உமா ஷக்தி
‘என் உடம்பு’ (My Body) என்ற ஒரு குறும்படம்; கடந்த ஆண்டு பார்த்தேன். இளம் பெண் ஒருத்தி துணிக்கடை ஒன்றில் தான் வாங்கப் போகும் ஆயத்த ஆடையின் அளவு சரியாக உள்ளதா என்பதை அறிய அந்தக் கடையில் உள்ள உடை மாற்றும் அறைக்குச் சென்று அதை அணிந்து பார்க்கிறாள். அதை அவளுக்கே தெரியாமல் அங்கு வேலை செய்பவன் மூலம் அவனது கூட்டாளி படம் பிடித்து விடுகிறான். அவளை உடல்ரீதியாக அடையத் துடிக்கிறான்.
அவளை மட்டுமில்லாமல் இன்னும் சில பெண்களையும் அவன் குறி வைத்துள்ளான். இதுவே அவனுக்கு பிழைப்பாகவும் உள்ளது. அவன் சொல்லும் இடத்தில் பணத்துடன் வர வேண்டும், அவளையும் தர வேண்டும் என்பதுதான் அவனது அச்சுறுத்தல்.
அவன் கெடு வைத்திருந்த நேரம் நெருங்க நெருங்க அவள் மனம் நொறுங்கிப் போகிறாள். தற்கொலை எண்ணம் தலை தூக்குகிறது. ஆனால், வாழ்க்கை அப்போதுதான் அவளுக்கு வசந்தங்களை தர ஆரம்பித்திருந்த தருணம். பலவிதமான குழப்பங்களுடன் தீர்மானத்துடன் ஒரு முடிவெடுக்கிறாள். அதற்கு அவளுடைய தோழி ஒருத்தியிடம் உதவி கோருகிறாள். எந்த சமூக வலைத்தளத்தில் தன்னை பதிவேற்றி வைரலாக்குவேன் என்று மிரட்டினானோ அதே இடத்தில், திரையின் ஒருபுறத்தில் அவன் எடுத்த காணொளியை பதிவேற்றி, இன்னொரு பக்கம் உள்ளாடையுடன் அவளே தோன்றுகிறாள்.
அவளைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனாலும், சற்று நேரத்தில் அவள் தன்னை இக்காரணம் சொல்லித்தானே ஒருவன் அச்சுறுத்தி தன்னுடலை விலை பேசுகிறான்; எனவே, இனி அது தேவையில்லை என்று துணிந்து இந்த முடிவுக்கு வந்துவிட்டதை சொல்கிறாள்.
எது புனிதம் என்று பொத்தி வைத்திருந்தோமோ அதை உடைத்து போட்ட பின் அந்த நொடியில் அவளுடைய புத்தி தெளிகிறது. தெளிவான மனநிலையில் அவனை எதிர்கொள்ளும் துணிவைப் பெற்றுவிட்ட இறுமாப்புடன் அவள் தன்னை கண்னாடியில் பார்த்து ரசிக்கிறாள். இனி அவள் உடலை யாரும் அவளுக்கு எதிராக பயன்படுத்தவே முடியாது. அவள் தன் உடலை நேசிப்பதாக ஒரு கவிதையுடன் அக்குறும்படம் நிறைவடைகிறது.
இந்த குறும்படத்தை இயக்கியவர் எர்த்லிங் கெளசல்யா. பாண்டிச்சேரியில் ஒரு அரங்கில் இக்குறும்படம் திரையிடப்பட்ட போதுதான் பார்த்தேன். இதில் சிறப்பாக நடித்தவர் செம்மலர் அன்னம். இக்குறும்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது.
எது ஒன்றை வைத்து பெண்களை இச்சமூகம் அடை காத்துக் கொண்டிருக்கிறதோ, அதன் மூலமாகவே அவள் ஒடுக்கப்படும் போது, அதலிருந்து வெளியேறவே அப்பெண் விரும்புவாள். அமலா பால் நடித்த ’ஆடை’ படம் கூறும் விஷயமும் இதுதான்.
ஒரு புறம் கலை இலக்கியம் பெண்ணின் நிர்வாணத்தை கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொரு புறம், கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு சீர்கேடாக பார்க்கப்படுவது சுடும் நிஜம். ஒரு பெண்ணின் மார்பு அவளுடைய குழந்தைக்கு பாலூட்டப் பயன்படும் ஒரு அங்கம். மார்பு உட்பட தன்னுடலை வெளிப்படுத்துவதும் மறைப்பதும் அந்தப் பெண்ணின் உரிமை. அதனடிப்படையில்தான் கனிமொழி கதிரவன் தம் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் தான் மேலாடையின்றி அருவியில் குளிப்பதை பகிர்ந்துள்ளார். அது சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும், அதற்காக கனிமொழி கதிரவன் மீது காழ்ப்புணர்வு காட்டுவது சரியன்று.
