வழக்கமாக அபீசுக்குள் கம்பீரமாக நுழையும் ரகசியா, இன்று தலையை தொங்கப் போட்டுக்கொண்டு வந்தாள்.
“என்ன தேவர் குருபூஜைக்கு பிரதமர் வரப்போறதா சொன்ன செய்தி பொய்யாயிடுச்சேங்கிற வருத்தமா?”
“அப்படி சொல்ல முடியாது. தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவதாகதான் இருந்திருக்கு. ஆனா வேறு சில காரணங்களுக்காக திட்டம் மாறியிருக்கு.”
“அப்படிலாம் மாறுவதற்கு வாய்ப்பில்லை. பிரதமர் நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவாகிவிடும். இப்படி ஒரு நிகழ்ச்சியே இல்லைனு சொல்லியிருக்காரே அண்ணாமலை.”
“அவர் அப்படிதானே சொல்ல வேண்டும். தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவதற்கு அண்ணாமலைக்கே விருப்பம் இல்லைனு கட்சிக்காரங்க சொல்றாங்க. அதுக்கு அவர் சொல்ற லாஜிக் நியாயமாபடுது. தேவர் குருபூஜைக்கு பிரதமர் வந்தா மத்த சாதியினர் நிகழ்ச்சிகளுக்கும் வர வேண்டியிருக்கும். அது சரியாக இருக்காது என்று கூறியிருக்கிறார். ஆனால், முக்குலத்தோர் சமூகத்தினர் வாக்குகள்தான் தேர்தலை முடிவு செய்யும்னு டெல்லி பாஜக மேலிடத்துல சொல்லியிருக்காங்க. ஆனா சாதி விஷயத்துக்குள்ள இப்ப நுழைய வேண்டாம்னு அமித்ஷா முடிவு பண்ணியிருக்கார். அதனால பிரதமர் வரலனும் செய்தி இருக்கு.”
“அப்போ, அண்ணாமலை சொல்றத பாஜக மேலிடம் கேக்குதுனு புரிஞ்சுக்கலாமா?”
“ஆனா பிரதமர் தவிர்த்தற்கு வேற காரணமும் இருக்கு. இப்போ இந்திப் பிரச்சினை இங்க கிளம்பியிருக்கு. இந்த சூழல்ல பிரதமர் வர்றது சரியா இருக்காதுனும் சொல்லப்பட்டிருக்கு.”
“அப்போ… பிரதமர் வர்றதுன்றது வதந்தி இல்லனு சொல்ற?”
“ஆமா. இந்த சந்தேகம்… முதல்வருக்கே வந்துருக்கு. நமக்கு எந்த இன்ஃபர்மேஷனுமே வரலையேனு சீஃப் செக்ரட்டரிகிட்ட கேட்டிருக்காரு. சீஃப் செக்ரட்டரி டெல்லி பிரதமர் அலுவலகத்துல விசாரிச்சுட்டு பிரதமர் வரலன்ற தகவலை முதல்வர்கிட்ட சொல்லியிருக்கார். இந்த விழாவுக்கு பிரதமர் வராட்டியும் தேவர் சமூகம் சார்ந்த ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சு, அதுக்கு பிரதமரைக் கொண்டு வரணுங்கிறதுல பாஜகவில சிலர் ரொம்பவே உறுதியா இருக்காங்க. இவங்களாம் ஒபிஎஸ் ஆதரவு பாஜகவினர். அதனால அப்படி ஒரு விழாவை தமிழகத்தில் சீக்கிரமா எதிர்பார்க்கலாம்.”
“பார்க்கலாம் சாதி விழாவுல பிரதமர் கலந்துக்கிறாரானு.”
“தமிழ் நாட்டுல இன்னொரு நிகழ்ச்சியும் நடக்கப் போகுது. தமிழார்வலர்கள் எல்லோரும் ஒரு பெரிய பேரணி நடத்தப் போறாங்களாம். மாவட்டம்தோறும் பேரணி நடத்தி, இறுதியில் சென்னைல ஜனவரி 26ஆம் தேதி பேரணியை முடிக்கப் போறாங்களாம். மத்திய அரசு இந்தியைத் திணிக்க நினைப்பதற்கு எதிரா இந்த பேரணியை நடத்தப் போறாங்களாம். இதுல கட்சி சாயம் இருக்காது என்கிறார்கள்.”
“கட்சி பின்னணி இல்லாம தமிழார்வலர்களால இப்படி பேரணி நடத்த முடியுமா?”
