காலையில் எஃப்.எம்.மை போட்டுவிட்டால் ‘வி’-யில் தொடங்கும் பெயர்தான் அஜித்திற்கு ராசி.
வேதாளம், வீரம், விஸ்வாசம் என அஜித்திற்கு சமீபத்தில் ஹிட்டான படங்களின் பெயர்கள் எல்லாமே வி என்ற எழுத்தில்தான் ஆரம்பித்திருக்கிறது என அடுக்குகிறார்கள். இதனால் அஜித் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு வி-யில் தொடங்கும் பெயர்தான் இருக்குமென இன்டர்நெட்டின் நியூட்டன், எடிசன், கலிலியோக்கள் யோசித்து கொண்டிருப்பதாக ஆர்.ஜே-க்கள் பரபரப்பாக யூகத்தை கிளப்பி கொண்டிருந்தார்கள்.
ஆனால் அன்று மாலையே அஜித் படத்தின் பெயர் ‘துணிவு’ என வி சென்டிமெண்டை தகர்த்துவிட்டு துணிவோடு இப்பெயரை வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.
துணிவு என்ற டைட்டிலுக்கு ஒரு துப்பாக்கியோடு அஜித் உட்கார்ந்திருக்கும் போஸ்டர் மேலும் வைரலாக இப்பொழுதே கதை என்ன, இந்து எந்தப் படத்தின் போஸ்டரை பார்த்து காப்பியடித்து இருக்கிறார்கள் என இன்டர்நெட்டின் நியூட்டன்கள், எடிசன்கள் மீண்டும் டீகோடிங் வேலைகளில் மும்முரமாகி இருக்கிறார்கள்.
து’ணிவு’ படத்தின் ஆராய்ச்சிகளில் நெட்டிசன்கள் மும்முரமாக இருக்க அப்படத்தின் சில தகவல்கள் இங்கே உங்களுக்காக..
படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் இருக்கும் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைத்து எடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஷெட்யூலும் வாரக்கணக்கில் நடந்தது. ஆரம்பத்தில் சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் ஒரு ட்ரிப் அடித்த அஜித் இப்படி சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் அடிக்கடி விமானத்தில் பறந்து வந்து போக முடியாது என முடிவெடுத்தார்.
தனது மனைவி, மகள், மகன் என மூவரையும் அடுத்த ஷெட்யூலுக்கு ஹைதராபாத்திற்கு அழைத்து போனார். அங்கே ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டிக்கு அருகே ஒரு தனி பங்களாவை வாடகைக்கு எடுத்துவிட்டார்
பங்களாவை மாதவாடகைக்கு எடுத்துவிட்டதால், காலையில் அங்கிருந்து ஷூட்டிங்கிற்கு செல்வது, ஷூட் முடிந்ததும் வீட்டிற்கு வந்து குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது என அஜித் தனது வழக்கமான ஃபேமிலி டைமை கடைப்பிடித்திருக்கிறார்.
படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அஜித்திற்கு ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் ஸ்வீட் ரூமை புக் செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஆனால் அஜித் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
அதன் பிறகே தனி பங்களாவை தேடிப்பிடித்து காட்டியிருக்கிறார்கள். அது பிடித்துப் போகவே ஷூட்டிங்கை அங்கிருந்தபடியே முடித்து கொடுத்திருக்கிறார் அஜித்.
ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்ததும் விசாகப்பட்டினத்தில் சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
இப்பொழுது ‘துணிவு’ படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிந்து விட்டது என்கிறார்கள். ஒட்டுமொத்த யூனிட்டும் மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை வந்திறங்கி விட்டது.
படத்தின் கதை என்னவென்று கேட்டால் இயக்குநர் தரப்பும், தயாரிப்பாளர் தரப்பும் மெளன விரதத்தில் இருக்கின்றனர். அதையும் மீறி விசாரித்தால் ஒன் லைன் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.
சென்னையில் இருக்கும் மிகப்பெரிய பேங்கில் நடக்கும் கொள்ளைதான் கதைக்களம். கொள்ளை அடிக்கும் போது நடக்கும் மைண்ட் கேம் மற்றும் ஆக்ஷன் இந்த இரண்டு அம்சங்களையும் வைத்து திரைக்கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் வினோத் என்கிறார்கள்.