‘அவர் புகைப்படம் எடுத்தது பிரச்சினை இல்லை; சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதுதான் பிரச்சினை. பெண் சுதந்திரம், தனி மனித விருப்பம் என்று காரணங்கள் என்னவாக இருந்தாலும், கூட்டாக வாழும் ஒரு சமூகத்தில் அதற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் யதார்த்தம்’ என்கிறார்கள் ஒரு சாரார். குறும்படத்தில் காண்பித்திருந்தது போல எவ்வித சூழல் அல்லது தேவைக்காகவும் கனிமொழி கதிரவன் அப்படங்களை பதிவிடவில்லை. ஆனாலும், கனிமொழி செய்தது குற்றம் இல்லை.
ஆண் செய்வதை பெண் செய்ய முடியும் என்று கூறும் சிலருக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. ஆணின் உடலை எந்த பெண்ணும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், ஆணால் பெண்ணுடல் என்றென்றும் போகப் பொருளாகத் தான் பார்க்கப்படுகிறது. அந்தப் பார்வையை மாற்ற பல பெண்கள் போராடி வருகிறார்கள். தாங்கள் புத்திஜீவிகள், சமூக மாற்றங்களுக்கு வித்திடுபவர்கள் என தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி தம் வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். அதைத் தான் பெண் கல்வி சாதித்துக் கொண்டிருக்கிறது.
என் உடல் என் உரிமை என்று புரிந்து கொள்ளும்விதமாக பதிவிட்டுள்ளார், கனிமொழி கதிரவன். அது அவர் விருப்பம் சார்ந்தது என்பதை தவிர அதைப் பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. சமநிலையற்ற இவ்வுலகில் சமூக நீதி சார்ந்தும் அறம் சார்ந்தும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்கொடுமைகள் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டிருக்க, அது குறித்து எதுவும் பேசாதவர்கள், கள்ள மெளனம் சாதிப்பவர்கள், இதுவும் மற்றொரு செய்தி என கடந்து போகிறவர்கள், இதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்வினையாற்றுவதன் காரணம் அவர் ஒரு பெண் என்பதால் மட்டுமே. தங்களுடைய நிலைப்பாட்டை பதிவு செய்து நீதிமான்களாக பொறுப்பேற்கும் மனநிலைதான் அது. ஒருவரின் சுதந்திரத்தின் மீது தம்முடைய கருத்துக்களை தேவையற்று திணிப்பதும் ஒருவித வன்முறைதான் என்பதை ஒருபோதும் அவர்கள் அறிய மாட்டார்கள்.
ஒரு ஆண் செய்யும் செயல்களை பெண்கள் செய்யவே முடியாது என்று சவால் விடுவதும், அதை செய்தே தீருவேன் என்று பெண்கள் எதிர்கொள்வதும் கால காலமாக நடந்து கொண்டிருப்பதுதான்.
ஒரு திரைப்படத்தில் பூர்ணிமா பாக்கியராஜ், ரஜினிகாந்த் நடித்த ஒரு பாடல் காட்சி மிகவும் பிரபலம். அதில் பூர்ணிமா பார்வையாளர்களை நோக்கி ’எனிபடி கேன் கிஸ் மீ’ என்று சொல்ல அனைவரும் ஆர்ப்பரிப்பார்கள். உடனே அவர் புன்சிரிப்புடன் ஏளனமாக, ‘வெயிட் வெயிட் பட் வித்தவுட் டச்சிங் மீ’ என்று கூறுவார். அனைவரும் அமைதியாகிவிட, அப்போது ரஜினிகாந்த் அங்கு தோன்றுவார். கூட்டம் மீண்டும் ஆர்ப்பரிக்கும். சவாலை ஏற்ற கதாநாயகன், ‘ஐ கேன் கிஸ் யூ… வித் அவுட் டச்சிங் யூ’ என்று சொல்லி அவருடைய நிழலை முத்தமிடுவார். பூர்ணிமாவால் ஒன்றும் செய்ய இயலாது. தோல்வியை, தேவையற்ற அந்த அவமானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்படுவார். இது சுவாரஸ்யத்துகாக எடுக்கப்பட்ட பாடல்காட்சி என்றாலும் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிபலிப்பாகத்தான் இதை எடுத்துக் கொள்ள முடியும்.