No menu items!

தீபாவளி விற்பனை: ‘டல்’ சிட்டியான ‘டாலர்’ சிட்டி

தீபாவளி விற்பனை: ‘டல்’ சிட்டியான ‘டாலர்’ சிட்டி

தீபாவளிக்கு புதுத் துணி எடுப்பது, ஷாப்பிங் முடித்துவிட்டு அப்படியே ஹோட்டலில் குடும்பத்துடன் சாப்பாடு, நண்பர்கள் – உறவினர்களுடன் அரட்டை என தமிழ்நாடு முழுக்க அனைத்து நகரங்களும் பரபரப்பாக இருக்கிறது. ஆனால், இந்த அனைத்து நகரங்களுக்கும் புதுத்துணி அனுப்பும் ‘டாலர்’ சிட்டியான திருப்பூரோ ‘டல்’ சிட்டியாக காட்சியளிக்கிறது. ‘தீபாவளி போலவே இல்லை’ என அலுத்துக்கொள்கிறார்கள் திருப்பூர்வாசிகள். திருப்பூருக்கு என்ன ஆனது?

திருப்பூரில் சொந்தமாக ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் தருமருடன் பேசினோம்.

“உண்மைதான், தீபாவளி நேரத்தில் இதுபோன்ற ஒரு ‘டல்’ திருப்பூரை இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் கிராமங்களில் இருந்து பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கி வருபவர்களின் முதல் தேர்வாக இருந்தது திருப்பூர்தான். தமிழ்நாடு மட்டுமல்ல பல அண்டை மாநில மக்களையும் அரவணைத்து வாழ்வளித்து வந்தது திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழில். இப்படி வந்தாரை, வாழ்வில் வழி இழந்து நின்றவர்களை வாழவைத்த திருப்பூர் இன்று வலிகள் நிறைந்து காணப்படுகிறது.

திருப்பூரை பொறுத்த வரை நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி என்பதெல்லாம் பழங்கதை. இப்போது முதலாளி நாளை தொழிலாளி என்பதுதான் இன்றைய நிதர்சனம். தற்சமயம் ஏற்பட்டுள்ளது ஒரு பொருளாதார சுனாமி. எண்ணற்றவர்களை வாரி சுருட்டி செல்ல தயாராக இருக்கும் இந்த சுனாமியின் முடிவில் எத்தனை பேர் தப்ப முடியும் என்பதை கணிக்க முடியாது” என்கிறார் தர்மர்.

இதற்கு என்ன காரணம்?

“பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, கொரோனா, பருத்தி இறக்குமதி வரி அதிகரிப்பால் நூல் விலையேற்றம், உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை என தொடர்ந்து அடிமேல் அடி விழுந்ததுதான் திருப்பூரின் இன்றைய நிலைக்கு காரணம்.

திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி என்பது விவசாயி உற்பத்தி செய்யும் பருத்தியில் தொடங்கி பஞ்சாலை, நூல் மில், பின்னலாடை, சலவை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து, கட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக முழுமையடைகிறது. இதன் ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், சுமார் 6000 சிறு நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன. இதுதவிர இவற்றின் துணைத் தொழில்களாக உள்ள போக்குவரத்து, மெக்கானிக், வயரிங், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் விளங்கி வருகிறது.

இந்த தொழில் பிரிவுகள் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளதோடு, நேரடியாக அந்நிய நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள், இதில் ஒரு சில தொழில் பிரிவுகளை மட்டுமே சொந்தமாகக் கொண்டு இயங்கும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள், மேற்கண்ட இருவகை நிறுவனங்களிடமும் மற்றும் அந்நிய நிறுவனங்களின் ஏஜென்டுகளிடமும் குறைந்த லாபத்திற்கு ஆர்டர் எடுத்து ஆடை உற்பத்தி செய்து கொடுக்கும் சிறு நிறுவனங்கள், 5 – 10 மிசின்களை வைத்துக்கொண்டு தையல் வேலை மட்டுமே செய்பவர்கள் மற்றும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தியாளர்கள் என மொத்தம் ஐந்து பிரிவுகளாக ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெற்று வருகிறது.

ஆனால், இதில் எண்ணிக்கை அளவிலும் வேலைவாய்ப்பு அளிப்பதிலும் சிறு நிறுவனங்களே அதிக பங்கு வகிக்கின்றன. இதில் பலநூறு சிறு நிறுவனங்கள் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது போண்டியாகிப் போனது. கட்டிட வாடகை, மின்கட்டணம், வார இறுதியில் கொடுக்க வேண்டிய கூலியாள் சம்பளம் என எப்போதும் நெருப்பின் மீது நிற்கும் நிலையில்தான் சிறு நிறுவனங்கள் இயங்கி வந்தன.

