இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் லிஸ் ட்ரஸ். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவருக்கு இப்போது பிரதமர் பொறுப்பு கிடைத்திருக்கிறது. பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி பிரதமராகியிருக்கிறார் லிஸ்.
ரிஷி சுனக்தான் வெற்றி பெறுவார் என்று இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலேயே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இறுதிச் சுற்றுவரை வந்த அவர் தோற்கடிக்கப்பட்டு லிஸ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மார்க்ரெட் தாட்சர், தெரசா மேக்குப் பிறகு இங்கிலாந்துக்கு பிரதமராகும் மூன்றாவது பெண்.
கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் 81,326 வாக்குகளுடன் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக் 60,399 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார்.
ரிஷி சுனக் தோற்றதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. என்னதான் ரிஷி சுனக் இங்கிலாந்து அரசியலில் நீண்ட காலம் இருந்தாலும் அவர் அந்நியராகதான் பார்க்கப்படுகிறார். இங்கிலாந்து அமைச்சரான பிறகும் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்தது சர்ச்சையானது. அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் இந்திய குடியுரிமையும் விவாதத்துக்குள்ளானது. இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா இங்கிலாந்தில் சம்பாதிக்கும் பணத்துக்கு அங்கு வரி கட்டாமல் இந்தியாவில் கட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சிக்கல்களையெல்லாம் ரிஷி சமாளித்து இறுதிச் சுற்றுவரை வந்தார். ஆனாலும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை ஒரு இந்தியர் ஆள முயல்வதை அந்நாட்டினர் விரும்பவில்லை என்பதும் அவர் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.
லிஸ் ட்ரஸ் மீதும் சர்ச்சைகள் இருக்கின்றன. இப்போது கன்சர்வேடிவ் கட்சியில் இருந்தாலும் லிஸ்ஸின் ஆரம்ப அரசியல் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிரானதாகதான் இருந்திருக்கிறது. லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் உறுப்பினராகதான் தனது அரசியலை ஆரம்பித்திருக்கிறார். அப்போது கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் இங்கிலாந்து பிரதமராகவும் இருந்த மார்க்ரெட் தாட்சருக்கு எதிராக நடந்த போராட்டங்களில் லிஸ் ட்ரஸ்ஸின் குடும்பம் பங்கேற்றிருக்கிறது.
”டீன் ஏஜ் பருவத்தில் இளைஞர்கள் தவறு செய்வதில்லையா? பலவித போதைகளில் சிக்கி வழி தவறி நடப்பதில்லையா? அவர்கள் மீண்டும் திருந்துவதில்லையா? நான் அப்படி அந்த சமயத்தில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் இருந்தேன். மன்னித்துவிடுங்கள்” என்று தன் எதிர்ப்பாளர்களுக்கு பதிலளித்தார் லிஸ்.
லிஸ்ஸின் பெற்றோர் தீவிர இடதுசாரிகள். மகள் லிஸ் திடீரென்று கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்தது அவர்களுக்கு அதிர்ச்சி. அதாவது திராவிடம், பெரியார், அண்ணா என்று பேசிக் கொண்டிருந்தவர் பாஜகவில் இணைந்தால் ஒரு அதிர்ச்சி வருமல்லவா, அது போன்ற அதிர்ச்சி லிஸ்ஸின் பெற்றொருக்கு ஏற்பட்டிருக்கிறது. இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லிஸ் ட்ரஸ் கன்சர்வேடிவ் கட்சியில் முக்கிய உறுப்பினர். 1996லிருந்து கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்.
லிஸ்ஸின் கணவர் ஹூக் ஒலேரி. அவரும் அரசியலில் இருந்திருக்கிறார். இப்போது கணக்காளராக பணிபுரிகிறார். கன்சர்வேடிவ் கட்சி கூட்டங்களில் சந்தித்து காதல் மலர்ந்து இப்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மனைவியின் அரசியல் ஆசைகளுக்கு வழி விட்டு அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார் ஓலேரி.
2004ஆம் ஆண்டு வாக்கில் இவர்கள் வாழ்க்கையில் ஒரு புயல் வீசியது. கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர் மார்க் ஃபீல்ட் உடன் லிஸ் ட்ரஸ் திருமணத்துக்கு மீறிய உறவு கொண்டிருந்தது வெளியில் வந்தது. ஒரு வருடம் இந்த உறவு நீடித்திருக்கிறது. ஆனால் இந்தப் புயல் இவர்கள் திருமணத்தை பாதிக்கவில்லை. 2000 ஆண்டு நடந்த திருமணம் 22 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
லிஸ் ட்ரஸ் இங்கிலாந்து பிரதமரானால் இந்தியாவுக்கு லாபமா?
லாபம் என்றே பார்க்கப்படுகிறது. முக்கியமாய் இந்திய – இங்கிலாந்து வர்த்தகம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து லிஸ்ஸும் கூறியிருக்கிறார். “இந்தியாவுடன் முழுமையான வர்த்தக் உறவு தேவைப்படுகிறது. நிதி, பொருட்கள், விவசாயம் என எல்லாவற்றிலும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கான ஒப்பந்தம் போடப்பட வேண்டும்’ என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வருடத் துவக்கத்தில் இந்தியா வந்திருந்தபோது இந்திய – இங்கிலாந்து உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ரஷ்ய – உக்ரைன் போர் சூழலில் இந்திய – இங்கிலாந்து நட்பு இந்த பிராந்தியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வாரம் இங்கிலாந்து பொருளாதாரத்தை முந்தியிருக்கிறது இந்தியா. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்து ஆறாவது இடத்துக்கு சென்றிருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவின் தேவை இங்கிலாந்துக்கு அதிகம் இருக்கும் என்றே கருதப்படுகிறது.
லிஸ் ட்ரஸ் பிரதமராக பொறுப்பேற்றிருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக இருக்கதான் அதிக வாய்ப்புகள் உள்ளன. பார்ப்போம்.
ஒரு குறிப்பு: நமது புரிதலுக்காக இங்கிலாந்து என்று கூறுகிறோம். ஆனால் இங்கிலாந்தின் பிரதமர் என்பது சரியல்ல. இங்கிலாந்து என்பதற்கு பதில் யுனைட்டட் கிங்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து என்பது யுனைட்டட் கிங்டமில் ஒரு பகுதி.
யுகே என்று நாம் எளிதாய் கூறும் யுனைட்டட் கிங்டமில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், நார்தர்ன் அயர்லாந்து என நான்கு பிரதேசங்கள் இருக்கின்றன.
இங்கிலாந்தின் பிரதமர் என்று நாம் குறிப்பிடுவது இந்த நான்கு பிரதேசங்களுக்கான பிரதமர். இந்த நான்கு பிரதேசங்களையும் தனி நாடுகளாகதான் குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்கென்று தனி நாடாளுமன்றங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் நிர்வகிப்பது யுனைட்டட் கிங்டமின் நாடாளுமன்றம். கிட்டத்தட்ட இந்தியாவின் மாநில அரசு, ஒன்றிய அரசு என்பது போல்.
சரி, பிரிட்டன் என்றும் கூறுகிறார்களே என்ற கேள்வி எழும். ஆமாம், கிரேட் பிரிட்டன் என்பது பெரிய தீவு. அந்தத் தீவில்தான் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து இருக்கின்றன.