என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அடுத்தப்படியாக பெரிய வாய்ப்புகள் எதுவும் கோலிவுட்டில் சிக்கவில்லை. இதனால் மும்பைக்கு ப்ளைட் பிடித்து பாலிவுட்டுக்குள் மீண்டும் எண்ட்ரீ ஆனார்.
ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்த பாலிவுட் இயக்குநர்கள், ‘என்னம்மா இப்படி வெயிட் போட்டு இருக்கிற. இப்படி இருந்தா பாலிவுட்டுக்கு செட்டாகாது. 10 – 15 கிலோவாவது குறைச்சிட்டு வா. அதுதான் பாலிவுட் ஸ்டாண்டர்ட்’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.
இதனால் உடல் எடையைக் குறைக்க ரகுல் படாதப்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். ’தமிழ் தெலுங்குப் படங்களுக்கு நடிக்க வந்தால், என்னம்மா இப்படி நோய்வாய்பட்ட பொண்ணு மாதிரி இருக்க. கொஞ்சம் நல்லா சாப்பிட்டு, உடம்பை தேத்துமா’ என்கிறார்கள். இதனால என் உடம்பை தேத்தவே ரெண்டு மூணு வருஷம் போச்சு. இதுதான் நார்மல் உடல்வாகு. ஆனால் பாலிவுட்டுக்கு போனால் உடம்பை குறையுன்னு சொல்றாங்களே’ என்று புலம்பித் தள்ளுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
’என்ஜிகே’ படத்திற்கு உடம்பை ஏற்றிய ரகுல் ப்ரீத் சிங் அடுத்தடுத்து இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதனால் உடல் எடையைக் குறைத்து கொண்டு ‘இந்தியன் – 2’ பட ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். ‘ரகுலா..இது’ என இந்தியன் படக்குழுவினர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடிப்பதற்காக இப்போது உடல் எடையை நம்மூர் விக்ரம் போல அடிக்கடி உடல் எடை விஷயத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்த ரகுல் ப்ரீத் சிங்கை ‘லேடி விக்ரம்’ என்று ஷூட்டிங்கின் போது ஜாலியாக கமெண்ட் அடித்தார்களாம்.
விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் சம்பளம்?
கோடம்பாக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று யார் பக்கம் வீசுகிறதோ இல்லையோ இன்றைய நிலவரப்படி விஜய் சேதுபதியின் பக்கம் அமோகமாக வீசுகிறது.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த சமீபத்தியப் படங்கள் அனைத்தும் வந்தவேகத்திலேயே திரையரங்குகளில் இருந்து கிளம்பிவிட்டன. ஆனால் அவர் வில்லனாக நடித்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அதை வைத்து காற்று உள்ளபோதே தூற்றிக் கொள் என்கிற ஃபார்மூலாவை கெட்டியாக பிடித்திருக்கிறார்.
லேட்டஸ்ட் சமாச்சாரம் இதுதான். பொதுவாக ஒரு படத்தில் கமிட்டாக பதினைந்து கோடி சம்பளம் வாங்கி வந்த விஜய் சேதுபதி, இப்பொழுது வில்லனாக நடிக்க ரெடி. ஆனால் சம்பளம் கொஞ்சம் அதிகமாகும். ஓகே என்றால் கால்ஷீட் ரெடி என்று சொல்லி வருகிறாராம்.
இதன் அடிப்படையிலேயே ஷாரூக்கான் நடிக்க அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். விஜய் சேதுபதியை ‘ஜவான்’ படக்குழுவினர் வில்லனாக நடிக்க கேட்டு அணுகிய போது, விஜய் சேதுபதி சம்பளம் விஷயத்தில் மட்டும் கெடுப்பிடியாக இருந்தாராம்.
ஆனாலும் விடாப்பிடியாக விஜய் சேதுபதியிடம் அக்குழுவினர் பேச்சு கொடுக்க, சம்பளம் 21 கோடி என்றால் ஓகே என்று சொன்னாராம். இதுவரையில் விஜய் சேதுபதி பதினைந்து கோடி சம்பளமாக வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 21 கோடிக்கு ஓகே சொல்ல, உற்சாகமாக ஜவான் ஷூட்டிங்கில் வில்லனாகி இருக்கிறார்.
’சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் பஞ்சாயத்து!
தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை சூர்யாவின் 2டி எண்டர்டெய்மெண்ட் நிறுவனம், அபுதான்ஷியா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தையும் ’சூரரைப் போற்று’ இயக்குநர் சுதா கோங்குராதான் இயக்குகிறார். இதில் சூர்யா நடித்த வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்திருப்பதால் அக்ஷய் குமாரின் மார்க்கெட் சாம்ராஜ்ஜியம் ஒட்டுமொத்தமாக சரிந்து கிடக்கிறது.
இதனால் இப்படத்தின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. அக்ஷய் குமாரின் மார்க்கெட் நிலவரம் சரியில்லாததால், திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டால் பாக்ஸ் ஆபீஸில் எடுப்படாமல் போய்விடுமோ என்ற பயம் தயாரிப்பு நிறுவனங்களின் மத்தியில் எழுந்திருக்கிறது. படம் தயாரான உடன் அதை ஒடிடி-யில் வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனங்கள் யோசித்து கொண்டிருக்கின்றனவாம்.
இதையறிந்த அக்ஷய் குமார், படம் ஒடிடி-யில் வெளியானால் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை இது சந்தேகிப்பது போலாகி விடுமென நேரடியாகவே சூர்யாவிடம் பேசியதாக கூறுகிறார்கள். சம்பளத்தை குறைக்க அக்ஷய் குமார் தயாராக இருப்பதாக சொல்லியதாகவும் தெரிகிறது. படம் வெளியாகி லாபம் வந்தால் அதில் பங்கு கொடுங்கள் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தர்மசங்கடத்திற்கு உள்ளான சூர்யா தரப்பும், அபுதான்ஷியா நிறுவனமும் ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கை திரையரங்குகளில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.