தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர், “பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பது அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிலும் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் மாணவர்களின் கற்றல்திறன் அதிகரிப்பதாகவும், மாணவர்களின் வருகை அதிகரிப்பதாகவும், பல ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
காலை சிற்றுண்டியை மாணவர்கள் உண்ணும்போது அவர்கள் அடையக்கூடிய மகிழ்ச்சியை அவர்களது முகங்களில் நான் பார்த்தேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை சொற்களால் வருணிக்க முடியாது. ஏழை எளியோர் வீட்டுப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்டோர் பிள்ளைகள், எதன் காரணமாகவும் பள்ளிக்குச் செல்வது தடைபடக்கூடாது என்பதற்காகவே, திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. அதற்காகவே சுயமரியாதை, சமூகநீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி இடஒதுக்கீடு தரப்பட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் வழிகளை நான் பின்பற்றி வருகிறேன். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும், இந்த பசிச் சுமையை போக்க நாம் முடிவெடுத்து இந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
முன்னதாக, தமிழ்நாட்டு பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டத்தின் ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை, வரலாற்றுச் சம்பவங்களை, அரிய ஆவணங்களைத் தொகுத்து செய்தி மக்கள் தொடர்புதுறையின் தமிழரசு பதிப்பகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற நூலை முதலமைச்சர் வெளியிட, கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டியான கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர் செல்வம் படங்கள் அகற்றம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பழைய பேனர்கள் அகற்றப்பட்டு புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேனர்களில் ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில், சுற்றுச்சுவரின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது.
சென்னை டூ நெல்லை ரூ. 3950: தீபாவளி பண்டிகைக்கு பேருந்து கட்டணம் உயர்வு; பயணிகள் அதிர்ச்சி
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்ல டிக்கெட் கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.3100 வரையும், நெல்லைக்கு ரூ.3950 வரையும் கட்டணம் நிர்ணையிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பயணிகள், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா முடிவுக்கு வருகிறது: உலக சுகாதார அமைப்பு தகவல்
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிவிட்டது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி உலக மக்களை இன்னும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதானோம், ‘உலகம் முழுவதும் கொரோனோ தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகிறது. 2020 மார்ச் மாதத்தை விட தற்போது பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கொரோனா இன்னும் முற்றிலும் முடியவில்லை. ஆனால், அதன் முடிவு நமக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை மீரா மிதுனை கைது செய்ய போலீஸ் தீவிரம்
நடிகையும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான மீராமிதுன், ஆண் நண்பருடன் இணைந்து யூடியூப்-ல் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ளவர்கள் உட்பட பலரை அவதூராகப் பேசியும், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என தமிழ்நாடு காவல்துறையினருக்கு சவால் விட்டும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர் பேசிய வீடியோ தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர், ஜாமீனில் விடுதலையான மீரா மீதுன், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், ‘நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை; அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.