இந்திய ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ என்ற ஹேஷ்டேக்குடன் திரையரங்குகளில் களமிறங்கியிருக்கும் படம்.
1994-ல் டாம் ஹேங்க்ஸ் நடித்த ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமைகளை ஒரிஜினல் ஸ்டூடியோவிடமிருந்து வாங்கிய அதுல் குல்கர்னி, எரிக் ராத்தின் ஒரிஜினல் ஸ்டோரி போர்ட்டில் இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி பல மாற்றங்களை செய்திருக்கிறார். அதாவது இத்தாலியன் பிட்ஸாவில் நம்மூர் மசாலா சமாச்சாரங்களை டாப்பிங் செய்வது போல, ஃபாரெஸ்ட் கம்ப்பின் லைனை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்தியாவின் கலாச்சார பாரம்பரிய விஷயங்களை ‘லால் சிங் சத்தா’வில் தூவியிருக்கிறார்கள்.
லால் சிங் சத்தா, அம்மா பையன். ஆடிக்காற்று அடிச்சாலும் கூட, நகர மாட்டார். அந்தளவுக்கு ஸ்லோ ஆசாமி. அந்த லால் வாழ்க்கையில் பள்ளி தோழி ரூபா அவ்வப்போது வந்து போக, என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதுதான் கதையே.
தாடி மீசை இல்லாத லால் சிங் சத்தாவாக அமீர்கானைப் பார்க்கும் போது, ‘பிகே’ படத்தின் ஷூட்டிங்கிலிருந்து அப்படியே நேராக இங்கே ஓடி வந்து நடிக்க ஆரம்பித்து விட்டாரோ என்று ஒரு நொடி சந்தேகம் எழுகிறது. 20 வருடம் ஸ்கிரிப்ட்டுக்கும், மூன்று வருடம் ஷூட்டிங்குக்கும் செலவிட்டவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனகெட்டு இருக்கலாம்.
கண்களை உருட்டுவது, தொப்புளுக்கு மேலே இழுத்து பெல்ட் போட்டு இறுக்கிய பேண்ட்டுடன் டர்போ படத்தின் நத்தையைப் போல் ஒடுவது என பாடி லாங்க்வேஜில் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார். ஃபாரெஸ்ட் கம்ப்பின் இந்திய உருவாக்கம் என்று டைட்டிலில் போட்டிருப்பதால், ஒரிஜினல் படத்தில் டாம் ஹேங்க்ஸின் பாடி லாங்க்வேஜூடன் ஒப்பிடுகையில், அமீர்கான் ரொம்ப தூரம் தள்ளி ஓடிக்கொண்டிருக்கிறார். ஆனால், டாம் ஹேங்க்ஸ் மாதிரி இந்தப் படத்தில் நான் ஓடுவது ஹாலிவுட் சாலைகளில் ஓடவில்லை பாஸ். நம்முடைய இந்திய சாலைகள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்பதை தனது நடிப்பின் மூலம் உணர வைத்திருக்கிறார்.
அநேகமாக அமீர்கான் மீண்டுமொரு கமர்ஷியல் படத்தில், ரொமாண்டிக் படத்தில், ஆக்ஷன் படத்தில் நடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த தலைமுறைக்கு ஏகே-வை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் 90-ஸ் கிட்ஸூக்கு கூட ஏகே என்றால் பிகே-தான் ஞாபகத்திற்கு வருகிறார்.
கரீனா கபூர் திருமணத்திற்கு பிறகு விட்ட ப்ரேக்கில், தனது பெர்ஃபார்மன்ஸ் ஃபார்ம்மை இழந்துவிட்டார் போல. அவரது நடிப்பில் இருந்த பழைய ஜோஷ் மிஸ்ஸிங். பேசிய சம்பளத்தை கொடுக்காமல் விட்டு விட்டார்களோ என்று ஆடியன்ஸ் யோசிக்குமளவிற்கு, போனால் போகட்டும் என்று நடித்திருப்பது போல் தெரிகிறது.
படத்தில் நடிப்பில் கவனத்தை கவர்ந்திருப்பவர் மோனா சிங். 40 வயதுதான் ஆகிறது. 57 வயது அமீர்கானின் லால் சிங் சத்தா கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்திருக்கிறார். கரீனா கபூர் நடிப்பில் விட்டதை மோனா சிங் அலேக்காக தூக்கிப் பிடித்திருக்கிறார்.
