டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முக்கிய போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இத்தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பேட்ஸ்மேன்கள் யார் என்று பார்ப்போம்…
விராட் கோலி:
இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய வீரராக விராட் கோலி இருப்பார் என்று சில மாதங்களுக்கு முன் யாராவது சொல்லி இருந்தால், அவரைப் பார்த்து மற்றவர்கள் சிரித்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு பழைய கோலி திரும்பி வந்துள்ளார். 1,020 நாட்களுக்குப் பிறகு இந்த தொடரில் சதம் அடித்த பிறகு பழைய அதிரடி ஆட்டமும், தன்னம்பிக்கையும் கோலிக்கு மீண்டும் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மீண்டும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் விராட் கோலி. இடைப்பட்ட காலத்தில் கேப்டன் ஆனதால் ஏற்பட்ட அழுத்தத்தால், அவரது பேட்டிங் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிடம் வழங்கப்பட்ட நிலையில், எந்த கட்டுப்பாடும் இல்லாத சுதந்திர வீரராக அவர் பேட்டைச் சுழற்றி வருகிறார். கடந்த மாதத்தில் தான் ஆடிய 9 போட்டிகளில் மட்டும் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை விளாசியுள்ள கோலி, அதே ஃபார்மை இந்த டி20 உலகக் கோப்பையிலும் தொடர்ந்தால் சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்வது உறுதி.
முகமது ரிஸ்வான்:
டி20 போட்டிகளுக்கு லாயக்கில்லாதவர் என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட முகமது ரிஸ்வான்தான் இப்போது பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். பொதுவாக அதிரடியாக ஆடும் வீரர்கள்தான் டி20 போட்டிகளில் நாயகர்களாக இருப்பார்கள். ஆனால் முகமது ரிஸ்வான் ஒன்றும் அப்படிப்பட்ட அதிரடி வீரரல்ல. ஓரளவு நிதானமாகத்தான் ஆடுவார். அவரது ஸ்டிரைக் ரேட் 128.05-தான். ஆனால் அவரை அத்தனை சீக்கிரத்தில் அவுட் ஆக்க முடியாது.
ராகுல் திராவிட்டை நினைவுபடுத்துவதுபோல் விக்கெட்டின் ஓரிடத்தில் அவர் நிலையாக நிற்க, மறுபுறத்தில் மற்ற வீரர்கள் சுழற்சி முறையில் ரன்களைக் குவிப்பார்கள். ஆரம்பத்தில் நிதானமாக ஆடும் ரிஸ்வான், கடைசி கட்டத்தில் தானும் அதிரடியில் பங்குபெறுவார். இதன்மூலம் பாகிஸ்தானின் வெற்றியை எளிதாக்குவார். இந்த டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றுவது இவரது பேட்டிங்கைப் பொறுத்தே உள்ளது.
டேவிட் மில்லர்:
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான டேவிட் மில்லரின் வாழ்க்கையை 2 பிரிவுகளாகப் பிரிக்கலாம். 2022-ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதான கிரிக்கெட் பயணம் முதல் பாகமென்றால், ஐபிஎல் தொடருக்குப் பிறகான கிரிக்கெட் பயணம் இரண்டாவது பாகம்.
இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்புவரை டேவிட் மில்லரை யாரும் பெரிதாக கருதவில்லை. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இந்த ஆண்டில் 449 ரன்களை டேவிட் மில்லர் குவிக்க, அவரது கிராப் ஏகத்துக்கும் ஏறியது. இந்த தொடரில் 16 போட்டிகளில் வெறும் 7 முறைதான் எதிரணி பந்துவீச்சாளர்களால் அவரை அவுட் ஆக்க முடிந்துள்ளது.
தனது அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வாங்கிக் கொடுத்த டேவிட் மில்லர், இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியிலும் ஆதிக்கம் செலுத்தினார். 23 வயதிலேயே தென் ஆப்பிரிக்க அணிக்கான மிகச்சிறந்த பினிஷராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், இபோது தனது 33-வது வயதில்தான் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி சதத்தை அடித்ததன் மூலம் இதை இன்னும் உறுதிப்படுத்தியுள்ள மில்லர், தென் ஆப்பிரிக்கா பட்டம் வெல்ல கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 107 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள டேவிட் மில்லரின் ஸ்டிரைக் ரேட் 145.49. சராசரி ரன்கள் 33.91.
டேவிட் வார்னர்:
கடந்த முறை ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதில் டேவிட் வார்னரின் பங்கு அதிகம். அந்த தொடரில் 3 அரைசதங்களுடன் மொத்தம் 289 ரன்களைக் குவித்தார் டேவிட் வார்னர். அப்போது இருந்த அதே வேகம் டேவிட் வார்னரிடம் இன்னும் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம்.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 75 ரன்களையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 73 ரன்களையும் குவித்து இதை மீண்டும் நிரூபித்துள்ளார் டேவிட் வார்னர். தனது கடைசி டி20 உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் ஆடும் டேவிட் வார்னர், பழைய மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.