No menu items!

பொய்க்கால் குதிரை  – சினிமா விமர்சனம்

பொய்க்கால் குதிரை  – சினிமா விமர்சனம்

ஹீரோ விபத்தில் கால் ஒன்றை இழந்துவிடுகிறார். அவரது மகளுக்கு இதயக்கோளாறும் இருக்கிறது. இதய அறுவைச் சிகிச்சைக்கு 70 லட்சம் தேவை. இதுதான் கதையின் பின்னணி.

பணத்திற்காக ஒரு குழந்தையை கடத்த ஹீரோ திட்டமிட, அந்த குழந்தையை வேறு யாரோ கடத்திவிட, பிறகு ஹீரோவே கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடித்து கொடுப்பதால் அவருக்கு தேவையான பணம் கிடைத்துவிடுகிறது’ இதுதான் ‘பொய்க்கால் குதிரை’யின் ஒன்லைன்.

பொதுவாக  படங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நடித்து வரும் பிரபு தேவாவை ப்ரொதெஸ்டிக் காலுடன் நொண்டி நொண்டி நடப்பதைப் பார்க்கும் போதே அவர் மீது ஒரு பரிதாபம் வந்துவிடுகிறது. அந்த கதாபாத்திரம் மீதான பரிதாபத்தை அவரும் தனது நடிப்பின் மூலம் தக்க வைத்திருக்கிறார்.

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வரலஷ்மி சரத்குமாரை கோபத்தில் சிடுசிடுவென கொந்தளிக்கும் ஒரு மனித எரிமலையாகவே காட்டி வருகிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் கொந்தளிக்கவிட்டு, ரொம்பவே பதட்டப்பட வைத்திருக்கிறார்கள். வரலஷ்மி கதாபாத்திர தேர்வுகளில் கவனம் செலுத்தினால் நல்லது. இல்லையென்றால் யாரிடமாவது கோபப்பட வேண்டுமா, அதட்ட வேண்டுமா கூப்பிடு வரலஷ்மியை என்று ’ஜூனியர் சொர்ணா அக்காவாக’ முத்திரை குத்தப்பட வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

பிரகாஷ் ராஜூக்கு இரண்டே காட்சிகள்தான். பிரபு தேவாவின் மகளாக வரும் ஆலியா. செம க்யூட். அடுத்து விஜய் அஜீத் படங்களில் மகளாக நடிக்க வாய்ப்புகள் தேடி வரலாம். ரெய்ஸா வில்சனா என்று அவரை சட்டென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து அவருக்கு நடிக்க வாய்ப்புகளும் இல்லை. ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போல வந்து போகிறார். இதே போல் இன்னும் ஒரு படம் பண்ணினால் போதும், ரெய்ஸாவுக்கு வாய்ப்புகள் நைசா குறைந்துவிடும். அடுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நண்டு ஜெகன் அலட்டவில்லை. கொகேன் மிரட்டவில்லை.

பிரபு தேவா என்றதுமே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் டான்ஸ் மூவ்மெண்ட்களை அனாயசமாக ஆடும் அவரது நீளமான கால்கள்தான் நினைவுக்கு வரும். அப்பேர்பட்ட பிரபு தேவாவுக்கு படத்தில் ஒரே கால்தான் என்கிற கான்செப்ட் நம்மை ஆர்வத்தோடு படம் பார்க்க வைக்கிறது. அவர் ஒற்றைக் காலுடன் ஆடும் வேகமும், சண்டைக்காட்சியில் புரட்டி எடுக்கும் லாவகமும் அசத்தல்.

ஆனால் ’ப்ரொதெஸ்டிக் கால்’ கான்செப்ட் கதைக்கோ, திரைக்கதைக்கோ வேறு எதற்கும் பயன்படவில்லை. பிரபு தேவா கதாபாத்திரம் இரண்டு கால்களுடன் வழக்கம் போல நடித்திருந்தாலும் இதே உணர்வுதான் இருந்திருக்கும். பொய்க்கால் குதிரை’ என்று டைட்டில் வைத்ததற்காகவே பிரபு தேவாவை படம் முழுக்க நொண்டி நொண்டி நடக்க விட்டார்களா என்று படம் முடிந்தபின் யோசிக்க தோன்றுகிறது.

இசை இமான் தானா என்று நம்பமுடியவில்லை. அநேகமாக அவரும் இந்த ‘பொய்க்கால் குதிரைக்கு’ ‘பொய் கைகளால்’ ட்யூன் போட்டிருப்பார் போல. அதிக இரைச்சல். இமானின் மியூசிக்கல் மிஸ்ஸிங்.

படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்கள் இருக்க வேண்டுமென நினைப்பது நியாயமானதுதான். அதற்காக இப்படியா. ட்விஸ்ட் ட்விஸ்ட் என வைக்க, படம் பார்க்கும் நமக்கு தலைச் சுற்றுகிறது. கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, கொல்லிமலை என ஒட்டுமொத்த மலைப்பிரதேசங்களில் இருக்கும் ஹேர் பின் பென்ட்களின் எண்ணிக்கையை விட ஏகத்திற்கும் அதிகமிருக்கிறது. இதனால் இயக்குநர் சொல்ல வரும் கதையை ஒரு பார்வையாளராக நம்மால் பின் தொடர முடியவில்லை.

க்ளைமாக்ஸில் வில்லன் பேசுவதை வில்லனின் மகள் கேட்க வேண்டுமென ஒரு வாரத்திற்கு முன்பாகவே ப்ளான் பண்ணி, சரியான டைமிங்கில் கட்டிப்போட்டிருக்கும் அந்த சிறுமியை கட்டு அவிழ்த்து விடுவதை எல்லாம் சாணக்கியத்தனமாக காட்டுவது எல்லாம்  இந்த பூலோகத்தில் யாருமே யோசித்து பார்க்கமுடியாத ட்விஸ்ட்.

இது போதாது என்று இரண்டாம் பாகத்திற்கும் ஒரு துண்டைப் போட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் சன்தோஷ். அநேகமாக இந்த ’பொய்க்கால் குதிரை’ உதைக்கும் உதையில், அடுத்தக்கட்ட பயணம் நன்றாக அமையும் என்று நம்புவோமாக.

      முதல்பாதியில் பாசம் & சென்டின்மெண்ட், இரண்டாம் பாதியில் பணம் & செட்டில்மெண்ட். அவ்வளவுதான் படம்.

’பொய்க்கால் குதிரை’ – நன்றாகவே உதைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...