No menu items!

சக்டா எக்ஸ்பிரஸ் இனி ஓடாது

சக்டா எக்ஸ்பிரஸ் இனி ஓடாது

ஆண்கள் கிரிக்கெட்டைக் கொண்டாடும் அளவுக்கு இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில்லை. அப்படி கொண்டாடி இருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஜுலன் கோஸ்வாமி ஓய்வு பெறுவது தலைப்புச் செய்தியாகி இருக்கும். பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அவரை கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால் பெண்கள் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் இல்லாததால், பெண்களுக்கான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தும் அதிக புகழ் வெளிச்சம் இல்லாமல் ஓய்வு பெறப் போகிறார் ஜுலன் கோஸ்வாமி. இந்தியாவின் சக்டா எக்ஸ்பிரஸ்.

கடந்த 2002-ம் ஆண்டுமுதல் இந்திய பெண்கள் அணியின் முக்கிய பந்துவீசாளராக இருந்த இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 252 விக்கெட்கள் உட்பட அனைத்து விதமான போட்டிகளிலும் 352 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா மிகச் சாதாரண அணியாக இருந்தபோது ஆடவந்த இவர், தனது சிறப்பான பந்துவீச்சால் உலகின் சிறந்த 3 அணிகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள ஒருநாள் போட்டிக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 39 வயதான அவர், கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் இருந்து 58 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சக்டாதான் ஜுலன் கோஸ்வாமியின் சொந்த ஊர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த அவருக்கு டிவி மூலமாகத்தான் கிரிக்கெட் அறிமுகமானது . “அப்போதெல்லாம் விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றை மட்டும்தான் தூர்தர்சனில் அதிகம் ஒளிபரப்புவார்கள். எங்கள் வீட்டில் அக்கம்பக்கத்தினர் எல்லாம் பெரும் கூட்டமாக சேர்ந்துகொண்டு அந்த ஆட்டங்களைப் பார்ப்பார்கள். கபில்தேவ் விக்கெட் வீழ்த்தினால் வீடே அதிரும். முதலில் எனக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், கபில்தேவ் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது” என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஜுலன் கோஸ்வாமி.

ஜுலன் மனதில் கபில்தேவ் போட்ட கிரிக்கெட் விதை, 1987-ல் நடந்த பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டியின்போது முளைவிட்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் பால் கேர்ள்களாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பந்தைப் பொறுக்கிப் போடும் வாய்ப்பு ஜுலனுக்கு கிடைக்க, அவரது கிரிக்கெட் ஆசை கொழுந்துவிட்டு எரிந்தது.

14 வயதில் மற்ற குழந்தைகளெல்லாம் டாக்டராகவும், இஞ்ஜினீயராகவும் ஆசைப்பட, ஜுலன் கொஞ்சம் வித்தியாசமாக வேகப்பந்து வீச்சாளராக ஆசைப்பட்டார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அம்மாவின் ஆதரவைப் பெற்று கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல சம்மதம் வாங்கினார் ஜுலன்.

இவரது ஊரில் இருந்து 58 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்கத்தாவில் பயிற்சி மையம் இருந்தது. வாரத்துக்கு 3 நாட்கள் பயிற்சி. காலை 7.30 மணிக்கு பயிற்சி மையத்தில் இருக்க வேண்டுமானால் காலை 5.30க்கு ஜுலன் ரயிலைப் பிடிக்க வேண்டும். பிறகு பஸ்ஸைப் பிடித்து நீண்ட அலைச்சலுக்கு பிறகுதான் பயிற்சி மையத்தை அடைய முடியும். கிரிக்கெட் மீதுள்ள ஆசையால் அதற்கும் ஜுலன் தயாரானார்.

பயிற்சி மையத்தில் பட்டை தீட்டப்பட்ட பின்னர், ஜுலனின் பந்துவீச்சு வேகத்தைக் கண்டு உள்ளூர் சிறுவர்கள் அரண்டு போனார்கள். ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்று செல்லப் பெயர் வைக்கும் அளவுக்கு அவரது பந்துவீச்சு ஆக்ரோஷமாக மாறியது.

உள்ளூர் கிரிக்கெட்டைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் என்று கடந்து 19 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தார் ஜுலன் கோஸ்வாமி. 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரி மைதானத்தில்தான் ஜுலன் கோஸ்வாமி எனும் ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ சர்வதேச கிரிக்கெட்டில் வேகமெடுத்தது. இப்போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனையான கரோலின் அட்கின்ஸின் விக்கெட்டை வீழ்த்தி தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் ஜுலன் கோஸ்வாமி.

அன்றிலிருந்து இன்று வரை மகளிர் கிரிக்கெட் உலகில் முடிசூடா ராணியாக, பேட்டிங் வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் ஜுலன் கோஸ்வாமி.

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது, அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, இவவை எல்லாவற்றுக்கும் மேலாக தபால் தலை வெளியீடு என்று பல கவுரவங்கள் ஜுலனைத் தேடி வந்துள்ளன.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இந்த துறையை விடப்போவாதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார் ஜுலன் கோஸ்வாமி. “நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். அதுவும் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துவிட்டது. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் நடுவில் யாரும் வருவதை விரும்பவில்லை அதற்காகவே திருமணம்கூட செய்துகொள்ளவில்லை” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஜுலன். கிரிக்கெட்டை இந்த அளவுக்கு நேசிக்கும் ஜுலன் ஓய்வுபெறுவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் வருத்தமான செய்திதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...