No menu items!

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா – நயன்தாராவிடம் விசாரணை

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா – நயன்தாராவிடம் விசாரணை

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் கடந்த 9-ம் தேதி பதிவிட்டார். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.

கர்ப்பப்பை குறைபாடு, கரு கலைவது போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகைத் தாயை நாட முடியும். வாடகைத் தாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், திருமணம் முடிந்த 4 மாதத்தில் குழந்தைகள் பிறந்துள்ளதால், திருமணத்துக்கு முன்பே நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர், வாடகைத் தாயை நாடினரா, விதிமுறைகளை மீறி நடந்துள்ளனரா என பல சர்ச்சைகள் எழுந்தன.

இதுபற்றி சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அவர்கள் விதிமுறைகளின்படி வாடகைத் தாய்மூலம் குழந்தைகளை பெற்றுள்ளனரா என்று மருத்துவம், ஊரகநலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) மூலம் விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து  டிஎம்எஸ் இயக்குநர் (பொறுப்பு) ஹரிசுந்தரி இன்று, “நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தைகள் பெற்றது தொடர்பாக விசாரிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுபற்றி விசாரித்து வருகிறோம். முறைப்படி விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பெண்ணை நரபலி கொடுத்து உடலை சாப்பிட்ட கேரளா தம்பதி: அதிர்ச்சி சம்பவம்

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இவர்கள் இருவரையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் விசாரணையில், மந்திரவாதியான முகம்மது ஷபி, திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், இவரது மனைவி லைலா மூவரும் இணைந்து 2 பெண்களையும் நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது.

பகவல்சிங்கிற்கு அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் இருந்துள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என மந்திரவாதி முகமது ஷபியை சந்தித்து பேசியிருக்கிறார். 2 பெண்களை நரபலி கொடுத்தால் நிறைய செல்வம் கிடைக்கும் என்று முகமது ஷபி கூற, அதற்கு பகவல்சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்.

லாட்டரி விற்பனையில் தனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இருவரையுமே வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி முகமது ஷபி, தம்பதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து, சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் 3 பேரும் சேர்ந்து இருவரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சாப்பிட்டுள்ளனர். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார். பின்னர் இரு பெண்களின் ரகசிய இடத்தில் கத்தியால் கீறி அந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், அவரது மனைவி லைலா, போலி மந்திரவாதி முகம்மது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முஹம்மது ஷபி மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல், பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும், 75 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி பயிற்று மொழி விவகாரம்: பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுன்றக் குழுவின் 11-வது அறிக்கையில், “இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயர் கல்வி நிறுனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் மூலம் பயிற்றுவிப்பதை விருப்பத் தேர்வாக மாற்றலாம்” என பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அதில் ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்க முடியாது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை மட்டும் முதன்மை மொழியாவோ அல்லது பயிற்று மொழியாகவே மாற்ற முடியாது. ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இந்த நிலையில், அவர்களில் பாதி பேருக்கு மேல் உள்ளவர்களை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சமூக நலனுக்கு நல்லது இல்லை. பயிற்று மொழிகள் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது. இது, நம்முடைய கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கி.ராபடித்த பள்ளி புதுப்பிப்பு: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கல்வி பயின்ற கோவில்பட்டி அடுத்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அவரது நினைவாக ரூ.25 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “‘கி.ராஜநாராயணனின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிபழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி, 1946-ம் ஆண்டு கட்டப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவை இழந்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பள்ளிக் கட்டிடத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் நடந்த விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கி.ரா.வின் மகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...