நாக சைதன்யாவுக்கு இந்தப்படம் ஹிந்தி எண்ட்ரீ. ஆனால், அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் ஜட்டி, பனியனை பற்றி பேசுவது போல் வைத்திருப்பது சலிப்புத் தட்டுகிறது. இது வரை ஹேண்ட்சம்மாக பார்த்தவரை, வாய் பக்கம் பிதுங்க வைத்து, ஒரு அம்மாஞ்சிப் போல காட்டியிருக்கிறார்கள். தெலுங்கில் ‘லவ் ஸ்டோரி’ என உற்சாகமாக வலம் வந்த நாக சைதன்யாவின் எண்ட்ரீக்கு இது அநேகமாக கேட் பாஸ் போட்டு விட்டது.
படத்தில் சீரியஸான சமாச்சாரங்களுக்கு மத்தியில் அமீர் கான் – கரீனா கபூர் காதல் ஒரு ஆறுதலாக இருக்குமென நினைத்தால், திரைக்கதையாசிரியர் அதுல் குல்கர்னியும், இயக்குநர் அத்வைத் சந்தனும் கொஞ்சம் கூட ஆடியன்ஸ் மீது கருணைக் காட்டவில்லை. தனக்கு காதல் என்றால் என்னவென்று தெரியும் என்று அமீர் கான் சொன்னப்பிறகும், கரீனா கபூர் ஏன் தவறான முடிவை எடுக்கிறார் என்பதற்கும் நியாயமான பின்னணி ஏதும் இல்லை. இதனால் அவர்கள் இருவருடைய காட்சிகளில் படபடவைக்கும் லப்-டப் மொமெண்ட்கள் சுத்தமாக இல்லை.
சின்ன வயதில் அமீர்கான், டான்ஸ் மூவ்மெண்ட் சொல்லிக் கொடுத்த அந்த பையன்தான் ஷாரூக்கான் என்று காட்டுவது செம. அந்த டான்ஸ் மூவ்மெண்டை ஷாரூக் கான் பட படங்களில் ஆடியிருக்கும் க்ளிப்பிங்ஸையும் அடுத்தடுத்து காட்டும் போது, அதுவரை ஏர் ப்ளேன் மோடில் இருக்கும் தியேட்டர் கைத்தட்டல்களினால் வைரேட்டர் மோடுக்கு மாறுகிறது.
ஃபாரெஸ்ட் கம்ப் படத்தில் 1960 -70களில் நிலவிய உள்நாட்டு, வெளிநாட்டு பிரச்சினைகளின் போது அமெரிக்கா எப்படி தாக்குப்பிடித்தது என்று ஆழமாய் காட்டியிருப்பார்கள். ஆனால் இங்கே இந்திரா காந்தி படுகொலை, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் லால் சிங் சத்தா பாதிக்கப்படுவதாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் இதற்கு பிறகு காட்டும் அரசியல் சம்பவங்கள் நம்மிடையே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
ஆனால், காட்சிகளின் பின்னணியில் பல நகாசு வேலைகளை சைலண்டாக காட்டியிருக்கிறார்கள். அமீர்கான் கல்லூரியில் படிக்கும் போது, கல்லூரி சுவர்களில் ’பண்டல் அப் மண்டல்’ போன்ற வாசகங்களையும், அமீர்கான் ஓடும் போது இந்தியப் பிரதமர் கைக்கூப்பி வணக்கம் சொல்லும் சாலையோர ஒவியத்தையும், ரயில் நிலையத்தில் ஸ்வட்ச் பாரத் முயற்சியையும் காட்டுகிறார்கள். இது போன்ற பல குறியீடுகள் இருக்கின்றன. இவை அரசியல் தளத்தில் விவாதிக்கப்படுமா இல்லை ரசிக்கப்படுமா என்பதற்கான விடை இதுவரையில் தெரியவில்லை.
ப்ரீதம் இசை ஓடிக்கொண்டே இருக்கும் லால் சிங் சத்தாவிற்கு கொஞ்சம் தெம்பு அளிக்கிறது. ஆனால், எடிட்டிங்கில் கொஞ்சம் பாரப்பட்சம் பார்க்காமல் கைவைத்திருந்தால், படம் விறுவிறுப்பு கொஞ்சம் குறையாமல் போயிருக்கும்.
லால் சிங் சத்தா ரொம்ப நேரம் ஓடுகிறார். திரைக்கதையில் அவரை பின்தொடர சுவாரஸ்யமான விஷயங்கள் அதிகம் இல்லை. ஆனால், படம் பார்க்கும் நாமும் அவரை பின்தொடர்ந்து ஓடி வருவதாக நினைத்துகொண்டு, அவர் எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கிறார்.