தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருநாள் பயணமாக நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டில்லியில் இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பு மன நிறைவை அளித்தது. தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளேன். காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இன்றைய சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முறையிட உள்ளேன். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி கூறவுள்ளேன். இன்று இரவே சென்னை திரும்புகிறேன் ‘ என தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் – ஓபிஎஸ்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. அதில், “அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை; அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம்” என கூறினார்.
ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது அல்ல – ஜெயக்குமார்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தங்களுக்கு சாதமான தீர்ப்பு கிடைத்துள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தர்.
கே.பி. முனுசாமி, ‘பொதுக்குழு உறுப்பினர்கள் 2,512 பேர் பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு இல்லை. தீர்ப்பு விவரம் முழுவதும் கிடைத்ததும் அதிமுக நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.
பூமியில் கடல்கள் உருவானதற்கு சிறுகோள்கள் காரணம் – ஆய்வில் தகவல்
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு ஹயபுசா-2 என்ற விண்கலத்தை ஏவியது. இதன் மூலம் 300 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சிறிய பாறைகளால் ஆன ரியுகு சிறுகோளில் இருந்து, 2020ஆம் ஆண்டு பூமிக்கு 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகள் எடுத்து வரப்பட்டன. இவற்றை வைத்து டோக்கியோ, ஹிரோஷிமா பல்கலைக்கழகங்கள் உள்பட ஜப்பான் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு செய்தன. இதில், இந்த மாதிரிகளில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரியுகு சிறுகோள் மாதிரிகள் மூலம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவ்வாறு தோன்றின என்ற மர்மத்துக்கு துப்பு கிடைக்கும். கொந்தளிப்பான மற்றும் கரிம நிறைந்து சி வகை சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி – சீனா அறிவிப்பு
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்த படியே வந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்றுகொள்ள தம்பதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது. கடந்த ஆண்டு சீனாவில் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 குழந்தைகளாக இருந்தது. அதிக வாழ்க்கை செலவு, கலாச்சார மாற்றம், சிறிய குடும்பங்கள் மீது ஆர்வம் உள்ளிட்டவை குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங்களாக உள்ளன.
இதையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் கொள்கை வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், வரிகள் தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, இளம் குடும்பங்களுக்கு கல்வி, வீட்டு கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த வலியுறுத்தி உள்ளனர்.