அதிலிருந்து மீள்வதற்குள் ஜி.எஸ்.டி. வந்தது. ‘யானை புகுந்த வெண்கலக் கடையைப் போல’ சின்னா பின்னமாகிப் போனது சிறு நிறுவனங்கள்.

ஜி.எஸ்.டி. என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஒரு பொருளின் உற்பத்தி நிலையிலிருந்து இறுதியாக நுகர்வோரைச் சென்றடையும் வரையுள்ள வர்த்தக சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் வரி என்பதுதான் ஜி.எஸ்.டி-யின் வரி விதிப்பு முறை. ஒரு ஆயத்த ஆடை, பஞ்சு கொள்முதலில் தொடங்கி இறுதியாக பேக்கிங் செய்யப்படுவது வரை சுமார் 10 நிலைகளைக் கடந்து உருவாகிறது. இதன்படி ஒவ்வொரு நிலையிலும் 5, 12, 18, 24 சதவீத வரி விதிக்கிறது ஜி.எஸ்.டி. இதற்கு முன் ‘வாட்’ வரியின்போது விலக்களிக்கப்பட்ட நிட்டிங், வாஷிங், காம்பேக்டிங், துணி ஆகியவற்றுக்கும்கூட ஜி.எஸ்.டி.யில் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. தையல் நூல், அட்டைப்பெட்டி, கம்டேப், பட்டன், லேபில், ஹேங்கர் ஆகியவற்றுக்கு ‘வாட்’ வரியைவிட 3 மடங்கு அதிகமாக ஜி.எஸ்.டி.யில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் வரிவிதிப்பினால் கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, அதற்கான கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நெருக்கடி என்பதைத் தாண்டி,   வரி விதிப்பு நடைமுறைகளும் சிறு நிறுவனங்களை கடும் நெருக்கடிக்குத் தள்ளுவதாக இருந்தது. மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களையும், அடுத்த 10 நாட்களில் விற்பனை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 30ஆம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை ஏழு நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் (input tax recovery)  வரவு வைக்கப்படும் என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். இதனால் உள்ளீட்டு வரி வரவு வைக்கப்படும் வரை கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை பாதுகாப்பதுடன், தன்னிடம் வர்த்தகம் செய்பவர் வரி செலுத்திவிட்டாரா என்பதையும்  கண்காணிக்க  வேண்டியதுள்ளது. மேலும் இதற்காகவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, ஆடிட்டருக்கு மாதக் கட்டணமும் செலுத்துவது ஆகிய செலவுகளும் சிறு நிறுவனங்களின் தலையில் கூடுதல் சுமையாக ஏற்றிவிடப்படுகிறது.

ஆண்டுக்கு 20 லட்சம் வரை வர்த்தகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால், ஜி.எஸ்.டி. பதிவு எண் இல்லாதவர்களிடம் வர்த்தகம் செய்தால் உள்ளீட்டு வரியை திரும்ப பெற முடியாது என்பதால் இத்தகைய சிறு நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் புறக்கணித்து விடுகின்றன. எனவே, வேறு வழியின்றி எல்லா சிறு நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் தொழிலில் நீடிக்க முடியாது.

மேலும், உள்ளீட்டு வரியை 7 நாட்களுக்குள் வரவு வைத்து விடுவோம் என்ற தனது வாக்குறுதியை அரசே காற்றில் பறக்க விட்டுவிட்டது. இதனால் பொருளை விற்பவர்கள் முன்கூட்டியே உள்ளீட்டு வரியையும் பிடித்துக்கொள்வது வாடிக்கையாகி விட்டது. முன்பு மத்திய அரசு தந்த ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகை (duty draw back) 7%, ஜி.எஸ்.டி..க்குப் பின் 2% ஆக குறைக்கப்பட்டுவிட்டது. இன்னொரு பக்கம் ஏற்றுமதி வரிச் சலுகையை லைசன்ஸாக மாற்றினார்கள். அதை பணமாக மாற்ற 10 சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.

இப்படிபட்ட அடுக்கடுக்கான சிக்கல்கள், நெருக்கடிகளால் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலே கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.

Tiruppur Tharmar
தர்மர்

இந்நிலையில்தான் கொரோனா வந்தது. அதனால் உருவான பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, கொரோனாவையே நம் பலமாக மாற்றிக்காட்டுவார் பிரதமர் மோடி என்று சொல்லப்பட்டது. கொரோனா பாதிப்பால் சீனாவிற்கு ஆர்டர் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை இந்தியாவிற்குக் கொடுப்பார்கள், அதன் மூலம் திருப்பூரின் 26,000/- கோடி ஏற்றுமதி வர்த்தகத்தை லட்சம் கோடிக்கு உயர்த்த முடியும் என்றார்கள். பிரதமர் மோடியும் சீனாவிலிருந்து 1000 கம்பெனிகள் வெளியேறும், அதிலிருந்து 300 கம்பெனிகளையாவது இந்தியாவுக்கு அழைத்து வருவோம் என்று அறிக்கை வெளியிட்டார். பாஜகவினர் ஒருபடி மேல போய், ‘சீனாக்காரன் ஒழிந்தான், இந்தியா வல்லரசு ஆகிடும்’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

