முதல் படத்திலேயே எக்கசக்க எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. முதலில் கார்த்தி, அடுத்து சிவகார்த்திகேயன் என அதிதியின் சினிமா க்ராஃப் சூப்பராக ஏறிக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அதிதியை நெருங்குவது அவ்வளவு சுலபமாக இல்லை என்று புலம்புகிறார்கள் கோலிவுட் புள்ளிகள்.
மூன்றடுக்கு கம்யூனிகேஷனுக்கு பிறகுதான் அதிதியை தொடர்பு கொள்ளவே முடியும். படத்திற்கு கதை சொல்லலாம் என்றால் கதை கேட்பதற்கும் சில கொள்கைகளை வைத்திருக்கிறது அவரது பிஆர்ஓ மற்றும் மேனேஜர் தரப்பு என்கிறார்கள். இவர்களைத் தாண்டி கதை சொல்வது என்பது சாமானியனுக்கு சாத்தியமே இல்லை என்று வருத்தப்படுகிறார்கள் புதிய இயக்குநர்கள்.
லேடி அஜீத் ஆன ‘அமலா’
அமலா என்றால் 80ஸ் கிட்ஸூக்கு சாரல் அடித்ததைப்போல் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். திருமணமான பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்ட அமலா, அவ்வப்போது சினிமாவில் தலைக்காட்டி வருகிறார். சமீபத்தில் ‘கணம்’ படம் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றினார். இந்தப் படத்தில் அமலாவுக்கு அம்மா கதாபாத்திரம்.
ஒரு நாள் திடீரென ஷூட்டிங்கில் இருந்த ஒரு குறும்பு பேர்வழி அமலாவிடம், ‘அம்மா எங்களுக்காக நீங்க சமைச்சு போடுறீங்களா’ என்று கேட்டுள்ளார். ஒரு புன்னகையை மட்டும் அவருக்கு பதிலாக அளித்து அங்கிருந்து கிளம்பியுள்ளார் அமலா.
இதன் பிறகு 2 இரண்டு நாட்கள் கழித்து கணம் பட யூனிட்டை தனது வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். தனது வீட்டில் வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கியிருக்கிறார். அந்த இனிப்பை அமலாவே தயாரித்து கொடுத்தார் என்பதுதான் ஹைலைட்.
’அடடா அமலா அம்மா நம்ம லேடி தல’ என்று உற்சாகமாக இனிப்பை ஒரு கைப்பார்த்திருக்கிறது ‘கணம்’ பட யூனிட்.
பிரம்மாஸ்திரா ப்ரமோஷனில் கல்லா கட்டிய ராஜமெளலி
சினிமாவில் இப்போது எல்லாமே கமர்ஷியலாகி வருகிறது. முன்பெல்லாம், ஒரு படத்தின் ப்ரமோஷனுக்கு விழா நடத்துவார்கள். அவ்விழாவிற்கு முக்கிய சினிமா புள்ளிகளை தலைமை விருந்தினர்களாக அழைப்பார்கள். அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துவார்கள்.
இந்த விழா, விருந்தினர்கள் என எல்லாமும் இதுவரையில் இது மரியாதை நிமித்தமான சம்பிரதாயமாகவே இருந்து வந்தது. இப்போது அதையும் கமர்ஷியல் ஆக்கி விட்டார்கள்.
இந்த வேலையைப் பார்த்தது மும்பை சினிமாவின் அதிகார மையத்தில் ஒருவராக இருந்து வரும் இயக்குநர் கரன் ஜோஹர்.
சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘பிரம்மாஸ்திரா’ படத்தை கரன் ஜோஹரின் தர்மா ப்ரொடக்ஷன் தயாரித்து இருக்கிறது. இப்படத்தை இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என முக்கிய பிராந்திய மொழிகளில் வெளியிட்டு உள்ளார் கரன் ஜோஹர்.
அதனால் இப்பட ப்ரமோஷனை அந்தந்த மாநில முக்கிய புள்ளிகளை வைத்து நடத்த திட்டமிட்டார். தெலுங்கில் கரன் ஜோஹர் யோசித்தது இயக்குநர் ராஜமெளலியை.
ரமோஜி ராவ் ப்லிம் சிட்டியில் மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அங்கு விழா நடக்க முடியாத சூழல் உருவானது. உடனே சுதாரித்து கொண்ட கரன் ஜோஹர், ராஜமெளலியை வைத்து ஒரு ப்ரஸ் மீட்டை நடத்திவிட்டார்.
இந்த ப்ரஸ் மீட்டில் கலந்து கொண்டதற்காக ராஜமெளலிக்கு 10 கோடி ரூபாயை கரன் ஜோஹர் கொடுத்ததாக இப்போது பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.
இதனால் சிறிய படத்தயாரிப்பாளர்கள் ஏக டென்ஷனில் இருக்கிறார்களாம். சின்ன படங்களின் ப்ரமோஷனுக்கு இதுவரை விருந்தினர்களாக வந்தவர்கள் இதுவரையில் பணம் வாங்கியதில்லை. ஒரு நட்பின் அடிப்படையில் வந்து வாழ்த்துவார்கள். இப்போது அதையும் காசு கொடுத்தால் தான் நடத்த முடியுமென்றால், படத்தை வெளியிட போராடும் சின்ன தயாரிப்பாளர்கள் எங்கே போவது என்று புலம்பல் இப்போது ஆரம்பித்திருக்கிறது.