மத்திய பாஜக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இன்று மாலையில் மிக நீண்ட நடைப்பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி. ஐந்து மாதங்கள் நீளும் இந்த நெடிய பாதயாத்திரையைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்கள்…
இன்று தொடங்கி, அடுத்த 150 நாட்களில் இந்தியாவின் பல பகுதிகளில் 3,570 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை ராகுலின் பாத யாத்திரை கடக்க உள்ளது. இந்த வருட இறுதியில் தேர்தல் நடக்க உள்ள குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ராகுலின் பாத யாத்திரை இல்லை. நடைப் பயணத்திலிருந்து விலகி சில நாட்கள் இந்த மாநிலங்களில் ராகுல் தனியாக பரப்புரை செய்வார் என்று கூறப்படுகிறது.
நடைப் பயணத்தில் ராகுல் காந்தியுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அந்தந்தப் பகுதிகளில் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் தவிர முதல் நாள் முதல் இறுதி நாள் 118 காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து நடக்க உள்ளார்கள்.
இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்களில் மிகவும் வயதான தலைவராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜேந்திர சிங் மகாவாட் உள்ளார். இவரது வயது 58.
இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் மிக இளைய தலைவர்கள் அஜாம் ஜோம்ப்ளா மற்றும் பேம் பாய். 25 வயதான இவர்கள் இருவரும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
தினமும் 22 முதல் 23 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரம் நடக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. காலையில் ஒரு குழுவும் மாலையில் ஒரு குழுவும் ராகுலுடன் நடக்கிறார்கள்.
காலை 7 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 3.30 முதல் 6.30 மணிவரையிலும் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைப்பயணம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, நைலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விமர்பத், நாண்டெட், ஜல்கோவன், ஜமோத், இந்தூர், கோட்டா, டாவ்சா, ஆல்வார், புலந்த்சாஹர், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை தொட்டுச் செல்லவுள்ளது.
இந்த நடைப்பயணம் கர்நாடக மாநிலத்தில் மிக அதிகபட்சமாக 21 நாட்களும், கேரளாவில் 18 நாட்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாநிலங்களுக்கு இத்தனை நாட்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நாளன்று நடைப்பயணத்தில் பங்கேற்பவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருப்பார்கள்.
பயணத்தின் நடுவே எந்த ஊரிலும் இவர்கள் ஓட்டலில் தங்கப்போவதில்லை. மாறாக நடைப்பயணம் மேற்கொள்ளும் தலைவர்கள் தங்குவதற்காக 60 கேரவன்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கேரவன்களில் கழிப்பறை, ஏசி, படுக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தி மட்டும் தனியாக ஒரு கேரவனில் தங்கவுள்ளார். மீதமுள்ள 59 கேரவன்களை மற்ற தலைவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள்.