கோவை மாநகரின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் வெடித்து இறந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் ஜமேஷா முபினுடன் சில நபர்கள் இணைந்து ஜமேசா முபின் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை எடுத்து செல்வது இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜமேஷா முபின் வீட்டில் வெடிபொருட்கள் கைப்பற்றபட்டது தொடர்பாக, முகமது தல்கா (வயது 25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், முகமது தல்கா, அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பியும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக சிறையில் இருப்பவருமான நவாப் கானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கார் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள், இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் செயல்பட்டுள்ளனரா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இன்று சூரிய கிரகணம்: சென்னையில் எப்போது பார்க்கலாம்
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அதிகாரிகள், “உலக அளவில் சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை (இன்று) மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும்போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். அப்போது அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டிருக்கும். இதே போன்று இந்தியாவின் மேற்பகுதியில் உள்ள நகரங்களிலும் இந்த நிகழ்வை காணலாம். இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மை உடைய கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண் திரையில் விழச்செய்தும் பார்க்கலாம்.
இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 8-ந்தேதி முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும்” என்று தெரிவித்தனர்.
தீபாவளி: சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று 3,790 பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். இதில் ஒரு பகுதியினர் தீபாவளியை நேற்று இரவு முடித்துவிட்டு பயணத்தை உடனடியாக மேற்கொண்டனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நாளை திறக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் வெளியூர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,678 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,778 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. நாளை (26-ந்தேதி) 2,954 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து செயல்படுகின்றனர்.
காதலிக்க மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: கேரளாவில் கொடூரம்
காதலிக்க மறுத்ததால் சென்னையில் சமீபத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டது போல், காதலை ஏற்க மறுத்ததால் கேரளா மாநிலம் கண்ணூர் அருகே இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கண்ணூர் அருகே பானூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்ற இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நட்பாக பழகி வந்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஷ்ணு பிரியாவிடம் ஷியாம்ஜித் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது காதலை விஷ்ணு பிரியா ஏற்றுக்கொள்ள மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷியாம்ஜித், விஷ்ணு பிரியாவின் வீட்டுக்குள் புகுந்து அவரது கழுத்தையும் கையையும் அறுத்து கொலைசெய்துள்ளார். இதைக் கண்ட விஷ்ணு பிரியாவின் தாயார் அலறவே அப்பகுதியினர் விரைந்துசென்று பார்த்ததோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கொலை நடைபெற்று மூன்று மணி நேரத்தில் கொலைசெய்த இளைஞர் ஷியாம்ஜித் தானாகவே முன்வந்து போலீசில் சரண்டைந்தார். தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணை கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.