அய்மான் அல்-ஜவாஹிரி. இந்த ஞாயிற்றுக் கிழமை அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட உலகை அச்சுறுத்திய தீவிரவாதி. ஒசாமா பின் லேடனின் ஆலோசகராக இருந்தவர். பின் லேடனுக்குப் பிறகு அல் குவைதா தீவிரவாத அமைப்பை வழிநடத்தியவர்.
2001 செப்டம்பர் 11 அமெரிக்கா மறக்க முடியாத நாள். ஒசாமா பின்லேடனின் அல் குவைதா இயக்கம் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியது. இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. அமெரிக்க ராணுவ மையம் தாக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்கா மிரண்டது. உலகம் அரண்டது. அல்குவைதா குறி வைக்கப்பட்டது. அல்குவைதாவின் தலைவர் பின்லேடன் உலகெங்கும் தேடப்பட்டார்.
சுமார் 10 வருடங்கள் அமெரிக்காவின் தீவிரத் தேடலுக்குப் பிறகு 2011ல் பாகிஸ்தானின் அபோடாபாட்டில் ஒளிந்திருந்த பின் லேடன் அமெரிக்கா படைகளால் நள்ளிரவு அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அந்த சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் கழித்து பின் லேடனின் வலதுகரமாக செயல்பட்ட ஜவாஹிரி கொல்லப்பட்டிருக்கிறார்.
உலகின் மிகப் பெரிய வல்லரசாக அமெரிக்கா இருக்கிறது. அதன் பண பலமும் படை பலமும் உளவு பலமும் வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது. ஆனாலும் அல்குவைதா தீவிரவாதிகளையும் அவர்களின் தலைவர்களையும் வேட்டையாடுவதில் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட சிரமங்கள். ஆஃப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த போதும் அவர்களால் அல்குவைதா தலைவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
மிகுந்த சிரமத்துக்குப் பிறகே பின் லேடன் தங்கியிருந்த அபோடாபாட் வீட்டை அடையாளம் கண்டுபிடித்தார்கள். அந்த வீட்டை பல மாதங்கள் நோட்டமிட்டு, உள்ளிருப்பவர்கள் குறித்து முழுமையாக அறிந்துக் கொண்டு, உள்ளே உயரமாய் ஒருவர் இருக்கிறார் (பின் லேடன் உயரமானவர்) என்பதை தெரிந்துக் கொண்டு, ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றார்கள்.
இத்தனை சிரமத்துக்கு காரணம் பாகிஸ்தானும் அதன் உளவுத் துறையும். அமெரிக்காவுக்கு இணக்கமான நாடாக பாகிஸ்தான் இருந்த போதிலும் அதன் உளவுத் துறையும் ராணுவமும் தலிபான்களுக்கும் அல்குவைதாவுக்கும் சாதகமாகவே இருந்தன.
மேற்கத்திய நாடுகளுக்கு உளவாளிகளை அனுப்பி உளவு பார்ப்பது போல் பாகிஸ்தானுக்குள் தன்னுடைய உளவாளிகளை அனுப்ப அமெரிக்காவால் முடியவில்லை. உருவம், மொழி என அனைத்திலும் பிரச்சினை. அதனால் அந்நாட்டு உளவாளிகளையே பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
ஆஃப்கானிஸ்தான் மலைப் பகுதிகளிலும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளிலும் தீவிரவாதிகள் மறைந்திருக்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அவர்கள் உள்ளூர் மக்களுடன் அவர்கள் மொழி பேசி அவர்கள் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு எளிதில் கலந்துவிட முடியும். இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
பின் லேடன் வீட்டை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தொடர்ந்து உள்ளூர் ஆசாமிகள் மூலம் கண்காணித்த போதும் ஒரு முறை கூட பின்லேடன் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பின் லேடன் வீட்டில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. ஆட்கள் மூலமே தகவல் பறிமாற்றம் நடந்தது. அதுவும் மிக குறைவாக, அரிதாக. பின்லேடன் வீட்டில் ஒரே ஒரு டிவி. அதுதான் அவருக்கும் வெளி உலகுக்கும் உள்ள தொடர்பு. ஆனால் அந்த வீட்டில் நடக்கும் அசைவுகளை வைத்து உள்ளிருப்பது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்து தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றன அமெரிக்கப் படைகள்.
இந்த முறையும் அப்படியே.
2022 ஜனவரி மாதம் ஆஃப்கானிஸ்தான் காபூல் நகரில் ஜவாஹிரி குடும்பம் குடி வந்திருக்கிறது என்ற தகவல் அமெரிக்க உளவுப் படைக்கு கிடைத்தது.
2021 ஆகஸ்ட் மாதம் ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. ஆஃப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அமெரிக்க படைகள் வெளியேறியதும் அல்குவைதா தீவிரவாத இயக்கத்தினர் ஆஃப்கானிஸ்தானுக்குள் வரத் தொடங்கினர்.
அமெரிக்க உளவுத் துறையினர் கண்காணிக்க தொடங்கினர். அந்த கண்காணிப்பில் சிக்கியது ஜவாஹிரியின் குடும்பம். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அந்த வீட்டை கண்காணித்தனர். ஏப்ரல் மாத இறுதியில் ஜாவஹிரி அங்கிருக்கிறார் என்பது உறுதிபடுத்தப்பட்டது. இந்தத் தகவல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பின்லேடன் செய்யாத ஒரு செயலை ஜவாஹிரி செய்தார். பாகிஸ்தானில் அபோடாபாட் வீட்டில் ஒளிந்திருந்த பின் லேடன் வெளியில் வந்ததே இல்லை. தன் இருப்பைக் காட்டிக் கொண்டதில்லை. ஆனால் காபூல் நகர் மறைவிட வீட்டில் இருந்த ஜாவஹிரி தினமும் தன் வீட்டு பால்கனியில் உலாவினார். இதுதான் அவருக்கு மரண அடியாக அமைந்தது.
வீட்டின் அமைப்பு முழுமையாக ஆராயப்பட்டது. வீட்டிலிருப்பவர்கள் எண்ணிக்கை எடுக்கப்பட்டது. தாக்குதலுக்கான நேரம் குறிக்கப்பட்டது. ஜூலை 25ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜவாஹிரியைக் கொல்ல அனுமதி கொடுத்தார். ஜூலை 30ஆம் தேதி அமெரிக்காவின் ஹெல்ஃபையர் ஏவுகணை (hellfire missile) தாக்குதலில் ஜவாஹிரி கொல்லப்பட்டார்.
இந்த ஹெல்ஃபையர் ஏவுகணை மற்ற ஏவுகணைகளிலிருந்து வித்தியாசப்பட்டது. இதன் செல்லப் பெயர் நிஞ்சா ஏவுகணை. இந்த ஏவுகணை வெடித்து சிதறாது. இலக்கை மட்டும் தாக்கும். மற்ற பகுதிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தாது. ஏவுகணையில் அதி வலுவான, கூர்மையான உலோக பிளேடுகள் இருக்கும். இரும்பு, கான்கிரீட் என எந்த இலக்கையும் துளைத்துச் சென்று தாக்கும். காருக்குள் உட்கார்ந்திருப்பவரை இலக்காக வைத்தால் காரை வெட்டி உள்ளே சென்று ஆசாமியை சீவி கொன்றுவிடும்.
ஆனால் அத்தனை சிரமத்தை ஜவாஹிரி கொடுக்கவில்லை. அழகாய் பால்கனியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தார். ஐந்தடி நீளம் 45 கிலோ எடையுள்ள நிஞ்சா ஏவுகணை அவர் கதையை சட்டென்று முடித்தது. வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ஜவாஹிரியை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்தது பாகிஸ்தான் என்றும் தகவல்கள் சொல்லுகின்றன. பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார சிக்கலில் இருக்கிறது. அதற்கு இப்போது பல பில்லியன் டாலர் நிதி தேவை. அதற்கு அமெரிக்காவின் உதவி வேண்டும். அதற்காக ஜவாஹிரியைக் காட்டிக் கொடுத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட ஜவாஹிரி அறுவை சிகிச்சை மருத்துவர். கெட்டிக்கார மூளைக்காரர். நல்லவைகளுக்கு துணை நிற்பதற்கு பதில் நாச வேலைகளுக்கு காரணமாக இருந்தவர். அவர் தலைக்கு 2.5 கோடி டாலர் பரிசாக கொடுப்பதாக அமெரிக்க அறிவித்திருந்தது. அவர் கொல்லப்பட்டதால் அல் குவைதாவும் அதன் நாச வேலைகளும் நின்றுவிடுமா என்றால் இல்லை என்றே கவலையுடன் கூற வேண்டியிருக்கிறது.
2011ல் பின்லேடன் கொல்லப்பட்டப் பிறகு அல்குவைதா தனது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டது. அதன் தலைவர்கள் ஓடி ஒளிவதிலேயே கவனம் செலுத்தினர். அது மட்டுமில்லாமல் அல்குவைதாவைத் தாண்டி ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாகி அல்குவைதாவைத் தாண்டி நிற்கின்றன.