாற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு அதிகாரியைப் போடலாமா என்று யோசித்து வருகிறாராம் முதல்வர்.”
“வழக்கமாக பாஜக செய்திகளை நிறைய சொல்வாயே…. இன்று எதுவும் இல்லையா?”
“கவலைப்படாதீர்கள். பாஜக செய்தியும் இருக்கிறது. ‘காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை இல்லை’ என்று கே.எஸ். அழகிரியின் பிறந்த நாள் கூட்டத்தில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருக்கிறார். ஆனால், அங்கிருந்த கோஷ்டி பூசல் இப்போது கமலாலயம் பக்கம் போய்விட்டதாக சொல்கிறார்கள். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அண்ணாமலையைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவரவர்களுக்கு தோன்றிய கருத்துக்களை அவர்கள் இஷ்டத்துக்கு சொல்லி வருகிறார்கள். இதனால் அண்ணாமலையும் இவர்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் தருவதில்லை. வானதி சீனிவாசன் தனது டெல்லி தொடர்புகளை பயன்படுத்தி, ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு அண்ணாமலை சரிப்பட மாட்டார் அவர் ஜாதி அரசியல், அறிக்கை அரசியல் என்று ஷோ காட்டுகிறார், இதை வைத்து நீங்கள் ஒரு எம்பி தொகுதி கூட ஜெயிக்க முடியாது’ என்று பாஜக தலைமையிடம் கூறி வருகிறார். டெல்லி தலைமையும் இதுபற்றி யோசித்து வருகிறதாம்.”
“தேவர் குருபூஜைக்கு எடப்பாடி போகப் போவதில்லை என்கிறார்களே?”
“ஆமாம். இந்த முறை தேவர் குருபூஜை நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ் மட்டும்தான் போகிறார். எடப்பாடி பழனிசாமி போகப்போவதில்லை. அவரது சார்பாக அவரது அணியில் உள்ள தேவர் சமூக தலைவர்கள் கலந்துகொள்ளக்கூடும் என்கிறார்கள். இதனால், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி மீது கடுப்பில் இருக்கிறார்கள்”
“அரசியலையே சுற்றிச் சுற்றி வருகிறாயே… சினிமா செய்திகள் ஏதும் இல்லையா?”
“சூப்பர் ஸ்டாரின் அக்காவின் பேத்திக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்கு சூப்பர் ஸ்டாரை அழைத்திருக்கிறார்கள். அவரும் கண்டிப்பாக வருவதாக சொன்னாராம். அதனால் அவருக்காக பெரிய மண்டபத்தில் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், சூப்பர் ஸ்டார் சொன்னபடி திருமணத்துக்கு செல்லவில்லை. அவர் வருவார் என்று உறவுக்காரர்கள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்ததுதான் மிச்சம். இதனால் அக்கா குடும்பத்தினருக்கு ரொம்பவே வருத்தம். மனைவி பக்க உறவினர் விசேஷங்களுக்கு தவறாமல் செல்லும் சூப்பர் ஸ்டார் நம்ம பக்க நல்ல காரியங்களுக்கு வர மறுக்கிறார் என்று புலம்பியிருக்கிறார்கள்.”
”சூப்பர் ஸ்டார் வீட்டுல மீனாட்சி ஆட்சின்றதை இப்பதானா புரிஞ்சிருக்காங்க?”
“பாவம், லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவார்னு அவங்க காத்துக்கிட்டு இருந்திருக்காங்க.” சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.