நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் மீட்கும் படங்களைத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படி சிக்கியவர்கள், மீட்கப்படும் வரை மண்ணுக்குள் என்ன மனநிலையில் இருப்பார்கள். அவர்கள் என்னென்ன இன்னல்களை படுவார்கள் என்பதை விளக்கும் படம் ‘மலையன் குஞ்ஞு’.
கேரளாவில் உள்ள ஒரு மலைப்பகுதியில், எலக்ட்ரானிக் மெக்கானிக்காக இருப்பவர் சுனில் குமார் (பகத் பாசில்). பகல் நேரத்தில் உள்ள சத்தங்கள் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தினமும் அதிகாலை 3 மனிக்கு எழுந்து தனது வேலைகளைச் செய்கிறார். அவரது அப்பாவின் தற்கொலையால் சற்று மனநலம் பிறழ்ந்தவராகவும் இருக்கிறார். இந்தச் சூழலில் பக்கத்து வீட்டில் புதிதாக பிறந்த குழந்தையின் அழுகுரல் அவருக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறது. அந்த குழந்தையை வெறுக்கிறார். அதை பக்கத்து வீட்டில் இருந்து அகற்ற முயற்சிக்கிறார். இந்த சூழலில் ஒருநாள் கடுமையான நிலச்சரிவில் சுமார் 50 அடி ஆழத்துக்குள் சிக்கிக் கொள்கிறார். அப்படி மண்ணுக்குள் சிக்கிக் கொண்டவர் அதிலிருந்து மீள்வதுடன் அந்த குழந்தையையும் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
‘விக்ரம்’ படத்தின் நாயகர்களில் ஒருவராக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த பகத் பாசில்தான் நாயகன். ஆரம்ப காட்சிகளில் மற்றவர்களிடம் காட்டும் வெறுப்பு, வீண் சண்டைகளில் ஈடுபடுவது என்று மனநலம் பாதிக்கப்பட்டவரின் ஆரம்ப கால மனநிலையை நன்றாக வெளிப்படுத்துகிறார். உள்ளுக்குள் தந்தையின் மரணத்துக்காக உருகுவது, வெளியில் கோபக்காரர் என்ற போர்வையுடன் சுற்றுவது என்று ஒரே நேரத்தில் 2 உனர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
ஆரம்ப பாட்சிகளின் குழந்தை பக்கத்து வீட்டு குழந்தையின் பெயரை கோபமாக உச்சரிப்பது, பின்னர் மண்ணுக்குள் புதைந்த நிலையில் அக்குழந்தையின் அழுகுரலைக் கேட்டு கலங்குவது. பரிதாபத்துடன் மண்ணில் ஊர்ந்துகொண்டே அந்த குழந்தையை பாசமாக கூப்பிட்டுக்கொண்டே தேடி அலைவது என்று அந்த கதாப்பாத்திரத்தின் மாற்றங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுப் போட்டியில் அவரை இப்படம்ன் நிச்சயம் இடம்பெறச் செய்யும்.
படத்தின் இரண்டாவது நாயகன் அதன் கலை இயக்குநரான ஜோதிஷ் சங்கர். மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் ஜீப், திடீரென பாயும் வெள்ளம், மீட்புப் பணிகள் என எல்லாவற்றையும் சிறப்பாக வடிவமைத்துள்ளார். அதேபோல் படத்தின் கேமராவும் நம்மை பூமிக்குள் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் அழைத்துச் செல்கிறது. இதற்காக கேமராமேன் மகேஷ் நாராணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம். ’டேக் ஆஃப்’, ‘மாலிக்’ ஆகிய 2 படங்களை இயக்கியுள்ள இவர், கொஞ்சமும் ஈகோ பார்க்காமல் தனது உதவியாளராய் இருந்த சாஜிமோன் பிரபாகருக்கு (இப்படத்தின் இயக்குநர்) கேமராமேனாக பணியாற்றியுள்ளார்.
இசை ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் அதிகம் இல்லையென்றாலும், நிலசரிவு காட்சிகள், அதிகாலை சூழல் போன்ற சூழ்நிலைகளை மக்கள் மனதில் பதியவைப்பதில் அவரது இசை முக்கிய பணியாற்றியுள்ளது.