இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், இந்தியாவின் தலைநகரை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்து அமைப்பைச் சேர்ந்த மதகுருக்கள் மற்றும் வல்லுநர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
இந்து மதத்தைச் சேர்ந்த மத குருக்களின் மிகப்பெரிய கூட்டமான மகா மேளா, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது. இந்த மகா மேளாவில் ‘இந்து ராஷ்டிரத்துக்கான அரசியலமைப்பு சட்டத்தை தாக்கல் செய்யும் முயற்சியில் சில மத குருக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்து ராஷ்டிரத்துக்கான அரசமைப்பு சட்டத்தை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வாரணாசியை அடிப்படையாகக் கொண்ட சங்கராச்சார்யா பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப், இந்து ராஷ்டிர நிர்மான் சமிதியின் தலைவர் கமலேஷ்வர் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பி.என்.ரெட்டி, பாதுகாப்புத் துறை வல்லுநர் ஆனந்த் வர்தன், கல்வியாளர் சந்திரமோகன் மிஸ்ரா, உலக இந்து கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு பரிந்துரைக்கும் சில முக்கிய விஷயங்கள்….
இந்து ராஷ்டிரத்துக்காக 750 பக்கங்களைக் கொண்ட புதிய அரசியலைப்பு சட்டம் உருவாக்கப்படும். இதில் 300 பக்கங்களைக் கொண்ட முதல் பாதி 2023-ம் ஆண்டில் நடக்கும் மகாமேளாவில் தாக்கல் செய்யப்படும்.
இந்து ராஷ்டிரத்தின் அரசியலைப்பு சட்டப்படி இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு மாற்றப்படும். இதைத்தவிர மதங்களுக்கான பாராளுமன்றம் (Parliament of Religions’) காசியில் கட்டப்படும்.
அகண்ட பாரதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்து ராஷ்டிரத்தின் வரைபடம் இருக்கும். இந்த வரைபடத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றிருக்கும். என்றாவது ஒரு நாள் இந்த நாடுகள் மீண்டும் இந்தியாவுடன் இணையும் என்ற நம்பிக்கையில் இந்த நாடுகள் வரைபடத்தில் இணைக்கப்படுவதாக ஆனந்த் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
இந்துக்களுக்கு மட்டும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்துக்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாது. ஆனால் இந்துக்களுக்கு இணையான மற்ற அனைத்து சலுகைகளையும் அவர்கள் பெறலாம். கல்வி, வேலை, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்துக்களுக்கு சமமான உரிமை சிறுபான்மை இன மக்களுக்கு வழங்கப்படும்.
25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம். மொத்தம் 543 எம்பிக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் திரும்ப பெறப்படும். வருணாசிரம முறைப்படி புதிய சட்டங்கள் வகுக்கப்படும்.
குற்றங்களில் ஈடுபடுவோருக்கு திரேதாயுகம் மற்றும் துவாபர யுகத்தில் வழங்கப்பட்ட தண்டனைகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.
குருகுல கல்விமுறை மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆயுர்வேதம், கணிதம் ஆகியவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்.
விவசாயத்துக்கு முழு வரிவிலக்கு வழங்கப்படும்.
அனைத்து குடிமக்களுக்கும் ரானுவக் கல்வி கட்டாயமாக்கப்படும்.
இதுபோன்ற மேலும் பல சட்டங்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.