இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்” என்று மூன்றுமுறை ஆக்ரோசமாக பேசியிருந்தார். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகார் அடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, ஜாமீன் கோரி கனல் கண்ணன் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், 4 வாரங்களுக்கு தினமும் காலையும் மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: திமுக எம்பி விமர்சனம்
இந்து அறநிலையத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. செந்தில்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக செந்தில்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டிவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வார்த்தைகளை பயன்படுத்தி, “இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” – கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்’ என விமர்சித்துள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி – இந்தியாவில் இன்று முதல் அறிமுகம்
பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும்போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இது தொடர்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8ஆம் தேதி அன்று தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பரிசோதனைகள் வெற்றியடைந்த நிலையில், மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.
கியூபாவின் புரட்சி நாயகன் சே குவேரா மகன் மறைவு
கியூபாவின் புரட்சி நாயகரான சே குவேராவின் மகன் கமிலோ குவேரா நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 60. இதனை கியூபா அரசு தரப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கமிலோ குவேரா வெனிசுலாவுக்கு பயணம் மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அலீடா மார்ச் மற்றும் சே குவேரா தம்பதியருக்கு பிறந்த 4 பிள்ளைகளில் இவர் ஒருவர். இவர் அவர்களுக்கு பிறந்த மூன்றாவது மகன் ஆவார். ஹவானாவில் சே குவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.
கியூபா அதிபர் மிகேல் தியாஸ்-கானெல், கமிலோவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “ஆழ்ந்த வேதனையுடன் சேவின் மகனும், அவரது கருத்துகளை முன்னெடுத்து சென்றவருமான கமிலோ நம்மை விட்டு பிரிந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.