தமிழ்நாட்டில் உள்ள வனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், “தமிழ்நாட்டில் இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை யாரும் நடக்கூடாது. இந்த மரங்களை நடுவதற்கு தடை விதிக்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
ஏன் இந்த தடை?
‘யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சி காலி செய்பவை. நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு எடுத்துவிடுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் இதன் அருகே புல் பூண்டு உட்பட மற்ற மர வகைகளை வளர விடாது. இது சுற்றுச் சூழலுக்கு உகந்ததல்ல’ என்கிறார்கள், இந்த தடையை ஆதரிப்பவர்கள். இதே காரணத்துக்காக சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யூகலிப்டஸ், நமது வனப்பகுதியைச் சேர்ந்த மரமல்ல. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1843ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘மிர்டேசியே’ (Myrtaceae) குடும்ப வகையைச் சேர்ந்த இது ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. ஆங்கிலேயர்களால் எரிபொருள் சோதனைக்காகத்தான் முதலில் இங்கே கொண்டுவரப்பட்டது என்றாலும் பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பயிரிடுவது அதிகரித்தது. காகிதம், காகிதக்கூழ், துகள் அட்டைகள், மொத்த அட்டைகள் தயாரிப்புக்கும் எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கவும், கட்டுமானப் பணிகளுக்கும், இரயில்வே தண்டவாளக் கட்டைகள், பாலங்கள் கட்டுவதற்கும் இப்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்காகவே பயிரப்படுகிறது. தமிழ்நாட்டைவிட ஆந்திராவில் யூகலிப்டஸ் பயிரிடுவது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து வரும், ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறனுடன் பேசினோம். “இந்த தடை வரவேற்கப்பட வேண்டியது. யூகலிப்டஸ் மரங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. எல்லா வகைகளுமே தமிழ்நாட்டின் சூழலுக்கு ஆபத்தானவைதான்.
காடு என்பது பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்ற இடம். பல்லுயிர் பெருக்கத்தாலே தானும் வளம் பெறக்கூடியது. தரிசு நிலத்தில் வனம் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் சிறு ஊக்கம் கொடுத்துவிட்டு அதன்பின்னர் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலே போதும். சூழலுக்கு ஏற்ப காடு தானாகவே உருவாகிவிடும். பாண்டிச்சேரி ஆரோவில் வனத்தில் தொடக்கத்தில் மனிதர்களால் நடப்பட்டது 200 வகை மரங்கள்தான். இப்போது அங்கே கிட்டத்தட்ட 1000 வகை மரங்கள் உள்ளன.
இதுபோல் வனம் உருவாக்க வேண்டும் என்றால், நமது சூழலுக்கு ஏற்ற மரங்களை வைத்து ஊக்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதுதான் அரசு செய்யவேண்டியது. ஆனால், நம் வனத்துறை என்ன செய்கிறது? காட்டில் ஒரே வகை மரங்கள் வளர்த்து பின்னர் அதனை வெட்டி விற்பனை செய்கிறது. ஒரே வகை மரங்களாக வைப்பது பல்லுயிர்ப் பெருக்கத்தை தடை செய்யும். இது காட்டை அழிக்கும் வியாபாரம். இதனை ஒரு அரசாங்கமே செய்யக்கூடாது.
காடு வளர்க்கிறோம் என்று சொல்லித்தான் யூகலிப்டஸ் மரங்களை வைக்கிறது, வனத்துறை. யூகலிப்டஸ் அதிக மழைப் பொழிவு இருக்கும் இடங்களில் வைக்க வேண்டிய மரம். காரணம் யூகலிப்டஸ் அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ளக்கூடியது. நிலத்தடி நீரை உறிஞ்சி தண்டில் அதை தேக்கி வைத்துக்கொள்ளும். மேலும், அவற்றின் இலைகள் கடினத்தன்மை கொண்டதால் விரைவில் மக்காது. இவற்றால் யூகலிப்டஸ் இருக்கிற இடத்தில் மற்ற மரங்களை வளரவிடாது. எனவே, புதிதாக யூகலிப்டஸ் வைக்க தடை செய்துள்ளதுடன், ஏற்கெனவே உள்ள யூகலிப்டஸ் மரங்களையும் வெட்டி அழிக்க வேண்டும்” என்கிறார்.
ஆனால், “யூகலிப்டஸ் மரங்கள் மண் வளத்தையும் நீரையும் மாசுபடுத்தும்; அதிக ஆழம் வரை சென்று நீரை உறிஞ்சும் என்பது எந்த அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லாத கட்டுக்கதை” என்று மறுக்கிறார் வேளாண் ஆய்வாளர் ஆர்.எஸ். பிரபு.
தொடர்ந்து, “யூகலிப்டஸ் எவ்வளவு நீரை எடுத்துக்கொள்ளும் என்பதை தெரிந்துகொள்ள நாம் நீரியல் சுழற்சி (Hydrological Cycle) பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இது மிகவும் பெரிய சப்ஜக்ட். எனவே, தேவையான அடிப்படைகளை மட்டும் பார்ப்போம்.