ஆனால், அப்படி புதிதாக ஆர்டர்கள் வந்து குவிந்துவிடவில்லை. மாறாக ஏற்கெனவே இருந்த ஆர்டர்கள் வெளியேறத் தொடங்கின. நமது நாட்டில் இயங்கும் பன்னாட்டு ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்த வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக வங்கதேசத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகப்படுத்தியுள்ளன. நம்மிடம் இருந்து எடுப்பதை விட அவர்களிடம் இருந்து எடுத்தால் கால இடைவெளி குறைவதுடன், லாபமும் அதிகரிக்கிறது. இதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் நாம் இருந்த நிலமை இப்போது மாறிவிட்டது.

இன்னொரு பக்கம் உலகளவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி, டாலர் மதிப்பு கூடுவது, மத்திய அரசு ஏற்றுமதி வரியை அதிகப்படுத்தியுள்ளது போன்ற பல்வேறு காரணங்களால், பண்டல்கள் போட்டு தயார் நிலையில் இருக்கும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. என் நிறுவனத்தில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் சரக்கு எடுக்கப்படாமல் நிற்கிறது. தயாரான பண்டல்கள் போகாததால் அடுத்த தயாரிப்புக்கு போக முடியவில்லை.

வருடம்தோறும் கிறிஸ்துமஸ், புது வருடப் பிறப்புக்கு ஆர்டர்கள் குவியும். சென்ற வருடம் இந்த இரண்டு பண்டிகைகளின் போது 16 லட்சம் ஆடைகள் என்றிருந்த ஆர்டர் இந்த வருடம் 5 லட்சமாக குறைந்துவிட்டது. ஆனால்,  தேங்கிக் கிடக்கும் ஆர்டர்களோ அதைவிட அதிகமாக இருக்கிறது. எனவே, இனி பொங்கலுக்குப் பிறகுதான் வேலையைத் தொடங்க முடியும் என்று கருதுகிறோம்.

இந்த வருடம் இதுவரை திருப்பூர் ஏற்றுமதி 8 ஆயிரம் கோடியை தாண்டவில்லை. ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை சேர்ந்து 15 ஆயிரம் கோடியை தாண்டவில்லை. இதுவே சென்ற வருடம் இரண்டும் சேர்த்து 60 ஆயிரம் கோடியாக இருந்தது.

இப்படி ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடும் வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், உள்நாட்டு ஆயத்த ஆடை வர்த்தகமும் வங்கதேச நாட்டிலிருந்து வரியின்றி இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளால் கடும் நெருக்கடியை சந்திக்கிறது.

இதனிடையே, எரிகிற வீட்டில் கிடைப்பது லாபம் என்பது போல மாநகராட்சி சொத்து வரியை 100% உயர்த்தியுள்ளது. அதனால் வீட்டு வாடகை, கம்பெனி வாடகையை அதிகப்படுத்தியுள்ளனர் கட்டிட உரிமையாளர்கள். சொந்தக் கட்டிட உரிமையாளர்கள் அல்லது கனிசமான அளவு பண வசதியுள்ள பனியன் கம்பெனி முதலாளிகள்தான் இனி தாக்குப் பிடிக்க முடியும் என்னும் நிலை.

தொழிலாளிகள் நிலமையோ இன்னும் மோசம். திருப்பூர் முழுவதும் 40 சதவிகிதத்துக்கும் மேல் வேலைகள் குறைந்துவிட்டது. 24 மணி நேரமும் இயங்கிய நிறுவனங்களிலேயே இப்போது ஒரு ஷிப்ட்தான் நடக்கிறது. இதனால் வீட்டு வாடகையே கொடுக்க முடியாத நிலையில்தான் பலர் இருக்கிறார்கள்” என்கிறார், தர்மர்.

தீர்வு என்ன?

“சிறு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு ஜிஎஸ்டி வரியை ஒரே நிலையான 5%க்குள் நிர்ணயம் செய்ய வேண்டும்

பழைய கடனுக்கான வட்டியை 6 மாதத்திற்கு ரத்து செய்ய வேண்டும்

ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை 10% ஆக உயர்த்த வேண்டும்.

பனியன் நிறுவனங்களுக்கான மூலப் பொருட்கள், உதிரிப் பாகங்களை உள்நாட்டில் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய அரசு தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.

நகையை அடகு வைத்து தொழில் செய்தால் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்க வங்கிகளுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும்.

பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்” என்கிறார் தர்மர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...