கொரோனாவுக்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நரேந்திர மோடியின் சொத்துக் கணக்கின்படி கடந்த ஓராண்டில் இந்த சொத்துகளின் மதிப்பு 26.13 லட்சம் உயர்ந்துள்ளது.
அவரிடம் உள்ள சொத்துகளின் பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில சொத்துகளைப் பார்ப்போம்…
பிரதமர் நரேந்திர மோடியின் கையில் 35,250 ரூபாய் இருப்பில் உள்ளது.
தபால் நிலையத்தில் 9 லட்சத்து 5 ஆயிரத்து 105 ரூபாய்கான தேசிய சேமிப்பு பத்திரங்களை வைத்துள்ளார்.
1,89,305 ரூபாய் மதிப்பில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் அவர் பெயரில் உள்ளன.
காந்தி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பிரதமர் நரேந்திர மோடியின் வங்கிக் கணக்கில் 46 ஆயிரத்து 555 ரூபாய் உள்ளது.
நிறுவனங்களிலோ மியூச்சுவல் பண்ட்களிலோ பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்குகள் ஏதும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடியிடம் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 1.73 லட்சம் ரூபாய்.
பிரதமரின் அடிப்படை மாதச் சம்பளம் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்.
2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தின் தலைநகரான காந்தி நகரில் மோடி வாங்கிய ஒரு நிலத்துக்கு 2 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். 1.3 லட்சத்துக்கு அவர் வாங்கிய அந்த மனையின் தற்போதைய மதிப்பு 1.1 கோடி ரூபாய். ஆனால் அந்த நிலத்தை அவர் நன்கொடையாக வழங்கிவிட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.
பிரதமருக்கு சொந்தமாக கார்கள் ஏதும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சின்கா, கிஷன் ரெட்டி, ஆர்.கே.சிங் உள்ளிட்ட 29 அமைச்சர்கள் தங்கள் சொத்துக் கணக்கை காட்டியுள்ளனர்.
நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்குக்கு 2.54 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 2.97 கோடி ரூபாய்க்கான அசையா சொத்துகளும் உள்ளன.