சில நாட்களுக்கு முன்னால் எங்களுடைய அலுவலகத்துக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறான மிக நீண்ட போக்குவரத்து நெரிசல். ஒருவழியாக அலுவலகம் இருக்குமிடத்துக்கு வந்து பேருந்திலிருந்து இறங்கிப் பார்த்தால், பேரதிர்ச்சி.
ஏனெனில், எங்கள் அலுவலகத்துக்கு முன்பிருக்கும் நெடுஞ்சாலை முழுக்கத் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. கிட்டத்தட்ட ஒரு குளத்தைப்போல் அது தென்பட்டது. அதைத் தாண்டி அலுவலகத்துக்குள் நுழைய வேண்டுமென்றால் மழை நீரில் ஒரு குளியல் தேவைப்படும்.
எப்படியோ சிரமப்பட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தேன். மாலைக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் வேலைகளைப் பார்த்தேன்.
அன்று மாலை நான் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தபோது, அந்தச் சிறு குளம் அங்குதான் இருந்தது. சொல்லப்போனால் அதன் ஆழம் இன்னும் மிகுதியாகியிருந்தது. அப்போதுதான் முதன்முறையாக இது வழக்கமான மழைப் பிரச்சினை இல்லை, ஏதோ பெரிய விவகாரம் என்று புரிந்துகொண்டேன்.
பெங்களூரில் ஒவ்வொரு மழையின்போதும் சாலையில் தண்ணீர் ஆறுபோல் ஓடுவது வழக்கம்தான். அந்தத் தண்ணீர் சிறிது நேரத்துக்குத் தேங்கி நிற்பதும் பின்னர் வடிந்துவிடுவதும் எல்லாப் பெங்களூர்வாசிகளுக்கும் தெரிந்த ரகசியங்கள். அதன்மூலம் போக்குவரத்து நெரிசல் உண்டாகும், நான்கைந்து மணிநேரம் சாலையில் சிக்கிச் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பவையும் அவர்கள் அறிந்தவைதான். கொஞ்சம் சலித்துக்கொள்வார்கள், அரசாங்கத்தைச் சிறிது திட்டுவார்கள், அதன்பிறகு இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.
ஆனால், இப்படி நாள்முழுக்கத் தண்ணீர் தேங்கிநிற்பதை, அதுவும் நெடுஞ்சாலையை முழுக்க ஆக்கிரமித்து அந்தப் பக்கம் எந்த வண்டியும் செல்லாதபடி செய்வதை நான் பார்த்ததில்லை. அதுவும் ஓர் இடத்தில் இல்லை, பல இடங்களில்.
அடுத்தடுத்த நாட்களில் பெங்களூரில் மழை தொடர்ந்தது (இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது), அதன்மூலம் இன்னும் பல பகுதிகள் நீரில் மூழ்கின. அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல குடியிருப்புகளின் கீழ்த்தளங்களில் நீர் புகுந்தது, சாப்பாட்டுப் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினை, இணையப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, நோய்கள் என்று வரிசையாகச் செய்திகள். ‘தயவுசெய்து பணியாளர்கள் யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம்’ என்று நிறுவனங்கள் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்கவேண்டிய நிலைமை. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப்பில் பெங்களூரைக் கேலி செய்யும் படங்கள், வீடியோக்கள் பொழியத் தொடங்கின.
இத்தனைக்கும் என்ன காரணம்?
முதலில், இந்த ஆண்டு பெங்களூரின் மழைப்பொழிவு மிகக் கூடுதலானது. 1971க்குப்பிறகு இந்த அளவு மழை இங்கு பொழிந்ததில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள்.
பிரச்சினை என்னவென்றால், 1971ல் இருந்த பெங்களூரும் இப்போதைய பெங்களூரும் ஒரே நகரம் இல்லை. இந்த ஐம்பது ஆண்டுகளில் இங்கு ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுவிட்டது. அநேகமாக எல்லா இந்திய மாநிலங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாய்ப்புகளைத் தேடிப் பெங்களூருக்குக் குடிபெயர்ந்துள்ளார்கள். இதனால் இங்கு ஏற்பட்ட கட்டுமானத்துறை வளர்ச்சி, சில்லறை வணிக வளர்ச்சி, பணியாளர்களுக்கான தேவை ஆகியவையும் இந்நகரின் மக்கள்தொகையை வேறெந்த நகரமும் காணாத அளவுக்கு விரைவாகப் பெருக்கிவிட்டன.
உண்மையில் இப்படியொரு வளர்ச்சியைக் கண்டு எந்தவொரு நகரமும் மகிழத்தான் செய்யும். ஆனால், அதற்கேற்ப உள்கட்டுமான வசதிகளைப் பெருக்குவது எளிதில்லை. தொலைநோக்கோடு திட்டமிடாமல் கிடைத்த இடங்களிலெல்லாம் கட்டடங்களை, மற்ற அமைப்புகளைக் கட்டியதால் இப்படியொரு பெருமழையைச் சமாளிக்கும் தெம்பு இந்த நகருக்கு இல்லை என்பது இப்போதுதான் வெளியில் தெரிகிறது.
இது யாருடைய பிழை என்கிற கேள்வி மிகச் சிக்கலானது. ஆனால், ஏகப்பட்ட பிழைகள் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. நகரின் பல பகுதிகள் ஏரிகளின்மீது கட்டப்பட்டுள்ளவை. மற்ற பல கட்டுமானங்களும் கழிவுநீர் வடிகால் போன்ற முக்கியமான அமைப்புகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தத் துறைசார்ந்த பெருமுதலாளிகளுடைய ஆதிக்கத்தைப் பலர் நேரடியாகக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால், குறிப்பிடக்கூடிய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
இத்துடன், பொதுப் போக்குவரத்து, குடிநீர் வசதி என்று பல விஷயங்களிலும் பெங்களூரு திட்டமிடப்படாத வளர்ச்சியைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அவற்றைச் சரிசெய்வதற்கான முயற்சிகள் இங்குமங்கும் நடைபெற்று வருகின்றன, அவற்றில் முழு வெற்றி இன்னும் கிடைக்கவில்லை.
கர்நாடக மாநிலத்துக்கும் இந்தியாவுக்கும் பெங்களூரின் பங்களிப்பு மிகப் பெரியது. உலக அளவிலும் இந்தியாவுக்கு ஐடி துறையில் கிடைத்திருக்கிற நல்ல பெயருக்கு இந்நகரம் ஒரு முதன்மைக் காரணம். அப்படிப்பட்ட ஓர் ஊருக்கு இதைவிட மேம்பட்ட உள்கட்டுமானமும் திட்டமிடலும் இருக்கவேண்டும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இந்த மழையும் வெள்ளமும் அதை இன்னும் வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கின்றன.
ஆனால், ஒரு பெங்களூர்வாசியாக நான் ஏதும் மாற்றங்களை எதிர்பார்க்கிறேனா என்றால், ‘சிறிதளவு’ என்றுதான் பதில் சொல்வேன். ஏனெனில், ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தைப் பழுதுபார்ப்பது சிரமம். அதை நிறுத்திவிட்டுச் சரிசெய்வது அதைவிடச் சிரமம். பெங்களூரு ஓடுகிற வேகம் யாராலும் கற்பனை செய்ய இயலாதது. அதில் இதுபோன்ற பிரச்சினைகளெல்லாம் வரும், போகும், புலம்பப்படும்; சில மாற்றங்கள் சில பிரச்சினைகளைத் தீர்க்கும். தொலைநோக்கில் பிரச்சினைகளைச் சமாளித்துக்கொண்டு வாழத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும், இப்போதைய பரபரப்பின் காரணமாகக் கர்நாடக அரசு திடீரென்று விழித்துக்கொண்டு பெங்களூரின் முதன்மைப் பிரச்சினைகளைச் சிந்தித்து, பட்டியலிட்டு, திட்டமிட்டுச் சரிசெய்யத் தொடங்கினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அது நடந்தால் மகிழ்ச்சி!
இதில் அரசாங்கத்துடன் மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஓர் இடத்தில் தண்ணீர் தேங்குகிறது என்றால் அது தாழ்வான பகுதியில் உள்ளது என்பதுமட்டும் காரணமில்லை, அங்கு போதுமான அளவு வடிகால்கள் இல்லை என்பதுமட்டும் காரணமில்லை, இருக்கிற வடிகால்களைக் குப்பைகள் அடைத்திருக்கின்றன, அவை அனைத்தும் இப்போது அரசாங்கத்தைத் திட்டுகிற மக்கள் வீசி எறிந்தவைதாம்.