“இதெல்லாம் கேக்கக் கூடாது. 41 ஆயிரம் கோடி ரூபாய் விஷயத்தை கேள்விப்பட்டிங்களா?”
“அதிமுக பிரச்சினையில் ஓபிஎஸ் அனுமதித்தால் புதுசா 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியத்தை வெளியிடப் போறதா ஜே.சி.டி.பிரபாகரன் சொல்லி இருக்காரே..அதானே?”
“ ஆமாம். ஆனால், இதையெல்லாம் இப்ப சொல்ல வேண்டாம்னு அவர்கிட்ட ஓபிஎஸ் கண்டிப்பா சொல்லிட்டாராம். அதேசமயம் எடப்பாடி தரப்பு ஆட்கள் அவர்கிட்ட, அது என்ன 41,000 கோடி ரூபாய்னு அவர்கிட்ட கேட்க, ‘அவர் எதோ வெறுப்பில் சொல்றார். விட்டுத் தள்ளுங்க’ன்னு சொல்லியிருக்காரு எடப்பாடி. ஆனா உளவுத்துறை இதை விடறதா இல்லை. அவங்க இதைப்பத்தி விசாரிச்சு இருக்காங்க. அப்ப, ‘41ஆயிரம் கோடி ரூபாய் சசிகலா சம்மந்தப்பட்டது. அதனால்தான் எடப்பாடி மீது தனிப்பட்ட முறையில் அவதூறுகளைச் சொல்லாமல் சசிகலா பேசுகிறார். வேறு ஒருவர் மூலம் இதுபற்றி சசிகலா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்’னு தெரியவந்திருக்கு. இதுபத்தி உளவுத் துறையினர் முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க.”
“நம்ம பாக்கெட்ல 40 ரூபாய் இல்ல. இவங்க 41 ஆயிரம் கோடி ரூபாய் பத்தி பேசுறாங்க. அநியாயம். ஆமா, திமுகவுல மூத்த அமைச்சர்கள் மத்தியில ஏதோ பனிப்போர் நடக்கறதா பேசிக்கிறாங்களே?”
“ஆமா. இதைப் பத்தி கட்சிக்காரங்க நிறைய புலம்புறாங்க. இப்போ முதல்வருக்கு நெருக்கமா இருக்கிறது எ.வ. வேலுவும் சேகர் பாபுவும்தான். இவங்களோட முக்கிய வேலையை மற்ற மூத்த அமைச்சர்கள் பத்தி முதல்வர்கிட்ட கோள் சொல்றதுதான்னு மூத்த அமைச்சர்கள் மத்தியில ஒரு பேச்சு இருக்கு. துரைமுருகன், பொன்முடி, டி.ஆர். பாலுவுக்கு எதிரா இவங்க லாபி பண்றதாவும் சொல்றாங்க. இது முதல்வர் கவனத்துக்கும் வந்துருக்கு.”
“முதல்வர் என்ன சொன்னாராம்?”
“கட்சிக்குள்ள இதெல்லாம் சகஜம்தான். அவர் பார்க்காத பிரச்சினைகளா. அதனால அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள்.”
“பிடிஆரும் வருத்தப்பட்டிருக்கிறாரே?”
“ஆமாம். பிடிஆர்கிட்ட முதல்வர் பேசியிருக்கிறார். அவருக்கு பிடிஆர் மேல நிறைய மரியாதை இருக்கு. வருத்தப்படாதீங்கனு சொன்னார்னு சொல்றாங்க. அது மட்டுமில்லாம மாநில அளவில் பிடிஆர்க்கு கட்சியில் ஒரு பதவி கொடுக்கவும் திட்டமிட்டிருக்கறதா கட்சியில் சொல்றாங்க. பிடிஆருக்கு மதுரைல நல்ல செல்வாக்கு இருக்குனு முதல்வருக்குத் தெரியும், அதனால பிடிஆரை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மதுரைல அமைச்சர் மூர்த்தியும் மாவட்டச் செயலாளர் தளபதியும் அழகிரி ஆதரவாளர்களாக இருந்தவர்கள். அதனாலேயே ஸ்டாலினிடம் நெருங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.”
“ஆளும் கட்சிக்கு வெளில இருக்கிற கஷ்டங்களை விட உள்ளுக்குள்ள இருக்கிற கஷ்டங்கள்தாம் அதிகம் இருக்கு போல.”