ஐடி உலகில் இப்போது வாரத்துக்கு 32 மணி நேரம், 4 நாட்கள்தான் வேலை. இப்படி வேலை நேரம் குறைக்கப்பட்ட பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தை ஐடி ஊழியர்கள் எப்படி செலவிடுகிறார்கள் என ஒரு ஆய்வு செய்யப்பட்டது. பலர் இந்த கூடுதல் நேரத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் அல்லது மற்ற எதாவது விஷயத்தில் செலவு செய்வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முடிவோ பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் வகையில் இருந்தது.
அந்த ஆச்சர்யம் என்ன?
கொரோனாவுக்கு முன்பு வரைக்கும் ஐடி உலகில் எல்லா நிறுவனங்களிலும் சராசரியாக வாரத்திற்கு 40 மணி நேர வேலை என்பதுதான் வழக்கத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை பார்த்ததால் ஊழியர்களின் வேலை நேரம், வாழ்க்கை, உறக்கம், உணவு என அனைத்தும் மாறிப்போனது. இது உற்பத்தியை பாதித்தது. இதனால் சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் வார வேலை நேரத்தை 32 மணி நேரமாக குறைத்து, ஒரு வாரத்துக்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும் என்று அறிவித்தது.
இந்த வேலை நேரம் குறைப்பு ஊழியர்களின் சிந்தனை, ஆற்றல், வேலை திறன் ஆகியவற்றை புத்துணர்வுடன் வைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட முடியும் என்ற கணக்கும் அதனுள் இருந்தது. இந்த உற்சாகத்தில் 5 நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளை, ஊழியர்கள் 4 நாட்களுக்குள் செய்து முடிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இப்படி வேலை நேரம் குறைக்கப்பட்ட பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தை ஐடி ஊழியர்கள் எப்படி செலவிடுகிறார்கள் என முன்னணி ஆராய்ச்சியாளர் ஜூலியட் ஸ்கோரின் ஆய்வு மேற்கொண்டார். அதில், வாரம் 32 மணி நேர வேலைக்கு மாறியபின்னர் ஊழியர்கள் ஒரு இரவில் 7.58 மணி நேரம் தூங்குகிறார்கள் என தெரிய வந்தது. வாரம் 40 மணி நேரம் வேலை பார்த்தபோது ஓர் இரவில் 7ஐவிட குறைவான மணி நேரம்தான் அவர்கள் தூங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதன் இரவு நேரத்தில், குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் அவசியமாகிறது. ஆனால், ஐடி ஊழியர்களுக்கு வேலைப் பளுவினால் இது சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால், வாரம் 32 மணி நேரம் வேலைத் திட்டத்தால் இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 7 மணி நேரம் கூட முழுமையாக தூங்க முடியாத நிலையில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 42.6-இல் இருந்து, 14.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.