நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அக்கடிதத்தில், “நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் திமுக தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன். உங்கள் கருத்தோடு நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். இந்த வேலைத்திட்டத்தால் நம் தமிழினமே பெரும் அழிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளதை நன்றாக உணர்கிறேன். உங்களை இழந்ததற்கு திமுக தான் வருந்தி, திருந்த வேண்டும்.
திமுகவை விட்டு வெளியேறிவிட்டதால், தனியொரு பெண்மகள் என்று தயங்காமல் உங்கள் கருத்துக்களைத் துணிவுடன் எடுத்துக் கூறுங்கள். பாஜகவை விமர்சிக்க திமுகவில் இருப்பது தடை உள்ளது. அதனால் நான் விலகி சுதந்திரமாக தனித்து நின்று விமர்சிப்பேன் என்ற உங்களது கொள்கை உறுதியை கண்டு வியக்கிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழ்நாடு முதலிடம்
தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்தி பிரச்சார சபா அறிவித்துள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 5 சதவீதம் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இந்தி கற்போர் 1.31 லட்சமாக உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 34,589 பேர் இந்தி பயின்று வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் இந்தி கற்றாலும் சரளமாக பேசும் திறனை பெறவில்லை. இந்தி இளநிலை, முதுநிலை டிப்ளமோ படிப்புகளை படிக்க தமிழ்நாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை” என்றும் இந்தி பிரச்சார சபா தெரிவித்துள்ளது.
முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்: உயிர்காக்கும் மருந்துகளுடன் தீவிர சிகிச்சை
உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82), உயிர் காக்கும் மருந்துகளுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், கடந்த 2-ம் தேதி அன்று தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் மருந்துகளுடன், மருத்துவ நிபுணர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி. முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இவர் இருந்தார். உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு இவர் 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது உத்தர பிரதேசம் மைன்பூரி மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் ஏழாவது முறையாக எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதிக்கான நோபல் பரிசு: பெலாரஸ் மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி தேர்வு
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளியான அலெஸ் பியாலியாட்ஸ்கி 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அலெஸ் பியாலியாட்ஸ்கி , ரஷ்யன் மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் (Russian human rights organisation Memorial) மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு (Ukrainian human rights organisation Center for Civil Liberties) ஆகிய இரு அமைப்புகளிலும் முக்கிய பங்காற்றி வருபவர். பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர். இதன் காரணமாக 2011 முதல் 2014 வரை சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை அடுத்து 2020இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணையின்றி இவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராமர், சீதா, ஹனுமன், ராவணனை தவறாக சித்தரித்ததாக புகார்: ‘ஆதி புருஷ்’ படத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு
‘பாகுபலி’ புகழ் பிரபாஸ், ராமர் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக உள்ள புராண திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வெளியிடப்பட்டது. இந்த 1.46 நிமிட முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இதில் வெளியான காட்சிகளில் ராமர், சீதை, ஹனுமன் மற்றும் ராவணன் சித்தரிக்கப்பட்ட விதம், இந்து அமைப்பினர் மற்றும் பாஜக தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றாமல் படத்தை வெளியிட முடியாது எனக் கூறி ஆதி புருஷின் இயக்குநர் ஓம் ராவத்துக்கு கண்டனக் கடிதங்கள் குவியத் தொடங்கியுள்ளன.
பாஜக ஆளும் மத்தியபிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “ராமரும் ஹனுமரும் தோல் உடைகளில் காட்டப்பட்டுள்ளனர். சீதா மாதாவுக்கு கைகள் மறைக்காத ‘ஸ்லீவ்லெஸ்’ உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்து மதத்தை குறி வைத்து அவமதித்துள்ளனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது” என்று கூறியுள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் திரைப்படத்துக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.