ராஜ்யசபா எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்ற பி.டி.உஷா, நேற்று முதல் முறையாக அவையில் பேசியிருக்கிறார். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் ஊக்க மருந்து பிரச்சினைக்கு இந்த உரையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் பி.டி.உஷா. தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய நிலையில் பி.டி.உஷாவின் இந்த பேச்சு அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது.
ஊக்க மருந்து என்றால் என்ன? இந்திய விளையாட்டு உலகை அது எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்…
விளையாட்டில் ஈடுபடும்போது தங்கள் உடல் அதிகம் களைப்படையாமல் இருப்பதற்காக வீரர்கள் உட்கொள்ளும் மருந்து, ஊக்க மருந்து என்று அழைக்கப்படுகிறது. தசையின் வலுவை அதிகரிப்பது அல்லது தசை களைப்படைவதை மட்டுப்படுத்தும் மருந்துகளாக இவை உள்ளன. அன்பாலிக் ஸ்டெராய்டுகள், ஆண் ஹார்மோன் டெஸ்டொஸ்டெரோனின் செயற்கை மாதிரிகள் ஆகியவை இந்த மருந்தில் கலந்திருக்கும். இது உடல் பயிற்சி அல்லது உடல் வேலைப் பளுவினால் ஏற்படும் சோர்வையும், அழற்சியையும் போக்கும் என்று சொல்கிறார்கள்.
விளையாட்டு வீரர்கள் இத்தகைய மருத்துகளை பயன்படுத்துவதை தடுப்பதற்காக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு கழகம் (WADA – World Anti-Doping Agency) 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
போட்டிகளின்போது வீரர்களின் சிறுநீர், ரத்தம் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து, அவர்கள் ஊக்க மருந்துகளை பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது இந்த அமைப்பின் முக்கிய வேலையாக இருக்கிறது. இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகளின் விளையாட்டு அமைப்புகள் நிதியளித்து வருகின்றன. சர்வதேச அளவில் இயங்கும் இந்த அமைப்பைப் போல தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (National Anti-Doping Agency (NADA)) இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு போட்டிகளில் வீரர்களிடையே ஊக்கமருந்து சோதனையை நடத்தி வருகின்றன.
இந்த அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்ட பிறகு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஊக்க மருந்தை பயன்படுத்திய வீரர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு, போட்டிகளில் அவர்கள் வென்ற பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகிலேயே ஊக்கமருந்து சோதனையில் அதிகம் சிக்கிய வீரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 152 வீரர்கள் இந்த சோதனையில் சிக்கியுள்ளனர். இந்த பட்டியலில் 167 வீரர்களுடன் ரஷ்யா முதல் இடத்திலும், 157 வீரர்களுடன் இத்தாலி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவைச் சேந்த குஞ்சராணி தேவி, ரஞ்சித் மகேஸ்வரி, மன்தீப் கவுர் போன்ற பிரபலமான விளையாட்டு வீரர்கள் பலர் ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊக்க மருந்தைப் பற்ரிய போதிய விளக்கங்கள் இல்லாததாலும், எதெல்லாம் ஊக்க மருந்து என்று தெரியாததாலும் தாங்கள் அவற்றை பயன்படுத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பட்டியலில் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு வீரர்களிடையே உள்ள அறியாமைதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள், குறிப்பாக பளு தூக்கும் போட்டி, மல்யுத்தம் போன்ற போட்டிகளில் ஈடுபடும் வீரர்கள் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உடல் வலுவை அதிகமாக்குவதற்காக அவர்கள் பயன்படுத்தும் சில பொருட்களில் அவர்களுக்கு அறியாமலேயே ஊக்க மருந்துகள் கலந்துள்ளன. இதனால்தான் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள் என்பது விளையாட்டு அமைப்பினரின் முக்கிய வாதமாக உள்ளது.
நம் நாட்டில் சிறிய விளையாட்டு போட்டிகளில் ஊக்க மருந்து சோதனைகள் நடத்தப்படுவதில்லை. அதனால் வீரர்களுக்கு ஆரம்பத்தில் இந்த சோதனைகளைப் பற்றி பெரிதாக எதுவும் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் வளர்ச்சியடைந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும்போது, முன்பு பயன்படுத்திய சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் சிக்கிக் கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, அவர் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் சர்வதேச போட்டிகளில் ஆட அவருக்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இது ஊக்க மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில்தான் நேற்று ராஜ்யசபாவில் ஊக்க மருந்துகளைப் பற்றி பேசியுள்ளார் பி.டி.உஷா. தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பி.டி.உஷா, “அனைத்து விளையாட்டு போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும். மேலும் காயங்களிலிருந்து வீரர்கள் மீண்டு வர விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்டெராய்டு சோதனையில் சிக்கிய மற்றும் ஊக்கமருந்துக்காக தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெராய்டுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு எதிராக தகுந்த தடை விதிக்க வேண்டும். அதேசமயம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும்” என்று கூறியுள்ளார்.