ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று முன் தினம் நடைபெற்றது. முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பிகொண்டிருந்தார். அப்போது, பாஜகவினர் அவரது காரை மறித்து கோஷங்கள் எழுப்பியதோடு, பெண் ஒருவர் அவரது கார் மீது தனது காலணியை வீசினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் உட்பட 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 6 பேரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் கார் மீது காலணி வீசிய தனலட்சுமி உட்பட சரண்யா, தெய்வயானை ஆகிய மூன்று பெண்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது. இந்நிலையில், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று இரவு 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரை சந்திக்கிறார்.
11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு ஆக.20-ம் தேதி தொடக்கம்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ‘தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் அனைத்துப் பிரிவுகளிலும் சென்ற ஆண்டைவிட விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாடு மாணவர்கள் 2022-க்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இன்று வெளியிடப்படுகிறது. இதில் இடம்பெறாதவர்களுக்கு அடுத்து வரக்கூடிய பட்டியல்களில் வாய்ப்பு கிடைக்கும். இந்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும். இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. அக்கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடுகள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன” என்று அவர் கூறினார்.
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமைத்தை ரத்து செய்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு
இந்தியாவில், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதாக இருந்தது. அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெண்கள் உலகக்கோப்பை போட்டியை நடத்தும் இந்தியாவுக்கான உரிமத்தை ரத்து செய்ததுடன், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா இன்று தற்காலிகமாக ரத்து செய்தது. ஃபிஃபா-வின் இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எதிர்ப்பை இலங்கை வந்த சீன உளவுக் கப்பல்
சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் கொண்டது. இதனால், ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்க முடியும். இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஒருவார காலத்திற்கு அங்கே தங்குகிறது.
சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும்; இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என இந்தியா சார்பில் எச்சரிக்கப்பட்டது. இதனால், இந்தியா இந்தக் கப்பலை அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுத்தது. இந்நிலையில் தான், இந்தக் கப்பல் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது.