தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் 2 லட்சம் கனஅடி நீர் வருவதால் மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதி, குமாரபாளையம் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்க வருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் டிராக்டர், வேளாண் கருவிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு சட்டசபையில் சமர்பிக்கப்பட்ட 2021-22ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், “விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைக் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தினை, நடப்பாண்டில் வலுப்படுத்துவதற்காக, 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்துக் கலப்பைகள், 120 கேஜ் வீல்கள், நவீன முறையில் பூச்சி மருந்துகள் தெளிக்க 4 ட்ரோன்கள் ஆகியவை 23 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், வேளாண்மைப் பொறியியல் துறையால் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், கொத்து கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள், கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாணவி தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது யார்? போலீஸார் தீவிர விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13-ம் தேதி மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இதனையொட்டி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, மாணவி உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பறையில் அவர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் செல்லும் வீடியோவும் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது மாணவி இறந்ததற்கு பிறகு கடந்த 13-ஆம் தேதி பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் மூன்று பெண்கள் மாணவியை தூக்கிச் செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோக்கள் பள்ளி சார்ந்த நபர்களால் வெளியிடப்பட்டனவா அல்லது பள்ளி வளாகம் சூறையாடப்பட்ட நாள் அன்று அங்கிருந்து திருடி செல்லப்பட்டதாக சொல்லப்படும் ஹார்ட் டிஸ்கில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவை அதிர வைத்த குஜராத் IELTS தேர்வு மோசடி
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் IELTS என்று அழைக்கப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதன்படி, குஜராத் மாநிலத்தில் தேர்வு எழுதி IELTS தேர்வில் 70%க்கு மேல் மதிப்பெண் பெற்று கனடா சென்ற 6 பேர், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடம் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியவில்லை. IELTS தேர்வில் 70%க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தும் ஆங்கிலத்தில் பேச தெரியாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் குஜராத் மாநிலத்தில் IELTS தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பெரும்பாலானோர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும், ஒவ்வொரு மாணவரும் தலா ரூ.14 லட்சம் கொடுத்து IELTS சான்றிதழை முறைகேடாக பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் குஜராத்தை சேர்ந்த 950 மாணவர்கள் ஆங்கில தகுதி தேர்வில் தேர்வானதாக மோசடியாக சான்றிதழ் பெற்றதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த 950 பேரும் அமெரிக்கா அல்லது கனடாவில் இருக்கலாம் என கருதப்படுவதால் அவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தைவான் கடல்பரப்பில் போர் பதற்றம்: அமெரிக்க – சீன கப்பல்கள் முற்றுகை
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் வந்து சென்றார். இதையடுத்து சீனா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவானைச் சுற்றி அமெரிக்க, சீன போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தைவான் கடல்பரப்பை சுற்றி சீனா ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி 12 மணி வரை சீன ராணுவம் பயிற்சியை மேற்கொள்கிறது என்று தைவான் அரசு தொலைகாட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் தைவானும் ராணுவத்தை ஆயத்த நிலையில் வைக்கும். இருப்பினும் போரை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் சிறிது நேரம் முடக்கினர். நான்சி பெலோசியின் வருகை உறுதியானது தொட்டே தைவான் மீது சைபர் போர் தொடங்கிவிட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.