இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஹீரோ உருவாவது வழக்கம். அப்படி 1993-ல் இந்தியாவுக்கு கிடைத்த ஹீரோ வினோத் காம்பிளி. சச்சின் டெண்டுல்கரின் பள்ளிக்கால தோழரான இவர், 1993-ம் ஆண்டில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சதம் இரட்டை சதம் விளாசி ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படி ஹீரோவாக வலம்வந்த காம்பிளி, இப்போது குடித்துவிட்டு சாலையில் அலைவதாக சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரை தேடியபோது, குடும்பம் நடத்தவே காசில்லாமல் வறுமையில் வாடுவது தெரியவந்துள்ளது.
முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 793 ரன்கள், 1993-ம் ஆண்டில் 113 ரன்களை சராசரியாக வைத்திருந்த பேட்டிங் திறமை என்று சச்சினுக்கு போட்டியாக இருந்த வினோத் காம்பிளியின் இந்த வீழ்ச்சி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வினோத் காம்பிளி என்றதும் நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வரும் விஷயம், அவரது தடிமனான தங்கச் சங்கிலிதான். ரன்களை எடுக்க ஓடும்போது அந்தச் சங்கிலி குலுங்கும் அழகே தனி. அதற்கு ஜோடியாக அவரது கைகளில் அணிந்திருக்கும் பிரேஸ்லட்டும் மின்னும். ஆனால் இப்போது உடைந்துபோன தனது செல்போனின் ஸ்கிரீனைக்கூட மாற்ற வசதியில்லாமல் இருக்கிறார் காம்பிளி. சொந்தமாக கார் இல்லாத நிலையில் நண்பர் ஒருவர் கொடுத்துள்ள காரில் கிரிக்கெட் கிளப்களுக்கு வந்து செல்கிறார். இத்தனைக்கும் காரணம் அவரது குடிப்பழக்கம்.
இந்திய அணியில் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே அவரிடம் குடிப்பழக்கம் இருந்துள்ளது. போட்டிக்கு முந்தைய நாட்களில் நன்றாக குடித்துவிட்டு, சக ஆட்டக்காரர்களின் அறைகளுக்கு சென்று அவர்களை தூங்கவிடாமல் செய்ய, அவர்களுக்கு காம்பிளி மீது கோபம் வந்திருக்கிறது. இது தொடர்ந்தால் போட்டிக்கு முந்தைய நாட்களில் மற்றவர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு, ஆட்டத்தை பாதிக்கும் என்ற நிலை வர அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பிறகு, பயிற்சியாளராக அவதாரம் எடுத்துள்ளார் வினோத் காம்பிளி. காம்பிளியின் நண்பரான சச்சின் டெண்டுல்கர், தனது ‘டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியி’யில் அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் அங்கு பணிபுரிய முடியவில்லை. இதைத்தொடர்ந்து மும்பை டி20 லீக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த அவர், கொரோனா காலத்துக்கு பிறகு சரியான வேலை இல்லாமல் தவித்து வருகிறார்.
“பிசிசிஐ எனக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாயை பென்ஷனாக வழங்கி வருகிறது அதை வைத்துத்தான் குடும்பம் நடத்துகிறேன். எனக்கு வேலை வேண்டும். அதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்தின் தயவை எதிர்பார்க்கிறேன். அவர்கள் என்னை பயிற்சியாளராக நியமித்தால் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரை என்னால் உருவாக்க முடியும்” என்கிறார் வினோத் காம்பிளி.
ஆனால் காம்பிளியின் பழையகால நடவடிக்கைகள் மற்றும் குடிப்பழக்கத்தால் அவருக்கு வாய்ப்பு வழங்க மும்பை கிரிக்கெட் வாரியம் யோசிக்கிறது. ஆனால் தனது குடிப்பழக்கத்தால்தான் இந்த நிலை வந்தது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் காம்பிளி.
“நான் ஒன்றும் குடிப்பழக்கத்துக்கு முழுமையாக அடிமையானவன் அல்ல. நான் ஒரு சோஷியல் டிரிங்கர். எப்போதாவது குடிப்பேன். அப்படி குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? அதே நேரத்தில் குடிப்பழக்கத்தால் என் கிரிக்கெட் திறன் பாதிக்கப்பட்டது என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருமுறை ரஞ்சி கோப்பை போட்டிக்கு முந்தினம் இரவில் 10 பெக் அடித்தேன். எங்கள் அணியின் பயிற்சியாளர், அடுத்த நாள் காலையில் நான் எழுவேனோ என்றுகூட சந்தேகப்பட்டார். ஆனால் அடுத்த நாள் நான் போட்டியில் சதம் எடுத்தேன். அதனால் குடிப்பழக்கத்தால் என் கிரிக்கெட் திறன் பாதித்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது” என்கிறார் வினோத் காம்பிளி.
சச்சின் டெண்டுல்கரிடம் உதவி கேட்கலாமே என்று கேட்டால், “சச்சின் எனது சிறந்த நண்பன். என் சூழ்நிலை அவனுக்கு தெரியும். அதேநேரத்தில் நான் அவனுக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. எனது கிரிக்கெட் ரசிகர்களிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். எனக்காக பிரார்த்தியுங்கள். என் மீது அன்பு செலுத்துங்கள். இது போதும்” என்கிறார்.