இந்திய அரசியல் சரித்திரத்தில் கடைசிவரை போராளியாகவே வாழ்ந்த அரசியல் தலைவர்கள் வெகு சிலர்தான். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவர் முலாயம் சிங் யாதவ்.
உத்தரபிரதேச மக்களால் ‘நேதாஜி’ என்று அன்பாக அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், சிறுவயதில் மல்யுத்த வீரராக இருந்தார். மல்யுத்த களத்தில் எதிராளியை தலைக்கு மேல் சுழற்றி அடிப்பது முலாயம் சிங்கின் ஸ்டைல். பிற்காலத்தில் அரசியலில் நுழைந்த பிறகும் மல்யுத்த பாணியை பின்பற்றிய முலாயம் சிங் யாதவ், தன் சாணக்கியத்தனத்தால் பல எதிராளிகளை தலைகுப்புற கவிழ்த்துள்ளார்.
அப்படி அவர் வீழ்த்திய அரசியல் கட்சிகளில் மிக முக்கியமான கட்சி காங்கிரஸ். உத்தரப் பிரதேச மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸை வீழ்த்தி 1989-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனார் முலாயம் சிங் யாதவ்.
கலைஞருக்கு அண்ணா எப்படியோ, அப்படித்தான் முலாயம் சிங் யாதவுக்கு ராம் மனோஹர் லோகியா. சிறுவயதில் ராம் மனோஹர் லோஹியாவின் சித்தாந்தத்தாலும், அவர் எழுதிய சில அரசியல் கட்டுரைகளாலும் ஈர்க்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், அவரது வழியில் செயல்பட விரும்பி அரசியல் களத்தில் குதித்தார். 1967-ம் ஆண்டில் முதல் முறையாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜஸ்வந்த் நகர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்ட முலாயம் சிங், 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார்.
அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முலாயம் சிங் என்றும் சளைத்ததில்லை. 1975-ம் ஆண்டில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடம் செய்தபோது பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய முலாயம், அதற்காக 17 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 7 முறை சிறை சென்ற முலாயம் சிங் யாதவ், கடைசிவரை ஒரு போராளியாகவே வாழ்ந்தார்.
1996-ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி அமைந்தபோது, பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட தலைவர்களில் முக்கியமானவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் அப்போது லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்த்ததால் அவர் பிரதமராக முடியவில்லை. பிற்காலத்தின் 2014-ம் ஆண்டில் 3-வது அணி வெற்றி பெற்றால் முலாயம் சிங் யாதவ் பிரதமராவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் முலாயமின் சமஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்து பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற, பிரதமராகும் அவரது ஆசை நிராசையாகிப் போனது.
பாரதிய ஜனதா கட்சியை ஒரு காலத்தில் மிகத் தீவிரமாக எதிர்த்த நபர் முலாயம் சிங் யாதவ். 1990-களில் அவர் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி ரதயாத்திரை மேற்கொண்டார் பாஜக தலைவர் அத்வானி. அப்போது தனது மாநிலத்துக்குள் ரத யாத்திரை நுழைந்தால், அத்வானியை கைது செய்வேன் என்பதில் தீவிரமாக இருந்தார். அவரது இந்த நிலை, காங்கிரஸ் வசம் இருந்த சிறுபான்மையினர் வாக்குகளை முலாயம் சிங் யாதவ் வசம் திருப்பியது.
ஆனால் அதே முலாயம் சிங் யாதவ், பிற்காலத்தில் பாஜக பக்கம் கொஞ்சம் சாய்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2002-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளரான அப்துல் கலாமுக்கு ஆதரவு அளித்தார் முலாயம் சிங். இதேபோல் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது மகன் அகிலேஷ் யாதவ், மோடிக்கு எதிராக தீவிரமாக இயங்கி வந்த நிலையில், ‘மீண்டும் முதல்வராக வருவீர்கள்’ என்று மோடியை வாழ்த்தினார். இதனால் அவர் ஒரு குழப்பவாதியாக சித்தரிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முலாயம் சிங் யாதவின் கடைசிக் காலம் அத்தனை நிம்மதியாக இல்லை. மகன் அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட ஊடல்களே அதற்கு காரணம். தேசியா அரசியலில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறி, தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார் முலாயம் சிங் யாதவ். தன் சொல்படி மகன் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவார் என்று அவர் எதிர்பார்த்தார்.