இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக் தேர்வாகியுள்ள சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
’1947ல் இந்திய சுதந்திர சூழலில் வின்ஸ்டன் சர்ச்சில், ‘இந்திய தலைவர்கள் யாருக்கும் திறமை கிடையாது. அவர்களிடம் நேர்மை கிடையாது’ என்று குறிப்பிட்டதாக தகவல் உண்டு. இன்று இந்தியா 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வரும் நிலையில் பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளி மனிதர் தேர்வாகியிருக்கிறார். வாழ்க்கை அழகானது’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மைதான். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட காலம்போய் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் இங்கிலாந்தை ஆளப் போகிறார். இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியான தருணம்.
ஆனால் இந்திய அரசியல் சண்டைகளுக்கு ரிஷி சுனாக் காரணமாகிவிட்டார்.
வலதுசாரிகளும் பாஜகவினரும் ரிஷி சுனாக்கை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகிறார்கள். ஒரு இந்தியர், ஒரு இந்து இங்கிலாந்து பிரதமராகியிருக்கிறார் என்று பதிவுகளை போடுகிறார்கள். மோடி ஆட்சிக் காலத்தின் சாதனை என்றும் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு புறம் இடதுசாரிகளும் திராவிடக் கட்சிகளை ஆதரிப்பவர்களும் ரிஷி சுனாக்கின் குடும்பம் 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டது அவரை இந்தியராக கொண்டாடுவது சரியில்லை என்று கருத்துகளை பதிவிடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் பாஜகவினரை எரிச்சலடைய வைக்க அவர் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
ரிஷி சுனாக் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். ரிஷியின் தந்தை யாஷ்விர் கென்யாவில் பிறந்து வளர்ந்தவர். தாய் உஷா டான்சானியாவில் பிறந்து வளர்ந்தவர். ரிஷியின் தந்தைவழி தாத்தா தற்போது பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலாவில் பிறந்தவர். 1935-ல் கென்யாவின் நைரோபிக்கு குடிபெயர்ந்திருக்கிறார். 1937-ல் மனைவியையும் குழந்தைகளையும் அங்கு அழைத்துச் சென்றுவிட்டார். தாய் வழி தாத்தாவும் டான்சானியாவுக்குச் சென்று அங்கே பணிபுரிந்து வந்திருக்கிறார்.
ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றிய பிறகு 1966-ல் இங்கிலாந்து வந்திருக்கிறார்கள் இந்த குடும்பத்தினர். 1980-ல் சுனாக் பிறந்திருக்கிறார். பல வருடங்கள் இந்தியாவுடன் தொடர்பு இல்லாமலேயே இருந்திருக்கிறார்கள். 2009-ல் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகளை சுனாக் திருமணம் செய்துக் கொண்டதன் மூலம் இந்திய தொடர்பு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இந்தியாவுடன் எந்த தொடர்பு இல்லாமல் இருந்தவரை கொண்டாடுவது என்பது இந்திய அரசியல் நோக்கங்களுக்காக என்று இடதுசாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவில் அரசியல் சண்டை ஒரு புறம் இருக்க, சுனாக் குறித்த சிறு குறிப்பை பார்த்துவிடுவோம்.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார் ரிஷி. ஆரம்பத்தில் வங்கியில் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு சொந்தமாக வங்கித் தொழில். இப்படி வளர்ந்த ரிஷிக்கு அரசியல் ஆசையும் வர கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2014 பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெறுகிறார். பிறகு நிதித் துறை செயலர், அமைச்சர் என பொறுப்புகளில் உயர்ந்து இன்று பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். நாளை பிரதமராகவும் பொறுப்பேற்கலாம்.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்தார் ரிஷி. அங்கு காதல் பிறந்தது. கல்யாணத்தில் முடிந்தது. இரண்டு குழந்தைகள்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பியாக ரிஷி பொறுப்பேற்கும்போது பகவத் கீதையின் மேல் உறுதி எடுத்துக் கொண்டார்.
ரிஷி சுனக் மீது சர்ச்சைகளும் உண்டு. மனைவியின் சொத்துக்கள் குறித்து தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு. மனைவி அக்ஷதா இந்திய குடியுரிமை பெற்றவர். இந்திய அரசுக்கு வரி கட்டுபவர். ஆனால் இங்கிலாந்தில் சம்பாதித்தவற்றுக்கு வரி கட்டவில்லை என்ற சர்சை எழுந்தது. சாமானிய மக்கள் மீது வரிகள் போடும் சுனக், தன் மனைவிக்கு வரியை குறைத்துக் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்க் கட்சிகள் வைத்தன. அதன்பிறகு இங்கிலாந்திலும் வரி கட்ட தொடங்கினார் அக்ஷதா.
பொதுமுடக்க விதிகளை மீறி இரவு விருந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது உண்டு. இந்த குற்றச்சாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதும் வைக்கப்பட்டது. இதற்காக அபராதமும் கட்டினார்கள்.
இன்றைய நிலையில் ரிஷி – அக்ஷதா தம்பதியின் சொத்து மதிப்பு 73 கோடி பவுண்டுகள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7000 கோடி.
இத்தனை பணம் படைத்த ரிஷியால் சாமனிய மக்களின் சிரமங்களைப் புரிந்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
பிரதமராகும் சுனாக்குக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.