ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் ஆணையம் வர இயலாது” என்று குறிப்பிட்டுள்ளது. ஆணைய விசாரணையின் அடிப்படையில் சகிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைள்ளது.
மேலும், “ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர். ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை. சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை அது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்” என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த ஆணைய விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை விதிகளின்படி எதிர்கட்சி துணை தலைவர் பதவியே இல்லை: சபாநாயகர்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதன்பிறகு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தபோது அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டதின் படி, எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வம் இருந்து வருகிறார். இடையில் இடைக்கால பொதுச்செலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் கையெழுத்திட்ட மனுவை என்னிடம் அளித்துள்ளனர். அதில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதில் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும், எனவே துணை தலைவர் இருக்கையை அவருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி என்பது சட்டப்பேரவை விதிகளின்கீழ் கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே சட்டப்பேரவை விதிகளின்கீழ் வரும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். எனவே, தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும். மற்றபடி இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது எனது உரிமைக்கு உட்பட்டது” என்று கூறினார்.
எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்: ஈபிஎஸ் தரப்பு நாளை உண்ணாவிரதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.