அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை தொடர்பான மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடக் கோரி, ஓபிஎஸ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கடந்த 29-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் எழுத்துப்பூர்வ நகல் வெளியாகியுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து மனுக்களையும் மீண்டும் விசாரித்து, உயர்நீதிமன்றம் உத்தரவுகளை வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், “பொதுக்குழு நடைபெற வேண்டுமா, கூடாதா என கடந்த 6-ம் தேதி உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், தங்கள் தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்துகொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்” என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்’ எனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 6 ஈர நிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் ஈரநில அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் (கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் & உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்) இன்று ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
ராம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். இயற்கை வளங்களை பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ராம்சர் உடன்படிக்கையின் குறிக்கோளாகும். ராம்சர் அங்கீகாரம் என்பது தேசிய மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பிற்கும், இயற்கை வளங்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஈரநிலங்களை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான நடப்பாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை, கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதிபெற்ற மாணவர்களின் விவரங்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகளை முடித்து, கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் நாளை கலந்தாய்வு தொடங்க உள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டக்கூடாது: சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விமான நிலையம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டிடங்களை இடிப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு, விமான நிலையம் அமைப்பதற்குத் தானே நீர்நிலைகளை அழிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்? செயற்கையாக உருவாக்கப்பட்ட வணிக வளாகங்களை விட, உயிர்கள் வாழ உணவளிக்கும் விளைநிலங்கள் மதிப்பில் குறைந்தவை என்ற முடிவுக்கு அரசு வந்தது எப்படி?
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விளைநிலங்களோ, நீர்நிலைகளோ, வீடுகளோ இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் பதக்க நம்பிக்கை பி.வி. சிந்து மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் நபாஹா உடன் மோதினார். இந்த போட்டியில் சிந்து 21-4, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.