மழையாக வரும் நீரானது ஆவியாகி மீண்டும் வளிமண்டலத்தில் நுழைகிறது. இதன்படி, தாவரங்களால் உறிஞ்சப்படும் நீரும் இலைகளின் மேல் உள்ள நுண் துளைகளான ஸ்டொமேட்டா (Stomata) வழியாக பகல்நேரத்தில் ஆவியாகிக்கொண்டே இருக்கும். இந்த நிகழ்வு ஆவியுயிர்ப்பு (Transpiration) எனப்படுகிறது. இது இலைப்பரப்பின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதோடு, தொடர்ந்து நீரை இழுப்பதால் மண்ணிலுள்ள சத்துக்கள் தாவரத்தை வந்தடையவும் உதவுகிறது.
இந்நிலையில், தாவரத்துக்குத் தேவையான நீரைத் தொடர்ந்து தருமளவுக்கு மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆவியுயிர்ப்பு மூலமாக நிலத்திற்கு நீரிழப்பு ஏற்படுகையில் மழையாலோ பாசனத்தாலோ நீரானது மீண்டும் மண்ணுக்கு கிடைத்துவிடும். மழையாலோ பாசனத்தாலோ நீர் கிடைக்காதபோது மண்ணுக்குள் வறட்சி ஏற்படும். இருந்தாலும் ஸ்டொமேட்டாக்கள் தொடர்ந்து நீரை வெளியேற்றி இலைப் பரப்பின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வேலையை செய்யும். (மனித உடலின் வியர்வை சுரப்பிகள் செய்யும் வேலை போன்றது இது.) இப்படி, இலைகள் வழியாக ஆவியாகி வெளியேற்றப்படும் நீரின் அளவுக்கு வேர் வழியாக மண்ணில் இருந்து உறிஞ்சப்படும் நீர் இல்லாதபோது செடி வாடத் தொடங்கும்.
இந்தவகையில் தாவரங்கள் வளரும் சூழலைக்கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். 1) நீர்த் தாவரங்கள் (Hydrophytes) – நீர் அதிகமாக உள்ள சூழலில் வளர்வன. 2) மீசோபைட்டுகள் (Mesophytes) – அதிக நீரும் அதிக வறட்சியும் இல்லாத, போதுமான நீர் உள்ள பகுதிகளில் வளர்வன. 3) ஜெரோஃபைட் (Xerophyte) – வறண்டநில / பாலைவனச் சூழலில் வளர்வன.
தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் அதிக ஆவியுயிர்ப்பு தன்மை கொண்ட தாவர இனங்களை வளர்ப்பதன் மூலம் நீரை அப்புறப்படுத்துவது உயிர் வடிகால் (Bio-Drainage) எனப்படுகிறது. யூகலிப்டஸ் மரம் தொடக்கத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் உயிர் வடிகாலாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள், யூகலிப்டஸ் அதிக நீரை உறிஞ்சுபவை அல்ல என்று ‘நிறுவுகின்றன’.
வேளாண் ஆய்வு முடிவுகள் இப்படியிருக்க, யூகலிப்டஸ் வேர்கள் 20 அடி ஆழம் வரைக்கும் சென்று நீரை உறிஞ்சும் என்று எந்த ஆய்வும் ஆதாரமும் இல்லாமல் திடீரென யாரோ சொல்லி, அது வேகமாக பரவி, தடை வரைக்கும் வந்துள்ளது. இதுபோல் சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரையும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் என்பதும் எந்த ஆதாரமும் இல்லாத கதைதான்.
யூகலிப்டஸ், சீமைக் கருவேல மரங்கள் அடியில் பூல், பூண்டு முளைக்காது என்பதை இதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள். புளிய மரத்தின் அடியிலும் கூடத்தான் எந்த புல், பூண்டும் முளைக்காது. புளிய மரத்தை தடை செய்ய வேண்டும் என்று ஏன் இதுவரை யாரும் புறப்படவில்லை. காரணம் அதை நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம்.
புளிய மரம் போல் யூகலிப்டஸும் லாபமான மரம்தான். வேளாண் நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் வேலை காரணமாக மிக தூர நகரங்களில் குடியிருக்கும் போது அந்த நிலங்களில் பயிர் செய்யமுடியாமல் சும்மா கிடக்கிறது. தினமும் சென்று பார்க்க தேவையில்லாத தென்னை போன்ற மரங்கள் வைக்கலாம் என்றால் களவு போகாமல் பாதுகாப்பது சிரமம். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு மலை வேம்பு (நிலவேம்பு அல்ல), சவுக்கு, யூகலிப்டஸ் மாதிரியான மர வகைகள் ஏற்ற பயிர். யூகலிப்டஸ் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. பேப்பர் மில்காரர்களே வந்து வெட்டி எடுத்துக்கொள்வார்கள். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இந்த தடை வந்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுக்குள் அன்னிய மரங்கள் எல்லாம் அகற்றப்படும் என்று அரசு சொகிறது. எது அன்னிய மரம், எது நமது மரம் என்று எப்படி வரையறுப்பது? கடந்த 1000 ஆண்டுகள் வரலாற்றை எடுத்தால் கடலை, காப்பி, தேயிலை செடி, வாழை உட்பட பல தாவரங்கள் வெளியில் இருந்து வந்தவைதான். மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் உட்பட நமது வனங்கள் எல்லாம் இயற்கையாக மட்டும் உருவானதில்லை; அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப மனிதர்கள் இடையூறும் சேர்ந்து வளர்ந்தவைதான். இதில்,