கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, “வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதால் தனிநபர் சுதந்திரமோ இஸ்லாமிய மாணவிகளின் உரிமையோ பறிபோகாது” என்று கூறியுள்ளார். நீதிபதி ஹேமந்த் குப்தா வரும் 16ஆம் தேதி (அக்.16) ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ள மற்றொரு நீதிபதி சுஷந்த் துலியா, “ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறையா இல்லையா என்று கர்நாடக உயர் நீதிமன்றம் முடிவு செய்ததே தவறு. ஒரு பழக்கம் நடமுறையில் உள்ளதா அது நிறுவப்பட்டதா, அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை மட்டுமே நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பெண் குழந்தைகளின் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அந்த இலக்கில் எக்காரணம் கொண்டும் தடை வரக்கூடாது. இந்தியாவின் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த சமூகம் இனியும் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறோமா என்பதை நாம் யோசிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஹிஜாப் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனைக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. இனி தலைமை நீதிபதி இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும் 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இதற்காக ஆண்டுக்கு 3,650 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. இந்த தொகையை மின் வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்துக்கான செலவு ரூ.5572 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, வீடு வாடகைக்கு விட்டிருக்கும் சிலர் வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்து வருகின்றனர் என புகார் எழுந்தது. மேலும், சிலர் ஒரே வீட்டிற்கு 3, 4 மின் இணைப்பு பெற்றுள்ளதால் அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொன்றும் 100 யூனிட் இலவசம் என 500 யூனிட் வரை மானிய பிரிவில் வந்து விடுவதால் கட்டணம் குறைந்து விடுகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இப்போது இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பெண்கள் நரபலி எதிரொலி: கேரளாவில் 5 ஆண்டுகளில் காணாமல் போனவர்கள் குறித்து தீவிர விசாரணை
தமிழ்நாட்டில் தர்மபுரியை சேர்ந்த பத்மா உள்பட 2 பெண்கள் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்களை நரபலி கொடுத்த மந்திரவாதி ஷாஃபி, 2018 முதல் பகவல் சிங் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த 4 ஆண்டுகளில் மேலும் சில நரபலி பூஜைகளை ஷாஃபி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். கொச்சி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் அவர்கள் காணாமல் போன வழக்கை கேரள போலீஸ் மீண்டும் விசாரிக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள பொது வாக்கெடுப்பை நடத்தியது, ரஷ்யா. பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால், இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்தன.
இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை வைத்தது. ரஷ்யாவின் இந்த கோரிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா உள்பட 107 ஐ.நா. உறுப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன. இதனால் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நயன் – விக்கி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்: விசாரிக்க குழு அமைப்பு
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருந்தார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பதே அது. அதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பின்பற்ற வேண்டிய சட்ட விதிகளை நடிகை நயன்தாரா மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனையடுத்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தை விசாரிக்க சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.