No menu items!

நியூஸ் அப்டேட்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசின் விதி செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

நியூஸ் அப்டேட்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசின் விதி செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு கோவில்களில், அனைத்து சாதியைச் சேர்ந்த 28 பேரை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர்களில் 4 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 2020ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்திற்கென புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அந்த புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் இந்த புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக நடந்துவந்த நிலையில்,  தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சிக்கு சென்னை ஒரு ரோல் மாடல் – முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்

சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி, இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில், “பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

G Pay, Phonepe பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை – மத்திய அரசு

கூகுள்-பே, போன்-பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக  இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. இதனையடுத்து, மக்களின் அன்றாட பயன்பாட்டில் ஒன்றாக மாறியுள்ள டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற செய்தி வெளியாகி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம், ‘யுபிஐ டிஜிட்டல் சேவை என்பது பொது மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த பங்களிப்பை தந்து வருகிறது. எனவே, யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. இந்த சேவை வழங்குவோர் சந்திக்கும் செலவுகளை வேறு வழியில் அரசு மீட்டெடுக்கும். டிஜிட்டல் பேமென்ட் சேவைகளை ஊக்குவித்து பயனாளர்கள் சிறந்த சேவை பெற அரசு தொடர்ந்து ஆதரவு தரும்” என தெரிவித்துள்ளது.

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்துக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் அழைப்பு விடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆக்கிரமித்து இருந்ததால், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை அடையும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடியுள்ளனர். அதிக அளவில் விவசாயிகள் கூடுவதை தடுக்க சிங்கு, காஜிபூர் உள்ளிட்ட டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ல்சனை 3-வது முறையாக வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் மயாமியில் நகரில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 7ஆவது சுற்றில் உலக சாம்பியனான கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தா. இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் தொடரின் வெற்றியாளராக மேக்னஸ் கார்ல்சன் அறிவிக்கப்பட்டார். பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...