இன்று விஞ்ஞானம் ஏகப்பட்ட வளர்ச்சியை கண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கற்பனையில் மட்டுமே இருந்த பல விஷயங்களை இப்போது கண்களுக்கு காட்டிவருகிறது இன்றைய அறிவியல் வளர்ச்சி. அந்த வரிசையில், இப்போது ஒரு புதிய ஆய்வில், தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை, தாய் சாப்பிடும் ஒரு சில வகை உணர்வுகளுக்கு மகிழ்ச்சியாக ரியாக்ட் செய்வதாகவும் ஒரு சில வகை உணவுகளுக்கு சோகமாகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், கர்ப்ப காலத்தில் தாய் உண்ணும் சில வகை உணவுகளுக்கு வயிற்றிலிருக்கும் குழந்தை, மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் முக பாவனை செய்கிறதாம். இந்த ஆய்வை பற்றியும், எந்தெந்த உணவு வகைக்கு வயிற்றிலிருக்கும் குழந்தைகளிடம் என்ன ரியாக்ஷன் வருகிறது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆய்வுக்காக, 18-40 வயதிற்குட்பட்ட 32 முதல் 36 வாரங்கள் கர்ப்ப காலத்தில் இருக்கும் 100 பெண்கள்களின் ஸ்கேன் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பிறந்த பின்னர் மனிதர்கள் வாசனை, சுவை ஆகியவற்றை உணர்வது இயல்பு. ஆனால் பிறப்பதற்கு முன்னால் அது எப்படி சாத்தியமாகும் தெரியுமா? தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு செல்லும் உணவுகளை முகர்வது மூலமாகவும், சுவைப்பது மூலமாகவும் குழந்தைகள் இவற்றை அறிந்து கொள்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த 100 பெண்களுக்கு ஸ்கேனுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னால், கர்ப்பிணிகளுக்கு கேரட் பவுடர் கலந்த ஜூஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. கேரட் ஜூஸுக்கு பிறகு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் மகிழச்சியாகவே இருந்துள்ளனர். சிரிக்கும் முகபாவனைகளை செய்துள்ளன.
அதே போல, கர்ப்பிணிகளுக்கு இலை முட்டைகோஸ் பவுடர் கலந்த ஜூஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு எடுக்கப்பட்ட ஸ்கேனில், தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் சோகமாக அழுவது போன்ற முக பாவனைகளையும் செய்துள்ளன.