தமிழ்நாட்டில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6ஆம் தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
5 ஜி சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
5 ஜி அலைக்கற்றை ஏலத்தை சமீபத்தில் மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. இதனையடுத்து, நாட்டில் 5 ஜி சேவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அதை பிரதமர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி 5 ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஜி தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல் தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திருப்பம்: மும்முனை போட்டி உறுதி
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்தார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது.
ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை: அமைச்சர் பொன்முடி விளக்கம்
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “ஓசி பேருந்து பயணம் என விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை. கீழே மக்கள் பேசியதை நான் கலோக்கியலாக சொன்னதைத் தவறாக புரிந்துகொண்டனர்” என்று கூறினார்.
பெண் நீதிபதியை மிரட்டியதாக வழக்கு: இம்ரான் கான் நேரில் மன்னிப்பு கேட்டார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக பேசினார். மேலும், காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதால் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தமது பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த பேச்சு தொடர்பாக இம்ரான்கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்ரான் கான் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.