இந்தியா முழுவதும் பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் அதிகமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 41% மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 59% மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் சேர்ந்துள்ளார்கள்.
மேலும், அந்த அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சதவிகிதம் 54 ஆகவும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சதவிகிதம் 46 ஆகவும் உள்ளது. அதாவது, கிட்டதட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இணையாக தனியார் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை இதே விகிதத்தில் சென்றால் விரைவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை தனியார் பள்ளிகள் முந்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.
மணிப்பூர் (67%), நாகலாந்து (62%) ஹரியானா (61%), தெலுங்கானா (57%), புதுச்சேரி (57%), உத்தரகாண்ட் (55%), பஞ்சாப் (51%) ஆகிய மாநிலங்களில் தற்போதே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தமிழ்நாடும் இதனை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலைக்கு என்ன காரணம்? ஏன் மக்கள் அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கையிழந்து, தனியார் பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள்?
அரசுப் பள்ளி ஆசிரியையும் கல்வி செயற்பாட்டாளருமான சு. உமா மகேஸ்வரியை கேட்டோம்.
“ஆசிரியர் பற்றாக்குறை, அரசு ஓராசிரியர் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளால் தரப்படும் அழுத்தம், பெற்றோர்களிடையே அரசுப் பள்ளிகள் குறித்து விழிப்புணர்வின்மை, தனியார் பள்ளிகள் மேல் உள்ள மோகம்; அரசுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மக்களுக்கும் அரசுப் பள்ளிகளின் மீதிருக்கும் அலட்சியம், ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% தனியார் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு உட்பட பல காரணங்கள் உள்ளன.
சென்னையில் 2,400 குழந்தைகளுக்கு மேல் படிக்கும் மிகப் பெரிய பள்ளி ஒன்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமையாசிரியரே இல்லை. தலைமையாசிரியர் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பள்ளி இயங்குகிறது என்றால், அந்த பள்ளி எப்படியிருக்கும்? பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்பெடுக்க ஆசிரியர் இல்லை. இதனால், எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்த மணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் வழிக்கு மாற வேண்டிய கட்டாயம்.
இப்படி தமிழ்நாடு முழுவதும் எந்தப் பள்ளியை ஆய்வு செய்தாலும் அங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதை பார்க்க முடிகிறது. உடற்கல்வி, இசை, ஓவியம் இவற்றுக்குப் பகுதி நேர ஆசிரியர்கள்தான் உள்ளனர். கொரோனா காரணமாக, கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் ஆறு லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்தார்கள். இவ்வளவு மாணவர்கள் புதிதாக வந்தும் அதற்கேற்ப புதிய ஆசிரியர் நியமனங்கள் இல்லை. இதனால், புதிதாக சேர்ந்த மாணவர்கள் திரும்பி தனியார் பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள்.
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதுதான் அரசுப் பள்ளிக்கும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கும். ஆனால், அரசோ பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் வெளியே இருக்கும் நிலையில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடுகிறது. அதுவும் வெறும் 10 மாதங்களுக்கு ஊதியம் கொடுத்துக் கற்பித்தல் பணியில் ஈடுபடச் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல்.
இன்னொரு பக்கம், ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகள் நிறைய கொடுக்கப்படுகிறது.
இடவசதி இல்லாமல்தான் பல பள்ளிகளில் மரத்தடியில் வைத்து பாடம் நடத்துகிறார்கள். ஆனால், அரசு, மரத்தடியில் பாடம் நடத்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்புகிறது. எனில், குழந்தைகளை எங்கு அமர வைப்பது? அரசு பள்ளிகளில் இடமில்லை நீங்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்லுங்கள் என்பதுதானே இதற்கு பின்னால் இருக்கும் மறைபொருள்.
அரசு பள்ளிகளுக்கு செலவழிக்க நிதியில்லை என கைவிரிக்கும் அரசு, ‘கல்வி உரிமைச் சட்டம்’ மூலம் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் படிக்க, தனியார் பள்ளிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது. இந்த பணத்தை அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்து மேம்படுத்தலாமே?
அதிகம் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்தவை, அத்தகைய பள்ளிகளில் தங்கள் குழந்தை படிப்பதுதான் உறவினர்கள் மத்தியில் தங்களுக்கு கெளரவம் என்ற மனப்போக்கு பெற்றோர்களிடம் உள்ளது. ஆங்கில மோகமும் முக்கிய காரணம். அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை, ஃபேன் இல்லை, மிகப் பழைய கட்டிடங்கள் காரணமாக பாதுகாப்பு இல்லை போன்ற காரணங்களாலும் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து செல்கிறார்கள். அரசாங்கம் முறையாக அரசுப் பள்ளிகளை சீரமைத்து, அனைத்துத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் கொண்டுவந்தால் பெற்றோர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லப்போகிறார்கள்?
ஆனால், இதையெல்லாம் சரி செய்யாமல், தனியார் பள்ளிகளுக்கு தாராளமாக கொடுத்துவிட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது, அதனால் ஆசிரியர்களை குறைக்கிறோம் என்றால் என்ன நியாயம்? தமிழ்நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேலே இருந்த அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிட்டது. மறுபக்கம் தனியார் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் குறித்து எவ்வளவு புகார்கள் வருகிறது. எந்தப் பள்ளியாக இருந்தாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தானே வருகிறது. எத்தனை பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்கள்? செய்ய மாட்டார்கள். காரணம், பணத்தைக் கொடுத்து அதிகாரிகளைச் சரிக்கட்டி விடுகிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள். இதுமட்டுமல்ல, பெரும்பாலான தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசியல்வாதிகள்தான் நடத்துகிறார்கள். அதனாலும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை.