ராப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவின் வரிகளில் பாடகி தீ மற்றும் அறிவு ஆகியோர் குரலில் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் கடந்த ஆண்டு ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக பாடல் வரிகளை சமூகவலைத்தளங்களிலும் பல மேடைகளிலும் பலரும் பாராட்டி அறிவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இசைக்குப் பிரபலமான ’’Rolling Stone India’’ ஆங்கில வார இதழில் எஞ்சாமி பாடலை பாராட்டும் வகையில் பதிவொன்றும் வெளியிடப்பட்டது. அந்த இதழ் அட்டை படத்தில் பாடகி தீ புகைப்படம் மட்டும் இடைப்பெற்றது. பாடலை பாடிய தெருக்குரல் அறிவின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெறாதது அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது.
கடந்த 28ஆம் தேதி சென்னையில் நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இந்தப் பாடலை பாடகி தீ மற்றும் மாரியம்மாள் இணைந்து பாடினர். அப்போதும் அறிவின் பெயர் இடம்பெறாததும் அறிவு கலந்துக்கொள்ளாததும் மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. இந்த முறை சற்று தீவிரமாக சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பாடலை எழுதியது, பாடியது, இசையமைத்தது, நடித்தது என எல்லாமே செய்தது நான்தான். யாரும் எனக்கு இசையையோ, பாடல் வரியையோ தரவில்லை. இப்போது இந்த பாடல் பிரபலமாக இருப்பதற்கு கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் இரவு பகல் பாராமல் கண் விழித்து தூங்காமல் உழைத்திருக்கிறேன்” என பாடல் தொடர்பான பல விஷயங்களை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அறிவின் இந்தப் பதிவு சர்ச்சையை பொதுவெளிக்கு எடுத்துச் சென்றது. பலரும் சந்தோஷ் நாராயணனுக்கும், தீ-க்கும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அளித்திருக்கும் விளக்கத்தில், “எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் உடனான எனது பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து நான், தீ, அறிவு ஒருவர் மீது ஒருவர் வைத்த மதிப்புடன் இதில் இணைந்து பணியாற்றினோம்.
பாடலை தீயும், அறிவும் பாடினார்கள், பாடல் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் இருவரும் பங்கெடுத்தார்கள். இதில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்கினார். பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன். அறிவு பாடிய வரிகளுக்கான மெட்டையும் நான் தான் உருவாக்கி இருந்தேன். இப்பாடலின் வரிகளுக்கு அறிவுடன் இணைந்து நிறைய நேரம் செலவிட்டேன்.
பாடலில் இடம்பெற்றிருந்த ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணம் பகுதி சுற்று வட்டாரத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் உதவினர். அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளித்த அறிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ’எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை ஒட்டு மொத்தமாக முடிக்க நாங்கள் 30 மணி நேரம் எடுத்துக் கொண்டோம். பாடல் பதிவு செய்யும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்பாடலின் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் நான், தீ, அறிவு சமமாகவே பங்கிட்டு கொண்டோம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் நிகழ்வில் அமெரிக்கப் பயணம் காரணமாக அறிவு பங்கேற்க இயலாது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம். நான் எப்போதும் அறிவை சிறந்த கலைஞர் என்றே உணர்கிறேன். நான் எப்போதும் எனது படைப்பு தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காவே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.
இம்மண்ணின் கலைக்கும், கலைஞர்களுக்கும் என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது. ’எஞ்சாயி எஞ்சாமி’ குறித்து இப்பாடலில் பங்கெடுத்த கலைஞர்கள், என்னிடம் தனிப்பட்ட முறையிலும், பொது வெளியிலும் விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிலுக்குப் பிறகும் சர்ச்சை அடங்கவில்லை. தற்போது அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் அறிவு. அவர் சென்னை திரும்பியதும் இந்த சர்ச்சையில் எது உண்மை என்பது வெளிப்படும் என்பது தெரிகிறது.