செரீனா வில்லியம்ஸ் – டென்னிஸ் உலகை கடந்த 27 வருடங்களாக கலக்கிக் கொண்டிருந்த புயல் இன்றிலிருந்து ஓய்வு பெறுகிறது.
23 மொத்தம் கிராண்ட் ஸ்லாம் கோப்பைகள். அதில் 10 கோப்பைகள் 30 வயதைக் கடந்த பிறகு வென்றவை. பிப்ரவரி 2013லிருந்து 2016 செப்டம்பர் வரை தொடர்ந்து 186 வாரங்கள் – சுமார் மூன்று வருடங்கள் – பெண்கள் டென்னிஸில் முதல் இடத்திலேயே இருந்தது. டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தமாய் 319 வாரங்கள் முதலிடத்தில் இருந்தது. ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வெல்வது என்பது அரிது அந்த சாதனையை இரண்டு முறை செய்தது. 2003லும் 2015லும் அந்த சாதனையை செய்திருக்கிறார். டென்னிஸ் போட்டிகளில் வென்று பரிசு அதிக தொகையை சம்பாதித்த பெண் வீராங்கனை. மொத்தம் 94 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 749 கோடி ரூபாய்.
இப்படி பல சாதனைகள். இன்று ஒற்றையர் ஆட்டத்தில் கடைசிப் போட்டியை ஆடினார். தற்போது நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் தோற்றதுடன் செரீனாவின் ஒற்றையர் சரித்திரம் முடிந்திருக்கிறது.
செரீனாவுக்கு இப்போது நாற்பத்தோரு வயதாகிறது. 1981 செப்டம்பரில் பிறந்தவர். அப்பா டென்னிஸ் கோச். கூடப் பிறந்தவர்கள் ஐந்து பேர். அப்பா டென்னிஸ் பயிற்சியாளர் என்பதால் சிறு வயதிலிருந்தே டென்னிஸ் பயிற்சி கிடைத்துவிட்டது. மகள்களை பெரிய டென்னிஸ் நட்சத்திரங்களாக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசை. செரீனாவுக்கும் அவரது சகோதரி வீனஸ்க்கும் சிறு வயதிலேயே டென்னிஸ் ஆர்வம் அதிகம். இரண்டு பேருமே டென்னிஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற ஆரம்பித்தார்கள்.
செரீனாவுக்கு பத்து வயது இருக்கும்போது அந்தப் வயதினோருக்கான பிரிவில் நம்பர் ஒன். 1995ல் 14 வயதில் தொழில் முறை டென்னிஸ் போட்டியாளாராக மாறினார் செரீனா வில்லியம்ஸ். 16வது வயதில் டென்னிஸின் முக்கிய 100 ஆட்டக்காரர்கள் வட்டத்துக்குள் நுழைந்தார். 1999ல் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அமெரிக்க ஒபன் கோப்பைதான் அவர் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பை. இந்த முதல் வெற்றியில் ஒரு சுவராசியம் இருக்கிறது. இறுதிப் போட்டியில் அவர் வென்றது அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை. சகோதரிகள் இருவரும் டென்னிஸ் உலகை ஆளத் துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் சர்வதேச பெண்கள் டென்னிஸில் முதல் இரண்டு இடங்களில் இந்த சகோதரிகள்தாம் இருந்தார்கள். அசுர வளர்ச்சி. அதன்பின் திரும்பிப் பார்க்கவே இல்லை.
செரீனாவின் அசைக்க முடியாத வெற்றிகளுக்கு சில காரணங்கள் இருக்கின்றன.
விடாத பயிற்சி. மழையோ வெயிலோ தினமும் 7 மணி நேரம் பயிற்சி. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 3 மணி நேர பயிற்சி. உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரராக ஆன பிறகும் இந்த கடுமையான பயிற்சி தொடர்ந்தது. இன்று வரை செரீனாவின் அன்றாட வாழ்க்கையில் 7 மணி நேர பயிற்சி இருக்கிறது.
கவனம் சிதறாமை. பணம், புகழ், வெற்றிகள், வாழ்க்கைப் பிரச்சினைகள் என எதுவும் செரீனாவின் கவனத்தை சிதறடித்ததில்லை. டென்னிஸ்,,,டென்னிஸ் மட்டுமே அவரது ஒரே கவனம். நான்கு வயதில் டென்னிஸ் மட்டையை பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை அவரது கவனம் டென்னிஸிலிருந்து விலகியதில்லை. ’தெருவில் துப்பாக்கி சண்டை நடந்தாலும் கவனம் சிதறாமல் டென்னிஸ் விளையாட வேண்டும். அதுதான் உண்மையான கவனம் சிதறாமை’ என்று சொல்லியிருக்கிறார் செரீனா.
போர்க் குணம். எந்த நிலையிலும் வெற்றியை நோக்கி போராடுவதை நிறுத்திவிடக் கூடாது. இன்று நடந்த போட்டியிலும் மூன்றாவது செட் வரை போராடிக் கொண்டே இருந்தார் செரீனா. எதிராளி பலமாக தெரிகிறானே என்று பின் வாங்கினால் வெற்றி கிடைக்காது என்பது அவர் கோட்பாடு.
தோல்வி நிரந்தரமல்ல. செரீனாவும் தோற்றிருக்கிறார். தர வரிசைப் பட்டியலில் கீழிறங்கியிருக்கிறார். ஆனால் அதனால் அவர் துவண்டு சுருண்டு கிடக்கவில்லை. ’நான் தோற்றுக் கொண்டிருக்கும்போது அதை மறக்க முயற்சிப்பேன். மேட்ச் இன்னும் முடியவில்லை. வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது என்று நினைப்பேன்’ என்கிறார் செரீனா. தோல்வியை நினைக்காமல் வெற்றியை மட்டும் நினைப்பதும் அவரது வெற்றிக்கு காரணம்.
வயது பொருட்டல்ல. செரீனா வயதைக் குறித்து கவலைப்படாததால்தான் 40 வயது வரை டென்னிசில் வெற்றிப் பெற முடிந்திருக்கிறது. திருமணம் நடந்தப் பிறகும் குழந்தை பிறந்த பிறகும் டென்னிசை தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார். 34வயதிலும் உலகின் நம்பர் 1 ஆட்டக்காரராக இருந்தார்.
குறி பணமல்ல. ‘எனக்கு எப்போதும் பணம் முக்கியமல்ல.வெற்றிதான் முக்கியம்’ என்கிறார் செரீனா. பிடித்ததை எல்லோரையும் விட சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் செரீனாவின் குறிக்கோளாக இருக்கிறது.
டென்னிசிலிருந்து ஓய்வுப் பெற்றப் பிறகு தாயாக இருக்கப் போகிறேன், ஆன்மிக தேடலில் ஈடுபட போகிறேன், சமூக மாற்றங்களுக்கு முன் நிற்கப் போகிறேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார் செரீனா.